வடை செய்வது என்பது பொதுவாக விசேஷ நாட்களில் மட்டுமே செய்யப்படுகிறது. அதிலும் தயிர் வடை என்றால் பலரும் விருப்பமாக உண்பார்கள். இவ்வாறு அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த தயிர் வடை ஹோட்டல்களில் தனிப்பட்ட சுவையில் இருக்கும். அதே சுவையில் வீட்டிலேயும் செய்யலாம். அது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
உளுத்தம்பருப்பு 2 டம்ளர்
தயிர் – ஒரு லிட்டர்
பச்சை மிளகாய் – 3
கொத்தமல்லித் தழை – ஒரு குத்து
தேங்காய் – கால் மூடி
உப்பு – 2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்
எண்ணெய் – கால் லிட்டர்.
செய்முறை: முதலில் 2 டம்ளர் உளுத்தம்பருப்பை எடுத்து 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அதனை கிரைண்டரில் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு லிட்டர் தயிரை நன்றாக கரைத்து வைக்க வேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் கால் மூடி தேங்காயைத் துருவி சேர்க்க வேண்டும்.
பிறகு இதில் சற்று தண்ணீர் விட்டு, பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு இந்த விழுதை தயிருடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் உளுத்த மாவில் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு அடுப்பின் மீது கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி கொஞ்சம் மாவை எடுத்து வடை தட்டி பொரித்து எடுக்க வேண்டும்.
இவ்வாறு சுட்டு எடுத்த வடையை ஒரு பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் மூழ்க வைத்து, உடனே எடுத்து ஏற்கனவே ரெடி செய்து வைத்த தயிரில் போட வேண்டும். இவ்வாறு தயிரில் போட்ட வடையை ஐந்து நிமிடம் ஊறவைத்து பிறகு வேறு தட்டிற்கு மாற்ற வேண்டும்.
அவ்வளவுதான் இந்த வடையை ஒரு தட்டில் வைத்து, அதன் மீது ஓம் பொடி தூவி சாப்பிடக் கொடுத்துப் பாருங்கள். அவ்வளவு அருமையாக இருக்கும். தேவைப்பட்டால் இதில் பெரிய வெங்காயமும் சேர்த்து பரிமாறலாம்...
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.