• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • அசைவ பிரியர்களே! உங்களுக்கான குளிர்காலத்துக்கு ஏற்ற சூப்பரான 4 சிக்கன் ரெசிபீஸ்

அசைவ பிரியர்களே! உங்களுக்கான குளிர்காலத்துக்கு ஏற்ற சூப்பரான 4 சிக்கன் ரெசிபீஸ்

சிக்கன்

சிக்கன்

குளிர்காலத்தில் காரமான, சுறுக்கென்று இருக்கும் உணவுகளை தேடி மனது அலைப்பாயும். சிக்கன் ரெசிப்பிகள் மீது அலாதி பிரியம் ஏற்படும்.

  • Share this:
குளிர்காலத்தில் நிலவும் குளிர் வெப்பநிலை உங்களின் மனதையும், உடலையும் சோர்வாக்கும். அப்போது, சூடான, காரமான உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது, உங்களையறியாமலேயே புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். குறிப்பாக, குளிர்காலத்தில் காரமான, சுறுக்கென்று இருக்கும் உணவுகளை தேடி மனது அலைப்பாயும்.

சிக்கன் ரெசிப்பிகள் மீது அலாதி பிரியம் ஏற்படும். அப்போது, வழக்கம்போல் செய்யும் சிக்கன் ரெசிப்பிகளை விட்டுவிட்டு, புதுமையான ரெசிப்பிகளை சமைத்து சாப்பிடும்போது உங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி கிடைக்கும்.

அந்தமாதிரியான, உங்களின் உணவு ஆசைக்கு தீனிபோடும் அட்டகாசமான 4 ரெசிப்பிக்களை உங்களுக்கு கொண்டு வந்துள்ளோம்.

1. சிக்கன் நூடுல்ஸ் சூப்

தேவையான பொருட்கள்:

நூடுல்ஸ் - 300 கிராம், சிக்கன் - 1 கிலோ, காரட் - 3, கொத்தமல்லி தண்டு - 1 கொத்துஉப்பு - தேவையான அளவு, மிளகு பொடி - தேவையான அளவு, ஆலிவ் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, ஸ்பிரிங் ஆனியன் - 3, பூண்டு - 5 பற்கள், வெங்காயம் - 1, கொத்தமல்லி - கையளவு



செய்முறை : 

சிக்கனை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் மூன்று கிளாஸ் தண்ணீர் சேர்த்து சிக்கனையும், காய்கறிகளையும் வேகவையுங்கள். சுமார் 15 விசில் வரும் வரைக் காத்திருந்து அடுப்பை அணைத்துவிடவும். பின் குக்கரில் இருந்து சிக்கனை மட்டும் தனியாக எடுத்து, ஆலிவ் எண்ணெய்யுடன் மிளகு பொடி சேர்த்துக் கொண்டு 2 - 3 நிமிடங்கள் வதக்கவும். அதனுடன் 2 சிட்டிகை உப்பை சேர்த்துக்கொள்ளவும். கெட்டியான பதம் வந்தவுடன், நூடுல்சை அதனுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். தற்போது குக்கரில் இருக்கும் வேகவைத்த காயகறிகளையும், நீரையும் நூடுல்ஸூடன் சேருங்கள். அளவுக்கு அதிகமாக நூடுல்ஸை வேக வைக்க வேண்டாம். இறுதியாக கொத்தமல்லியை தூவி, கீழே இறக்கி சிக்கன் நூடுல்ஸ் சூப்பை குடும்பத்துடன் சுவையுங்கள்.

2. வெந்தய கீரை சிக்கன்

தேவையான பொருட்கள்:

கோழி கறி – 1/2 கிலோ, வெந்தய கீரை – 2 கப் அளவு, வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 2, இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி, தக்காளி – 2, தயிர் – 2, மேசைக்கரண்டி, மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி, மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி, தனியா தூள் – 2 தேக்கரண்டி, சீரக தூள் – 1/2 தேக்கரண்டி, சோம்பு தூள் – 1/2 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி, சீரகம் – 1/2 தேக்கரண்டி, சோம்பு – 1/2 தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 3 மேசைக்கரண்டி



செய்முறை:

கனமான அடிப்பாகம் கொண்ட கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின், சீரகம், சோம்பு போட்டு தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பச்சை வாசம் போகும் வரை வதக்கி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு கோழி கறி, தயிர், உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். தனியா, சீரகம், மிளகாய், மஞ்சள் சோம்பு தூள்களை சேர்த்து நன்கு கிளறவும். அதனுடன் அரைத்து வாய்த்த தக்காளி மற்றும் தேவையான தண்ணீர் சேர்க்கவும். வறுவல் போல் வேண்டுமானால் தண்ணீரை குறைவாக சேர்த்துக்கொள்ளலாம்.பின்னர் 15 நிமிடங்கள் எண்ணெய் பிரியும் வரை வேகவிடவும். இறுதியாக வெந்தய கீரை, கரம் மசாலா சேர்த்து கிளறவும். ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து சூடாக பரிமாறலாம்.

3. எலுமிச்சை - கொத்தமல்லி சிக்கன்

தேவையான பொருட்கள் :

சிக்கன் – அரை கிலோ, மிளகாய் – 6, தனியா – 1 கை, இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன், கார மிளகாய் பேஸ்ட் – 2 ஸ்பூன், அரிசி மாவு, மைதா மாவு தலா – 2 ஸ்பூன், சீரக தூள் -1/2 ஸ்பூன், கறிவேப்பிலை – 2 கொத்து, கொத்தமல்லி – 1/2 கட்டு, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 1 குழிக்கரண்டி, புளி – 1/2 எலுமிச்சை அளவு



செய்முறை :

கார மிளகாய், தனியாவை தனித்தனியாக ஒன்றும் பாதியாக பொடித்துக் கொள்ளவும். ஒருபாத்திரத்தில் சிக்கனை போட்டு அதில் பொடித்த தனியா, மிளகாய், கார மிளகாய் தூள், அரிசி மாவு, மைதா மாவு, உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகத்தூள், புளி கரைசல் சேர்த்து கிளற சிறிது நேரம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் மிதமான தீயில் வைத்து அதில் சிக்கனை கலவையை போட்டு வேகும் வரை கிளரவும். சிக்கன் வெந்தவுடன் மிளகு தூள் தூவவும். சிறிது நேரம் வைத்து கடைசியாக கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

4. காளான் - சிக்கன் தொக்கு :

தேவையான பொருட்கள் :

சிக்கன் - 1/2 கிலோ, குடைமிளகாய் - 150 கிராம், காளான் - 250 கிராம், சாம்பார் வெங்காயம் - 150 கிராம், பச்சைமிளகாய் - 4, மிளகுத்தூள் இடித்தது - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி, இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 6 பற்கள்



செய்முறை :

சிக்கன் துண்டுகளைச் சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும். குடைமிளகாய், காளானை பொடியாக நறுக்கி கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தை உரித்து கீறிக்கொள்ளவும், பச்சை மிளகாயை இடித்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு தட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயத்தை நன்கு வதக்கவும். பின் அதில் நறுக்கிய குடைமிளகாய், சிக்கன் இவற்றை சேர்த்து வதக்கவும். சிக்கன் முக்கால் பாகம் வெந்ததும் காளாளை போட்டு 5 நிமிடம் வதக்கிய பின்னர் தட்டி வைத்துள்ள மிளகாய், இஞ்சி பூண்டு இவை சேர்த்து வதக்கவும். இவை ஒன்று சேர்ந்து வேகுமளவு நீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் மூடி வைக்கவும். நன்கு வெந்தவுடன் கடைசியாக மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். சுவையான காளான் - சிக்கன் தொக்கு ரெடி.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: