கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் இந்த நோய்கள் உங்களை நெருங்கவே நெருங்காது..தெரியுமா ?

காட்சி படம்

கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்..

 • Share this:
  குழந்தை பருவத்தில் கீரை என்றாலே ஒருவித வெறுப்பு இருக்கும். ஏன் என்ற காரணம் எல்லாம் நமக்கு தெரியாது, ஆனால் கீரையை உணவாக சாப்பிடுவது, மாத்திரையை விழுங்குவது போல முகத்தை சுழித்துதான் சாப்பிட்டிருப்போம். கார்டூன் தொலைக்காட்சி வந்த பிறகு, அதில் ஒளிப்பரப்பான பாப்பாய் ஷோவுக்குப் பிறகு, கீரை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது, கை ஆம்ஸ் பெருகும் என நம்பி, கீரையை உணவாக எடுத்துக்கொண்ட 90's கிட்ஸூம் உண்டு. அது ஒருவகையில் நல்லது என்றாலும், உண்மையில் கீரை சாப்பிடுவதால் நமது உடலுக்கு என்ன கிடைக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.

  ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை : உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கீரைகளில் நிரம்பி இருக்கின்றன. நம் உடலுக்கு தேவையான இரும்பு சத்து, மக்னீசியம் உள்ளிட்ட தாது சத்துக்கள், வைட்டமின்கள் பி1, பி2, பி6 மற்றும் சி, இ, கே ஆகியவை கிடைக்கின்றன. கீரைகளில் உள்ள கரோட்டினாய்கள் வைட்டமின் ஏ - வாக மாற்றப்பட்டு உடலின் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் பாகங்கள் புத்துணர்ச்சியுடன் செயலாற்ற உதவுகிறது.

  நார்ச்சத்து அதிகம்  : உடல் இயக்கத்துக்கு நார்ச்சத்து மிக மிக அத்தியாவசியமாகும். அந்த நார்ச்சத்து கீரைகளில் அதிகளவு கிடைக்கின்றன. செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கின்றன. சரியான நேரத்தில் பசியை தூண்டுவதற்கு கீரைகளில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது. உடலில் தேவையற்ற கலோரிகள் தங்கி உடல் எடை கூடுவதை கீரைகளில் உள்ள வைட்டமின்கள் தடுக்கின்றன. குடல் இயக்க மாறுபாட்டை தடுப்பதுடன், மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கிறது. நோய் எதிப்பு சக்தி அதிகரிப்பதிலும் கீரைகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

  இதயத்திற்கு நல்லது : உணவு பழக்க வழக்க மாறுபாட்டால், இதய பிரச்சனைகள் வாழ்வியல் நோயாக மாறியுள்ளது. சரியான உணவுகளை எடுத்துக்கொள்ளாமல், வைட்டமின் மற்றும் நார்ச்சத்து இல்லாத உணவுகளை சுவைக்காக மட்டும் எடுத்துக்கொள்வதால் இதயப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. கீரைகள் சாப்பிடும்போது இதயத்தின் செயல்பாடு பாதிக்காமல் இருப்பதுடன், செயல்பாடும் நன்றாக இருக்கிறது. கீரைகளில் உள்ள நைட்ரேட் ரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்துக்கு சீரான அளவில் ரத்தத்தை அனுப்புகிறது. நைட்ரிக் ஆக்சைடு ரத்த நாளங்களை அகலப்படுத்தி தமனிகளின் அடைப்பை தடுக்கிறது. இதன்மூலம் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

  புற்றுநோய் எதிர்ப்பு : அதிகப்படியான கொழுப்பு உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது நமது உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் அதிகரிக்கிறது. இவை இருதய நோய்க்கு காரணமாக அமைவதுடன், டி.என்.ஏகளையும் சேதப்படுத்துகின்றன. இதனால், உடலில் புற்றுநோய் உருவாக அதிகப்படியான வாய்ப்பு உள்ளது. கீரையில் இருக்கும் இயற்கையான ஆக்ஸிஜனேற்றங்கள், ப்ரீரேடிக்கல்கள் அபாயத்தை குறைத்து, உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகளை குறைக்கின்றன. கீரையில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி, மிகப்பெரிய நோய் அபாயத்தில் இருந்து காக்க உதவுகின்றன.

  Also read : நம்பமுடியாத நன்மைகளை தரும் முந்திரி பருப்பு : ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிட வேண்டும்..? எப்படி சாப்பிட வேண்டும்..?

  பார்வையைப் பாதுகாக்கிறது : கண் பார்வைத் திறனை பராமரிப்பதில் கரோட்டினாய்டு நிறமிகளான லுடீன் மற்றும் ஜியாக்சாண்டீன் மிக அவசியமானவை என பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இவை கண் பார்வைக்கு துணைபுரிவதுடன், விழித்திரையின் மாகுலர் சிதைவு அபாயத்தையும் குறைக்கின்றன. மேலும், கண்புரை உருவாவதை தடுப்பதுடன், இதில் இருக்கும் ஆக்ஸிடான்டுகள் வயதாவதையும் குறைக்கின்றன. இந்த சத்துக்களும் கீரைகளில் நிரம்ப கிடைக்கின்றன. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையிலான அனைத்து பாகங்களின் செயல்பாடுகளுக்கும் தேவையான மிக அத்தியாவசிய வைட்டமின்கள் கீரைகளில் இயல்பாகவே கிடைக்கும்போது, அவற்றை தவிர்க்காமல் அன்றாட உணவில் எடுத்துக்கொண்டால், ஆரோக்கியமான வாழ்வை மகிழ்ச்சியாக அனுபவிப்பீர்கள்.

   
  Published by:Tamilmalar Natarajan
  First published: