மருத்துவ குணங்கள் நிறைந்த பெருஞ்சீரகம்.! அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன.?

மருத்துவ குணங்கள் நிறைந்த பெருஞ்சீரகம்.! அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன.?

Fennel Seeds

சில நேரங்களில் நாம் சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் நெஞ்செரிச்சல் ஏற்படும். சிறு குழந்தைகளுக்கு வாயு தொல்லை, வயிற்று உப்பசம் போன்ற கோளாறுகளும் ஏற்படும். அந்த நேரங்களில் சிறிதளவு சோம்பை தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து விட்டு, பின் மிதமான சூட்டில் அந்த சோம்பு நீரை ஒரு டம்ளர் அருந்தினால் நிவாரணம் கிடைக்கும்.

  • Share this:
உணவே மருந்து என்னும் நமது பாரம்பரிய சமையல் முறையில் எந்த ஒரு உணவிலும் வாசனைக்காகவே சில பொருட்கள் சேர்க்கப்படுவது வழக்கம். அப்படிப்பட்ட பொருட்கள் மருத்துவ குணங்கள் கொண்டதாகவும் இருக்கும். வாசனைக்காக சேர்க்கப்படும் பொருட்கள் என்றாலும் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலில் இருக்கும் பல வித நோய்களுக்கு தீர்வாக இருக்கும் திறன் கொண்டவையாகவும் இருக்கும். அப்படிப்பட்ட திறனுள்ள ஒரு பொருள் தான் நம் வீட்டு சமையலறையில் தவறாமல் இடம்பெற்றிருக்கும் சோம்பு என்றழைக்கப்படும் பெருஞ்சீரகம். பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் அதேசமயம் இதை அதிகமாக சாப்பிட்டால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதை பற்றி பார்க்கலாம். முதலில் பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்:

பயன்கள்:

சில நேரங்களில் நாம் சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் நெஞ்செரிச்சல் ஏற்படும். சிறு குழந்தைகளுக்கு வாயு தொல்லை, வயிற்று உப்பசம் போன்ற கோளாறுகளும் ஏற்படும். அந்த நேரங்களில் சிறிதளவு சோம்பை தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து விட்டு, பின் மிதமான சூட்டில் அந்த சோம்பு நீரை ஒரு டம்ளர் அருந்தினால் நிவாரணம் கிடைக்கும்.

காலநிலை மாறும்போது ஆஸ்துமா நோய்வாய்பட்டவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். எனவே குளிர் அல்லது மழை காலத்தில் தினமும் சிறிது பெருஞ்சீரகத்தை மென்று தின்று, சிறிது வெண்ணீரை குடித்தால் சுவாச பிரச்சனை சீராகும். சோம்பில் உள்ள இரும்புசத்து மற்றும் வைட்டமின் C உடலின் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. கண்பார்வை சக்தியை அதிகப்படுத்தும் திறனும், உயர்ரத்த அழுத்தத்தை குறைத்து சீர்படுத்தும் திறனும், சிறுநீரை சுத்தப்படுத்தும் திறனும், தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு. இது மலச்சிக்கலை போக்கவல்லது.

இரைப்பை பிரச்னை, மாதவிடாய்க்கோளாறு, செரிமானக் கோளாறுகள், வயிற்றில் உள்ள ஒட்டுண்ணி பிரச்சனை, பெருங்குடல் கோளாறுகள் உள்ளிட்ட இன்னும் பலவற்றுக்கு பெருஞ்சீரக டீ நன்மை தர கூடியது. இது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அசைவ உணவுகள் சாப்பிட்ட பின் சிலருக்கு உள்ள உடல்நல குறைபாடுகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் எப்போது சாப்பிட்டு முடித்தாலும் சிறிது பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் நீங்கும். மேலும் பற்களில் கிருமிகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும்.

பக்க விளைவுகள்:

அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப மருத்துவ குணங்கள் நிறைந்தது என்பதற்காக அதிகப்படியான அளவு பெருஞ்சீரகம் சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து தற்போது பார்க்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, கர்ப்பிணிப் பெண்கள் பெருஞ்சீரகத்தை அதிகம் சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் பெருஞ்சீரகம் கருப்பைச் சுருக்கங்களைத் தூண்டும் தன்மை உடையதால் முன்கூட்டியே பிரசவம் ஆகும் நிலை ஏற்பட்டு விடும்.

நாம் முன் கூறியபடி சுவாச பிரச்சனை உள்ளவர்கள் பெருஞ்சீரகம் பயன்படுத்தலாம். ஆனால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே எப்போதும் அவர்கள் சிறிதளவே பயன்படுத்த வேண்டும். இன்னும் சிலருக்கு தொடர்பு தோல் அழற்சி என்ற ஒரு வகை தோல் நோய்த்தொற்று பெருஞ்சீரகம் எடுத்துக்கொள்வதால் வரலாம். தோல் அழற்சி மற்றும் கொப்புளங்கள் இதன் அறிகுறி. அதிகப்படியான பெருஞ்சீரகம் அல்லது பெருஞ்சீரகஎண்ணெய் நுகர்வு காரணமாக இந்த அலர்ஜி வரலாம்.

முக்கியமாக நீங்கள் ஏற்கனவே கால்-கை வலிப்புக்காகவும், நரம்பு பிரச்சனைக்காகவும் சில மருந்துகள் எடுத்து கொண்டிருப்பின் பெருஞ்சீரகத்தை அறவே தவிர்க்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் அவை நிலைமையை மோசமாக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளவர்கள் , சோம்பினை உணவில் மட்டும் பயன்படுத்தலாம் அதிகப்படியான சோம்பு சேர்த்து கொள்வதால் சிறுநீரகம் மேலும் பாதிப்படைய வாய்ப்பு அதிகம்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: