இந்திய குடும்பங்கள் அனைவரது சமையல் அறைகளிலும் இந்தப் பொருள் தவறாமல் இடம்பெற்றிருக்கும். இதன் வாசனை நம் மூக்கை துளைக்கும். ஓமம் என்னும் இந்த விதைகள் அல்லது இதன் இலைகள் அல்லது ஓமத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பானம் என ஏதேனும் ஒன்றை நம் சிறு வயது முதல் அவ்வபோது பயன்படுத்தி வந்திருப்போம்.
குறிப்பாக, உணவு செரிமாணம் ஆகாமல் வயிறு உப்புசமாக இருக்கும் சமயத்தில் உடனடியாக நம் மனதுக்கு நினைவுக்கு வருவது ஓமத்ரா பானமாகத் தான் இருக்கும். சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு சளி, ஜலதோஷம் போன்ற தொந்தரவுகள் ஏற்படும் போது, ஓம இலைகளை கொதிக்க வைத்து, அந்தச் சாறு கொடுத்து வருவதையும் பார்த்திருப்போம்.
இப்படியாக ஓமத்தின் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். குறிப்பாக, தினசரி டீ-யில் கொஞ்சம் ஓம விதைகளை சேர்த்து கொதிக்க வைத்து அருந்துபவர்கள் உண்டு. இன்னும் சிலர் இதை பருப்பு கூட்டில் சேர்த்துக் கொள்கின்றனர். ஓமம் உணவாகவும், மருந்து பொருளாகவும் பயன்படுகிறது.
செரிமாணக் கோளாறு அல்லது அசிடிட்டி, ஜலதோஷம் போன்ற பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. மேலும், பல் அரிப்பை தடுப்பது, சரும பாதுகாப்பு, வலி நிவாரணம் போன்றவற்றுக்காகவும் ஓமம் பயன்படுத்தப்படுகிறது.
என்னதான் ஓமத்தில் நிறைய மருத்துவப் பலன்கள் இருக்கிறது என்றாலும், இதிலும் சில பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆகவே, அவை என்னவென்று தெரிந்து கொண்டு, நாம் இதை அளவோடும், கவனமாகவும் பயன்படுத்த வேண்டும்.
ஓமத்தின் பக்க விளைவுகள்
- ஓமம் அசிடிட்டியை குறைக்கும் என்றாலும் கூட, அதை நீங்கள் அதிகப்படியாக சாப்பிட்டீர்கள் என்றால் ஆசிட் ரிஃப்லெக்ஸ், வாயு போன்ற தொந்தரவுகள் ஏற்படக் கூடும்.
- ஓமத்தில் தைமால் என்னும் பொருள் இருக்கிறது. இது உங்களுக்கு தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தக் கூடும்.
- ஆய்வுத் தகவல்களின்படி ஓமத்தில் உள்ள காரத்தன்மை மற்றும் பயோ ஆக்டிவ் பொருள்கள் காரணமாக வாய்ப் பகுதியில் இது வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக எரிச்சல், வாய்ப்புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
- கர்ப்பிணிப் பெண்கள் ஓமத்தை கட்டாயம் தவிர்க்க வேண்டும். வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு இது ஆபத்தை ஏற்படுத்தும்.
- ஓமத்தை வெறுமனே அதிகப்படியாக எடுத்துக் கொள்வது உடலுக்கு மிகுந்த தீங்கு விளைவிக்கக் கூடிய நஞ்சாக மாறிவிடும். சில சமயம், உயிர் பலி ஏற்படவும் வாய்ப்புண்டு.
- நீங்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருப்பவர் என்றால் கட்டாயம் ஓமத்தை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அறுவை சிகிச்சையின் போது இது ரத்தக் கசிவை அதிகப்படுத்தும். ஆகவே, அறுவை சிகிச்சைக்கு 2 வாரங்கள் முன்பாகவே ஓமத்தை நிறுத்தி விட வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.