முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / காய்ச்சல், தொண்டை புண்களை குணப்படுத்தும் சூப் வகைகள்! - இதோ ரெசிபி!

காய்ச்சல், தொண்டை புண்களை குணப்படுத்தும் சூப் வகைகள்! - இதோ ரெசிபி!

சூப்

சூப்

இந்த ரெசிபிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த சூப் ரெசிபிகள் செய்முறை பற்றி இந்தப் பதிவில் விரிவாக பார்க்காலாம்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

குளிர்காலங்களில் காய்ச்சல், சளி, இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற சில அவதிப்படவைக்கும் பிரச்னைகளை நாம் எதிர்கொண்டுவருகிறோம். நமக்கு காய்ச்சல் இருக்கும் சமயங்களில் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கும். இது போன்ற சமயங்களில் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடம்பில் நீர்ச்சத்து தேவைகளை அதிகரிப்பது என்பது மிகவும் அவசியம். இந்த மாதிரியான சமயங்களில் வழக்கமான உணவுகள் நமக்கு கை கொடுக்காது.

நோயில் இருந்து மீளவும் உடலுக்கு தேவையான ஆற்றலை பெறவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுக்க வேண்டும். இதற்கு முதற்கட்டமாக நாம் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். உடலை வலுவாக வைக்க புரத உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி நீங்கள் எடுத்துகொள்ள வேண்டிய சில எளிய சூப் ரெசிபிகள் உள்ளன. இந்த ரெசிபிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த சூப் ரெசிபிகள் செய்முறை பற்றி இந்தப் பதிவில் விரிவாக பார்க்காலாம்.

இஞ்சி சூப் (Ginger Soup)

இஞ்சி நமது வீடுகளில் பரவலாக பயன்படுத்தக்கூடிய பொருள் ஆகும். அதை நாம் உணவுகளில் மட்டுமல்லாது தேநீரிலும் சேர்த்து பயன்படுத்தி வருகிறோம். இஞ்சி, உங்கள் உணவுகளுக்கு சுவையூட்டுவதைத் தவிர, பாரம்பரியமாக ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது பல ஆரோக்கிய நன்மைகள் மற்றும் குணப்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது.

தேவையான பொருட்கள் :

இஞ்சி - 1 பெரிய துண்டு ( துருவியது)

பூண்டு - 4 பல்

சின்ன வெங்காயம் – 5

தண்ணீர் - 1 கப்

எண்ணெய்- 2 ஸ்பூன்

மிளகு - 1 ஸ்பூன்

சீரகம் - 1 தேக்கரண்டி

தக்காளி - 1

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு துருவிய இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், கருவேப்பிலை, சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அரைத்து பேஸ்ட் பதத்தில் உள்ள தக்காளியை சேர்த்து ஒரு கப் தண்ணீரை ஊற்றி கொதிக்கவிடவும், பின்னர் தேவையான அளவு உப்பு – சேர்த்து கொத்தமல்லி தழைகளை தூவினால் சுவையான இஞ்சி சூப் ரெடி..!

தக்காளி சூப் (Tomato Garlic Soup)

தக்காளி சூப் செய்வதற்கு மிகவும் எளிதானது. நோய்களை எதிர்த்துப் போராட உதவும் லைகோபீன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி மற்றும் எலும்புகளுக்கு ஊட்டமளிக்கும் வைட்டமின் கே ஆகியவற்றுடன் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த தக்காளி சூப் எப்படி தயாரிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் : 

தக்காளி - 3

மிளகு - 1 ஸ்பூன்

சீரகம் - 1/2 ஸ்பூன்

தண்ணீர் -1 கப்

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - சுவைக்கு ஏற்ப

இஞ்சி - அரை துண்டு

பூண்டு - 2 பல்

எண்ணெய் - 1 ஸ்பூன்

செய்முறை:

தக்காளி, இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை நன்றாக இடித்து, இதனுடன் 1 நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து விழுதாக அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து அது சூடானதும் எண்ணெய் 1 ஸ்பூன் சேர்த்து, அதனுடன் மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து அது பொரிந்ததும் இடித்து வைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்கவும், பின்னர் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அது கொதித்ததும் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து கொத்தமல்லி தழைகள் தூவினால் சுவையான தக்காளி சூப் ரெடி.

சிக்கன் சூப் (Chicken Soup)

சிக்கன் சூப்பில் உள்ள சத்துகள் காய்ச்சல் மற்றும் தொண்டை வலியை குணப்படுத்தும். சிக்கன் சூப் விலை மலிவானது மற்றும் ஆரோக்கியமானது. அந்த வகையில் சிக்கன் சூப் எவ்வாறு எளிதாக வீட்டிலேயே செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள் : 

சிக்கன் - 250 கிராம்

வெங்காயம் - 1

தக்காளி - 1

இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்

கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய் - 2 ஸ்பூன்

மஞ்சள்தூள் - ¼ ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

சீரகம் - ஸ்பூன்

மிளகு தூள் - ½ ஸ்பூன்

தண்ணீர் - 2 கப்

செய்முறை : 

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து மிகவும் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மற்றும் கொத்தமல்லியை நன்றாக பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். குக்கரில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, சீரகம், மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும். நன்றாக வதங்கிய பிறகு அதனுடன் சிக்கன் மற்றும் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி பின்னர் குக்கரில் 2 விசில் வரும் வரை நன்கு வேக விடவும். 2 விசில் வந்ததும் குக்கரை திறந்து அதனுடன் கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும். சுவையான சிக்கன் சூப் தயார்.

காளான் சூப் (Mushroom Soup)

காளான்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்த ஒரு பொருளாகும், இதில் வைட்டமின் D இன் நன்மை நிறைந்துள்ளது. இதனுடன் மிளகு மற்றும் இஞ்சியைச் சேர்ப்பது காய்ச்சல் மற்றும் தொண்டை புண் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது.

தேவையான பொருட்கள் : 

சிக்கன் எலும்புடன் - 100 கிராம்

காளான் - 100 கிராம்

இஞ்சி - 1 துண்டு

மிளகு தூள் - 1 ஸ்பூன்

தண்ணீர் - 1 கப்

கொத்தமல்லி தழை - தேவையான அளவு

செய்முறை :

காளான் சூப் தயார் செய்ய, காளான்கள் மற்றும் கோழி எலும்புகளை வெட்டி நன்கு கழுவி, ஒரு கப் தண்ணீருடன் 1 துண்டு இஞ்சி சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும், கோழி எலும்பு துண்டுகளை மட்டும் எடுத்துவிட்டு அரைத்து வைத்த மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கொத்தமல்லி தழைகளை தூவினால் சூடான காளான் சூப் ரெடி...!

First published:

Tags: Chicken Soup, Healthy Food, Soup