தனது கையில் உள்ள டாட்டூ குறித்த உண்மை இதுதான்.. சுரேஷ் ரெய்னா ஓபன் டாக்..

சுரேஷ் ரெய்னா

இந்த டாட்டூவை (Tatto) வரைந்ததற்கு மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் தெண்டுல்கர் தான் காரணம் எனக் கூறியுள்ளார்.

  • Share this:
சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளை படைப்பதற்கு சச்சின் கொடுத்த அறிவுரையே காரணம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, இ.எஸ்,பி.என் கிரிக் இன்போ (ESPNCricinfo’s ) வலைதளத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில், அவரது வலது கையில் இருக்கும் ‘Believe’ டாட்டூ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சுரேஷ் ரெய்னா, இந்த டாட்டூவை (Tatto) வரைந்ததற்கு மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் தெண்டுல்கர் தான் காரணம் எனக் கூறியுள்ளார். 2014ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த சுரேஷ் ரெய்னா, அந்த தொடருக்கு முன் மும்பையில் சச்சினை நேரில் சந்தித்து 2 வாரங்கள் பயிற்சி பெற்றதாக தெரிவித்தார். அப்போது, பயிற்சியின் இடைவெளியில் நிறைய ஆலோசனைகளை சச்சின் வழங்கியதாக தெரிவித்தார்.

"உன்னால் முடியும் என்று முதலில் நீ நம்ப வேண்டும், உன்னால் மிகப்பெரிய சாதனைகளை படைக்க முடியும் என மனதில் நம்பிக்கைக் கொள் என சச்சின் கூறினார். அவரின் அந்த வார்த்தைகள் எனக்குள் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனக்குள் புது நம்பிக்கை பிறந்தது. அன்றைய பயிற்சிநாளின் மாலையில் ஸ்பாவுக்கு சென்று என்னுடைய வலது கையில் Believe என டாட்டூ குத்திக்கொண்டேன்" என ரெய்னா கூறினார்.

2013-ஆம் ஆண்டு சர்வதச கிரிக்கெட் போட்டியில் இருந்தது சச்சின் ஓய்வு பெற்றாலும், தொடர்ந்து அவரின் தொடர்பிலேயே இருந்ததாகவும் ரெய்னா கூறியுள்ளார். சச்சின் ஓய்வுபெறுவதற்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருவரும் இந்திய அணிக்காக விளையாடினர். வங்கதேச அணிக்கு எதிரான போடியில் சதமடித்து சர்வதேச அரங்கில் 100வது சதத்தை சச்சின் பதிவு செய்தபோது ரெய்னா அவருடன் களத்தில் இருந்தார்.

suresh raina 01

இந்திய அணியின் மிடில் ஆர்டராக சிறப்பான பேட்டிங் பங்களிப்பை கொடுத்து வந்த ரெய்னா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஓய்வை அறிவித்தார். அதுவும் மகேந்திரசிங் தோனி ஓய்வு அறிவித்த சில நிமிடங்களில் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். பின்னர், ஐ.பி.எல் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா திரும்பினார். இது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது தொடங்கவுள்ள சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் தொடரில் உத்தரப்பிரதேச அணிக்காக ரெய்னா களமிறங்க உள்ளார். இதில் சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்த இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Published by:Sivaranjani E
First published: