பதப்படுத்தப்பட்ட இறைச்சியை தொடர்ந்து சாப்பிட்டால் மறதி நோய் ஏற்படும் - ஆய்வு

மறதி நோய் | dementia disease

நாளொன்றுக்கு சுமார் 25 கிராம் அளவு பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிட்டால், அது டிமென்ஷியா எனப்படும் மறதி நோயை அதிகரிப்பதற்கான 44% அபாயத்துடன் தொடர்புடையது.

  • Share this:
பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதால் உடல்நலனுக்கு ஏராளமான தீமைகள் ஏற்படும் என்பதை பல்வேறு ஆய்வு முடிவுகள் ஏற்கனவே வெளிப்படுத்தி உள்ளன. பதப்படுத்தப்பட்ட அல்லது அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை சாப்பிடுவது இதய நோய், புற்றுநோய் உள்ளிட்ட ஏராளமான உயிருக்கு ஆபத்துகளை ஏற்படுத்த கூடும் என்று தெரிய வந்துள்ளது. அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளான கேக்குகள், தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரொட்டிகள் உள்ளிட்டவை போல இறைச்சிகளும் பதப்படுத்தி விற்கப்பட்டு வருகின்றன.

ஒருசிலர் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இந்த பழக்கத்தை அடியோடு மாற்றி கொள்ளும் நேரம் இது. ஏனென்றால் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவின்படி, பதப்படுத்தப்பட்ட இறைச்சியை தினமும் சாப்பிடுவது நினைவு திறனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரிய வந்துள்ளது.

நாளொன்றுக்கு சுமார் 25 கிராம் அளவு பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிட்டால், அது டிமென்ஷியா எனப்படும் மறதி நோயை அதிகரிப்பதற்கான 44% அபாயத்துடன் தொடர்புடையது என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதே நேரத்தில் பதப்படுத்தப்படாத இறைச்சி உண்பது மறதி நோய் வருவதற்கான குறைந்த வாய்ப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக, ஆராய்ச்சி குழுவினர் இங்கிலாந்தை சேர்ந்த 40 முதல் 69 வயதுடைய சுமார் 5 லட்சம் பேரின் ஆழமான மரபணு மற்றும் சுகாதார தகவல்களைக் கொண்ட ஒரு தரவுத்தளத்தை முழுமையாக ஆய்வு செய்தது.இந்த தரவில் பல்வேறு வகையான இறைச்சியை பங்கேற்பாளர்கள் ஒரு முறை அல்லது அதற்கு மேற்பட்ட தினசரி எத்தனை முறை சாப்பிட்டார்கள் என்பதும் அடங்கும். கடந்த 2006 - 2010 ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் இந்த ஆய்வு நடந்தது. ஆய்வு பங்கேற்பாளர்களின் உடல்நிலை குறித்த சுமார் 8 ஆண்டுகள் பின்தொடர்தலில், சுமார் 2,896 நபர்களுக்கு டிமென்ஷியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

மறதி நோய் தாக்கம் கண்டறியப்பட்ட நபர்கள் பொதுவாக வயதானவர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள். புகைபிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். குறைவான உடலுழைப்பு கொண்டவர்கள். மேலும் பரம்பரையில் பக்கவாதம் மற்றும் பரம்பரை டிமென்ஷியா இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இவர்கள் டிமென்ஷியாவுடன் மிகவும் தொடர்புடைய ஒரு மரபணுவின் கேரியர்களாக இருக்க வாய்ப்பு அதிகம் என்றும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நெஞ்சு எரிச்சலை போக்க துளசியை எப்படி பயன்படுத்துவது..? சில வீட்டுக்குறிப்புகள் உங்களுக்காக...

அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட முடிவின்படி, டிமென்ஷியாவின் உலகளாவிய பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் சுமார் 50 மில்லியன் பேர் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 மில்லியன் பேர் டிமென்ஷியாவால் புதிதாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். உணவு, வாழ்க்கை முறை உள்ளிட்ட மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளுடன் தொடர்புடையது. இதனிடையே ஒரு நாளைக்கு 50 கிராம் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி அல்லது கன்றுகளின் இறைச்சி போன்ற சில பதப்படுத்தப்படாத சிவப்பு இறைச்சியை உட்கொண்டவர்களுக்கு டிமென்ஷியா வருவதற்கான வாய்ப்பு 19% குறைவாக இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.மேலும் பெண்களை விட ஆண்களே இந்த மறதி நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆய்வில் பங்கேற்றவர்களில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அதிக அளவில் உட்கொண்டவர்கள் ஆண்களாக இருந்தனர். இவர்கள் உடல்பருமன் மிக்கவர்கள் அல்லது புகை மற்றும் மது பழக்கம் உடையவர்கள், பழம் மற்றும் காய்கறிகளை மிக குறைவாக எடுத்து கொண்டவர்களாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது என்று ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.

 
Published by:Sivaranjani E
First published: