ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஏன் உயிரினும் மேலானது ஒழுக்கம் ?

ஏன் உயிரினும் மேலானது ஒழுக்கம் ?

ஒழுக்கம்

ஒழுக்கம்

சமூகம் மாணவர்களை அணுகும் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றமும் மாணவர்களின் ஒழுக்கமின்மை மீதான புகார்களுக்கு காரணமாகிறது

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :

கண்ணுக்குத் தெரியாத கொரோனா என்ற கிருமி ஒன்று ஒட்டுமொத்த உலகத்தையும் அடியோடு புரட்டிப் போட்டது. அதிலிருந்து படிப்படியாக மீண்டு எழுந்து வந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அது ஏற்படுத்திய பாதிப்பின் தாக்கம் அனைத்து தளங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக பொருளாதாரம், மருத்துவம், கல்வி, இறக்குமதி, ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உலக நாடுகள் கண்டுள்ள நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு உரிய கால அவகாசம் தேவைப்படும். ஆனால், அவற்றை சரிசெய்து கொள்வதில் நமக்கு கொடுக்கப்படும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் மிக முக்கியமான ஒன்று. இலங்கை மற்றும் பாகிஸ்தானில் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியை அந்த நாடுகள் சந்தித்தன் விளைவாக, ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்ததை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இதில் மிகப்பெரிய அளவில் ஏற்பட்டு கற்றல் இடைவெளி ஏற்பட்டது பள்ளி மாணவர்களுக்குத் தான். இந்த கற்றல் இடைவெளி அவர்கள் வேலைக்குச் செல்லும் வரை எதிரொலிக்கும் என்று நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாளேடுகள் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டன. ‘கொரோனா பேட்ச்’ என்ற அடையாளத்தை பெற்றதோடு மட்டுமல்லாமல், அவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று விளம்பரம் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகி இருப்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும். இது வரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு இரண்டு ஆண்டு காலம் மாணவர்களை முடக்கி வீட்டில் வைத்திருந்தது கொரோனா. தொழில்நுட்பத்தின் சாத்தியத்தால் ஆன்லைன் கல்வி ஒரளவுக்கு கை கொடுத்தாலும் அது பெரும்பான்மை மாணவர்களின் கல்வி தொடர்ச்சியை தக்க வைக்கும் அளவுக்கு இல்லை என்பது தான் உண்மை. ஆன்லைன் கல்விக்காக பயன்படுத்தத் தொடங்கிய செல்போன் எந்த நேரமும் அவர்கள் கைகளில் தவழ்ந்தது தான் இன்றைய அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமா ? கற்றல் இடைவெளி அத்தனை பெரிய பாதிப்பை மாணவ சமுதாயத்திற்கு ஏற்படுத்துமா ?

எது பிரச்சனை ?

தற்போது பிரச்சனை அதுவல்ல. கல்வி மாணவர்களுக்கு எந்த அளவுக்கு முக்கியமோ அதை விட ஒழுக்கம் மிக முக்கியமானது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் இருந்த காரணத்ததால் சினிமா, செல்போன், சமுக வலைதளங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஆட்பட்டு விட்ட மாணவர்கள் முழுமையாக இன்னும் அதிலிருந்து விடுபட முடியாத நிலையில் உள்ளனர். அதன் விளைவு ஒழுக்கம் என்ற நெறிமுறைகளை பின்பற்றுவதிலும், கட்டுப்பாடுகளை பின்பற்றுவதிலும் அவர்களுக்கு சுணக்கம் ஏற்படுகிறது.

மேலும், வீட்டில் இருந்த போது தாங்கள் பார்த்த பல்வேறு செயல்களை செய்து பார்ப்பதன் முலம் அதைப்போலவே தாங்களும் ஆகலாம் என்ற கட்டற்ற சுதந்திர நிலைக்கு வந்ததைப் போல உணர்ந்தவர்கள் அதை முயற்சித்தும் பார்த்தார்கள். அவர்களுக்கு அவர்களே எதிரிகள் என்பதைப்போல கையில் இருந்த செல்போனில் நண்பர்கள் பதிவு செய்த காட்சிகள் சமுக வலைதளங்களில் வெளியாகி பெரும் பேசுபொருளாக மாறின.

பேருந்துகளின் படிக்கட்டுகளில், மேற்கூரைகளில் பயணம், ஆசியரை, தலைமை ஆசிரியரை கடும் சொற்களால் பேசி அவர்களை தாக்க முயன்றது. மாணவிகள் வகுப்பறைகளில் அமர்ந்து மது குடித்துப் பார்த்து முயற்சி மேற்கொண்டது. முடி சரியாக வெட்டவில்லை எனக் கேட்ட தலைமை ஆசிரியரை மது பாட்டிலால் குத்தச் சென்றது என இப்படி நீளும் பட்டியலில் அனைத்தும் சிறைக்கம்பிகளை உடைத்து வெளியே வந்து அவர்களின் ஆற்றாமைகளை வெளிப்படுத்துவது போன்ற உணர்வைத் தான் ஏற்படுத்துகின்றன.

ஆனால், எதன் தாக்கத்தால் மாணவர்கள் இதுபோன்ற ஒழுக்கக் கேடுகளில் ஈடுபட முனைகிறார்கள். அவர்களை எந்தவித அச்சமும், தயக்கமும் இன்றி நெறிமுறை தவறும் செயல்களில் ஈடுபடுவதற்கு காரணமாக இருப்பவை எவை ? அதனை தடுப்பது எப்படி ? என்பதைத் தான் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கூட்டுப்பொறுப்போடு பேசித் தீர்க்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததால் 16 வயது சிறுவன் கண்ணாடியை உடைத்து கை நரம்பை அறுத்துக் கொண்ட செய்தி நமக்கு பேரதிர்ச்சியையும், பெரும் அயர்ச்சியையும் கொடுக்கிறது. 10 வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு தொடர்ச்சியாக 12 மணி நேரம் செல்போன் பயன்பாடு தேவையான ஒன்றாக இருக்கிறது என்றால் சிக்கல் நம் சமூக, குடும்ப கட்டமைப்புகளில் தான் என்பதையும் நாம் உணர வேண்டும். பெற்றோர், வயதில் மூத்தவர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் என யாரும் எதற்காகவும் கண்டிக்கவே கூடாது, அறிவுரை கூறக் கூடாது என்ற மனநிலையில் மாணவர்கள் வளர்வது அவர்களின் கல்வி, வேலை, மண வாழ்க்கை என எல்லா நிலையிலும் கடும் சிக்கலை ஏற்படுத்தும் என்பது தான் உளவியல் நிபுணர்களின் எச்சரிக்கை.

காரணம் என்ன ?

உறவுகளிடையே ஏற்படும் இடைவெளி, இன்டர்நெட், செல்போன் மூலமாக ஏற்படும் அதீத வெளிப்பாட்டின் விளைவு இது போன்ற மோசமான உளவியல் பாதிப்புகளில் மாணவர்கள் சிக்கும் நிலை உருவாகி உள்ளது. மேலும், செல்போன் பயன்பாடு காரணமாக அதில் வரும் நிகழ்வுகளைப் போல தங்களை உருவகப் படுத்தி அதன் அடிப்படையில் செயல்பாடுகளை தகவமைத்துக் கொள்ளும் செயல்களும் சமீப காலங்களில் அதிகரிக்கத் தொடங்கி உள்ளன. இவை எல்லாவற்றிக்கும் ஒழுக்கமின்மை காரணம் என்று கூறினாலும், அதையும் ஈகோவாக எடுத்துக் கொள்ளும் மனநிலையில் தான் ஒரு தலைமுறை வளர்ந்து கொண்டிருக்கும் கசப்பான உண்மையை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

மிகச் சாதாரணமாக கடும் சொற்களில் தொடங்கும் வாக்குவாதம் கொடூர தாக்குதல், கத்தியை காட்டி மிரட்டுதல், கொலை, தற்கொலை என்னும் அளவுக்கு மோசமான வன்முறையாக மாறும் அளவுக்கு கண்டித்து வைப்பதும், ஒழுக்கமாக இருக்க அறிவுரை கூறுவதும் மாணவ சமுதாயத்திற்கு அத்தனை பெரிய எரிச்சலை தூண்டுகிறதா என்ற கேள்வி எழாமல் இல்லை. பொறுமை, அணுகுமுறை, ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை என்ற எந்த குணநலன்களும் தேவை இல்லை, இன்டர்நெட் வசதியுடன் கூடிய செல்போன், தனிமை, பொறுமையின்மை, தங்கள் மீதான கவனம் போன்றவையே போதுமானது என்ற எண்ணம் எத்தனை ஆபத்தானது என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டியது கடமை மட்டுமல்ல கூட்டுபொறுப்பும் ஆகும்.

தீர்வு என்ன ?

ஆசிரியர் சமூகம் மாணவர்களை அணுகும் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றமும் மாணவர்களின் ஒழுக்கமின்மை மீதான புகார்களுக்கு காரணமாகிறது என்று கூறப்படுகிறது. ஆசிரியர் மாணவர் உறவில் உள்ள சிக்கல்கள், அணுகுமுறை மாற்றம், உளவியல் பார்வைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி அதை சரி செய்யும் வகையில் சில மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. ஒழுக்கம் என்ற சொல்லை ஆசிரியர் பயன்படுத்தினாலே அதை கெட்ட வார்த்தையைப் போல பார்க்கும் மாணவர்களின் மனநிலை மிக மோசமான சமிக்ஞைகளை ஏற்படுத்தி இருப்பதாக ஆசிரியர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

அதே நேரம், மாணவர்களை கண்டித்தல், அடித்தல் போன்றவை தற்போதைய காலகட்டத்தில் செய்யவே கூடாத செயல்கள் என்ற போக்கில் தான் நமது கல்வி அமைப்பு உருமாறிக் கொண்டிருக்கிறது. உடனடியாக அது புகாராக மாறி ஆசிரியர்களின் வேலைக்கே உலை வைப்பதால் நமக்கேன் வம்பு என்று பாடத்தை மட்டுமே சொல்லிக் கொடுத்து விட்டு கடந்து போகும் நிலையில் ஆசிரியர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

சமூக வலைதளங்களின் ஆதிக்கம் நடக்கும் சிறு, சிறு செயல்களையும் பூதாகாரமாக்கி அவற்றை பேசுபொருளாக மாற்றுவது மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிச் சூழலில் பெரும் இடையூறாக பார்க்கப்படுகிறது. ஒரு சிலரால் ஏற்படும் பிரச்சனைகள் ஏனைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மாண்பை குலைக்கும் வகையில் மாறிவிடுவதால் அதனை தடுக்கும் பொருட்டு கூட்டுப் பொறுப்புடன் சில முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

பெற்றோர் – மாணவர் – ஆசிரியர் என்ற இந்தச் சக்கரம் எத்தனை வேகத்தடைகளில் ஏறி, இறங்கினாலும் இலக்கை நோக்கிய தனது பயணத்தை மிக இலகுவாக மேற்கொண்டு முன்னேறிச் செல்ல முடியும். கல்வி, வேலை, வாழ்க்கை, எண்ணம், செயல் என அனைத்துக்குமான அடிப்படை ஒழுக்கம் என்பதை உணர்ந்து கொண்டால் நிச்சயம் அது உயிருக்கும் மேலானது என்பதை ஏற்றுக் கொள்வதில் எந்த சிக்கலும் இருக்காது.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும். – திருக்குறள்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Sreeja
First published:

Tags: Children, Lifestyle, Lifestyle change