ஊரடங்கு காலத்தில் மக்களின் அளவுக்குமீறிய குடிப்பழக்கம் ஒவ்வொரு வாரத்திற்கும் 20% அதிகரிப்பு: ஆய்வில் தகவல்!

ஊரடங்கு காலத்தில் மக்களின் அளவுக்குமீறிய குடிப்பழக்கம் ஒவ்வொரு வாரத்திற்கும் 20% அதிகரிப்பு: ஆய்வில் தகவல்!

மாதிரி படம்

வீட்டில் அதிக நேரம் செலவிடுவது குடிப்பழக்கத்தை அதிகரிக்கும் ஒரு வாழ்க்கை அழுத்தமாகும். கொரோனா தொற்றுநோய் இந்த மன அழுத்தத்தை அதிகப்படுத்தியிருக்கலாம்.

 • Share this:
  2020ம் ஆண்டு தொடக்கத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளை இன்னும் புரட்டிப்போட்டு வருகிறது. ஒரு வருடமே முடியப்போகும் தருவாயிலும் வைரஸ் நம்மை விடுவதாக தெரியவில்லை. வைரஸ் தொற்று ஆரம்பகாலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் போடப்பட்ட பின்னர் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்தது. மேலும் பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவ ஆரம்பித்ததால் மீண்டும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

  மேலும் மக்களின் இயல்பு வாழக்கை வெகுவாக மாறியது. வீட்டிலிருந்தபடியே வேலை செய்வது புதிய வழக்கமாக கொண்டுவரப்பட்டது. மேலும் சமூக இடைவெளி, சுத்திகரிப்பான்கள், முகக்கவசங்கள் ஆகியவை மனித வாழ்க்கையில் அங்கமாகவே மாறிவிட்டன. இவை அனைத்தும் கொரோனா பரவலை தவிர்க்க கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளாக இருந்தாலும், ஊரடங்கு மக்களின் மேலும் சில பழக்கவழக்கங்களை மாற்றியுள்ளது. அதில் ஒன்று தான் குடிப்பழக்கம்.

  அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ட்ரக் அண்ட் ஆல்கஹால் அப்யூசில் (American Journal of Drug and Alcohol Abuse) வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், ஊரடங்கு காலத்தில் இளம் வயதினரிடையே தீங்கு விளைவிக்கும் குடிப்பழக்கம் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக அமெரிக்காவில் கிட்டத்தட்ட 18 வயதுக்கு மேற்பட்ட 2,000 பேரின் ஒரு கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அதனடிப்படையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தூண்டப்பட்ட அபாயகரமான குடிப்பழக்கத்திற்கும், வாழ்க்கை அழுத்தங்களுக்கும் இடையிலான தேசிய உறவை இந்த ஆராய்ச்சி முதன்முதலில் எடுத்துக்காட்டியுள்ளது.  மார்ச் மாத நடுப்பகுதியிலிருந்து ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை இளம் வயது அமெரிக்கர்களிடம் வெப் (web) அடிப்படையிலான, சுய அறிக்கை கணக்கெடுப்பைப் பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த கண்டுபிடிப்புகள் குடிப்பழக்கம் உள்ள அடல்ட் வயதினர் தற்போது அதிகப்படியான அளவில் மது அருந்துவதைக் காட்டுகின்றன. குறிப்பாக, ஊரடங்கு காலத்தில் அளவுக்கு மீறிய மது அருந்தும் தன்மை 19% அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது, ஆண்கள் சுமார் 2 மணி நேரத்திற்குள் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மதுபான பாட்டில்களையும், பெண்கள் நான்கு அல்லது மேற்பட்ட மதுபானங்களையும் உட்கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

  அதேபோல, அதிகப்படியான அளவில் மதுஅருந்துபவர்களின் ஒட்டுமொத்த ஆல்கஹால் உட்கொள்ளல், அதிகம் குடிக்காதவர்களை விட இரு மடங்கு அதிகரித்துள்ளது. டெக்சாஸ் ஹெல்த் சயின்ஸ் சென்டர் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் (Texas Health Science Center School of Public Health) இது தொடர்பான ஆய்வை நடத்தியது. அதில் அளவுக்கு மீறி குடிப்பவர்கள் சில சந்தர்ப்பத்தில் சராசரியாக நான்கு பானங்களை குடித்துள்ளனர். இது சாதாரணமாக குடிப்பவர்கள் எடுத்துக்கொள்ளும் இரண்டு பானங்களுடன் ஒப்பிடும்போது இருமடங்கு அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது.

  இந்த ஆய்வு அதன் சொந்த வரம்புகளை சுட்டிக்காட்டியது. இது ஒரு சிறிய அளவிலான குழுவில் நடத்தப்பட்டது ஆகும். மேலும் மக்கள்தொகையில் ஒரு பெரிய பகுதிக்கு இது பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. குடிப்பழக்கம் தொடர்பான ஆய்வுகள் பற்றி டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் பிஎச்.டி வேட்பாளர் சீதாரா வீரகூன் கூறியதாவது, " வீட்டில் அதிக நேரம் செலவிடுவது குடிப்பழக்கத்தை அதிகரிக்கும் ஒரு வாழ்க்கை அழுத்தமாகும். கொரோனா தொற்றுநோய் இந்த மன அழுத்தத்தை அதிகப்படுத்தியிருக்கலாம். எதிர்கால ஆராய்ச்சி அதிகப்படியான குடிப்பழக்கத்தைத் தணிப்பதற்கான புதுமையான முயற்சிகளைத் தழுவி செயல்படுத்துவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும்" என பரிந்துரைத்துள்ளார்.

   

   

   

   

   

   
  Published by:Sivaranjani E
  First published: