கால் நகங்களையும் கொஞ்சம் கவனிங்க!

கால் நகங்களையும் கொஞ்சம் கவனிங்க!

பாத நக பராமரிப்பு

படுக்கைக்கு செல்லும் முன்போ அல்லது காலை படுக்கையில் இருந்து எழுந்த பின்போ, உங்கள் பாதங்களை மிதமான வெந்நீரில் கழுவுங்கள்.

 • Share this:
  நம்மில் பலரும் கை நகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் பாதியைக் கூட கால் நகங்களுக்குக் கொடுப்பதில்லை. நகத்தில் அழகு மட்டுமல்ல, ஆரோக்கியமும் ஒளிந்திருக்கிறது. கைகளைப் போல், கால்கள் பெரும்பாலும் வெளிப்படையாகத் தெரியாது என்பதாலோ என்னவோ, நாமெல்லாம் கால் நகங்களை கண்டுக் கொள்வதில்லை. கால் நகத்தைப் பராமரிக்கனுமா? அதுக்கெல்லாம் பார்லருக்கு போய், பெடிக்யூர் பண்ற அளவுக்கு வசதியில்ல... என நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. அதனால் வீட்டிலேயே உங்களது பாதங்களை பராமரிக்கும் அசத்தல் ஐடியாவை இங்கே தருகிறோம்...

  பாத நகங்களை அதிகம் வளரவிடக்கூடாது. ஏனெனில் அவை அடர்த்தியாக வளர்ந்து திக்காகிவிடும். அதனால் சதையில் குத்தி காயம் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் விரலைத் தாண்டி வளர விடாமல் வெட்டி விட வேண்டும். பெரும்பாலும் கால் நகங்கள் கடினமாக இருக்கும். அதனால் குளித்தவுடன் நகம் வெட்டினால், அந்த வேலை ஈஸியாக முடியும். இல்லையெனில் சிறிது தேங்காய் எண்ணெய் தடவி சில நிமிடம் கழித்தும் வெட்டலாம்.

  படுக்கைக்கு செல்லும் முன்போ அல்லது காலை படுக்கையில் இருந்து எழுந்த பின்போ, உங்கள் பாதங்களை மிதமான வெந்நீரில் கழுவுங்கள். இதனால் பாதத்தில் ரத்த ஓட்டம் அதிகமாகும். பளபளப்பான நகங்கள் வேண்டும் என்பவர்கள், கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக மாறும். பாதாம் எண்ணெய்யை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். இதை மாத்திற்கு ஒரு முறை செய்யலாம். ஆலிவ் எண்ணெய்யை மிதமான சூட்டில் விரல்களில் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதை தினமும் செய்து வர, நகங்கள் ஆரோக்கியமாக வளரும்.

  நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்குறைபாடே காரணம். அதனால் நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும். இது நகத்திற்கு மட்டுமல்ல, மொத்த உடலுக்குமே நன்மை பயக்கும்!
  Published by:Shalini C
  First published: