Exclusive: ஒருமுறையாவது நயன்தாராவிற்கு மேக்-அப் போட வேண்டும் என்பதே என் ஆசை - கண்ணன் ராஜமாணிக்கம்

அடுத்த முயற்சியாக இறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்பனையை மறுஉருவமாக ஒப்பனை செய்ய வேண்டும் என்பதே திட்டம் என்று கூறியுள்ளார்.

Exclusive: ஒருமுறையாவது நயன்தாராவிற்கு மேக்-அப் போட வேண்டும் என்பதே என் ஆசை - கண்ணன் ராஜமாணிக்கம்
கண்ணன் ராஜமாணிக்கம்
  • Share this:
சமீபத்தில் நயன்தாரா ஃபோட்டோஷூட் செய்தது போன்ற புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலாகப் பரவியது. இந்த லாக்டவுனில் நயன்தாரா ஃபோட்டோஷூட் எடுத்தாரா என பலரும் ஒரு கணம் ஆச்சரியப்பட்டார்கள். பின் நன்கு உற்று நோக்கிய பின்புதான் தெரிந்தது அது நயன்தாரவைப் போல் மேக்அப் செய்த பெண் என்று..

என்னது நயன்தாராவைப் போல் முகத்தோற்றம் வேண்டுமென்றால் மேக்-அப் செய்தாலே சாத்தியமா? என ஆச்சரியமாக உள்ளதா..? உங்கள் ஆச்சரியத்தை சாத்தியமாக்கியவர்தான் கண்ணன் ராஜமாணிக்கம்.

மலேசியாவைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணரான இவருக்கு மேக்-அப்பில் சாத்தியமில்லாதது எதுவுமில்லை. ஒரு ஆண் மேக் அப் போடுகிறாரா என்கிற விமர்சனங்களைக் கடந்து இன்று அவர்தான் எனக்கு மேக்-அப் போட வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கும் பெண்களின் பட்டியல் ஏராளம். இவரின் டேட் கிடைக்கவில்லை எனில் தன் திருமணத்தையே அவர் தரும் டேட்டிற்கு மாற்றிக்கொள்கிறார்கள் எனில் ஆச்சரியம்தான்.


குடும்ப சூழல், பொறுப்புகளால் இந்த தொழிலை கையிலெடுத்த கண்ணன் இன்று தன் பயிற்சி வகுப்புகள் மூலம் பலருடைய வருமானத்திற்கும் காரணமாக இருக்கிறார்.
மதுரை சொந்த ஊராகக் கொண்டு மலேசியாவிற்கு இடம் பெயர்ந்த இவரது குடும்பம் இன்று இவருடைய புகழால் அடையாளம் காணப்படுகிறது. எந்த வேலை செய்தாலும் அதில் நாம் அடையாளத்தைப் பதிக்க வேண்டும் , புது புது முயற்சிகளை நோக்கிய பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் இவருடைய முழு நேர சிந்தனை. அப்படித்தான் இந்த நயன்தாரா மேக்அப் மறுஉருவத்தை செய்துள்ளார் “

கொரோனாவால் உலகமே போராடிக்கொண்டிருக்கிறது. பலரும் வீட்டில் முடங்கியிருப்பதால் மன அழுத்தத்தில் உள்ளனர். நானும் அப்படித்தான் இருந்தேன். இதிலிருந்து வெளியேற, என்னை மடைமாற்றம் செய்யவே இந்த மேக்அப் ஐடியா தோன்றியது. அப்படி முதலில் கோலிவுட்டிலிருக்கும் எனக்கு பிடித்த நடிகைகளின் பட்டியலிலிருந்து துவங்கலாம் என முதலில் ஷ்ரேயாவின் மேக்அப்பை மறுஉருவம் செய்தேன். அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. அதன்பிறகுதான் நயன்தாராவை முயற்சி செய்தேன் “ என தன் அனுபவத்தை விளக்குகிறார்.

மேலும் தொடர்ந்த அவர் “நயன்தாராவின் மேக்-அப் சாதாரண விஷயமல்ல. அவர் புருவம், தாடைப் பகுதி, கண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். அதேபோல் அவருக்கு யாருக்குமே இல்லாத சிறப்பு விஷயம் உதட்டிற்கு மேல் இரண்டு நரம்புகள் தெரியும். அதன் நடுவே மச்சம் இருக்கும். அதை மேக்அப் மூலம் கொண்டு வருவதற்கு மிகவும் சிரமப்பட்டேன். விஸ்வாசம் படத்தில் வரும் மேக்அப்தான் தற்போது டிரெண்ட் என்பதால் அந்த மேக்-அப்பை முயற்சி செய்தேன்” என்றார்.
”அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததும் பலரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்தது. ரசிகர்கள் பலர் எனக்கு மெசேஜ் செய்து பாராட்டு தெரிவித்தனர். நிறைய பேர் விக்னேஷ் ஷிவனிற்கு டேக் செய்து பகிர்ந்துள்ளனர். நான் எதையும் எதிர்பார்க்காமல் மன அமைதிக்காக செய்த விஷயம் இந்த அளவிற்கு பரவியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எனக்கு நயன்தாராவிற்கு மேக்அப் போட வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் இந்த மேக்-அப் மூலம் அது நிறைவேறியதைப் போன்ற மகிழ்ச்சி கிடைத்துள்ளது. அவருக்கு மேக்அப் போட்டிருந்தால் கூட எல்லோரும் அருமை என்று முடித்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் இப்படி மரு உருவம் செய்ததால் தெரியாத பலரும் என்னை பாராட்டி வருகின்றனர். சினிமா பிரபலங்களும் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் போட்டுள்ளனர் என்று மகிழ்ச்சி பொங்க பேசுகிறார்.

இவரின் இந்த சிறந்த முயற்சியால் நயன்தாராவின் ரசிகர்கள் பலர் காஷ்மோராவில் நயன்தாராவின் மேக்-அப்பையும் இப்படி செய்து போட முடியுமா என்று கேட்டுக்கொண்டுள்ளனர். அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப காஷ்மோரா மேக்அப் - ஐ பகிரவுள்ளார். தற்போது மாடலாக இருக்கும் அந்த பெண்ணின் நிஜ முகமே மறந்து போய் விட்டதைபோல் அவரை காணும்போது நயன்தாராவை அருகில் காண்பதுபோல் உள்ளதாகவும் கூறுகிறார்.
இவரின் இந்த முயற்சி இதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து பல நடிகர்கள் குறிப்பாக பழைய நடிகைகளின் ஒப்பனைகளை மறுஉருவம் செய்ய வேண்டும் என்பதே இவரின் ஆசையாம். எனவே அடுத்த முயற்சியாக இறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்பனையை மறுஉருவமாக ஒப்பனை செய்ய வேண்டும் என்பதே திட்டம் என்று கூறியுள்ளார்.

எதிர்பார்ப்புகள் இல்லாத உழைப்பு சாதாரண மனிதனைக் கூட நட்சத்திரமாக ஜொலிக்கச் செய்யும் என்பது இவருடைய விஷயத்தில் சாத்தியமாகியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.
First published: July 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading