இஞ்சியில் கூட அழகுக் குறிப்பா..? எப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம் தெரியுமா?

மாதிரி படம்

நம் சருமத்தின் தன்மையை மேம்படுத்துவதில் இஞ்சியின் பங்கு முக்கியமானது.

  • Share this:
நம் சருமத்தின் தன்மையை மேம்படுத்துவதில் இஞ்சியின் பங்கு முக்கியமானது. இஞ்சி டீ, இஞ்சி காபி, இஞ்சி ஊறுகாய் என இஞ்சியை பெரும்பாலும் நாம் உடலுக்குள் எடுத்துக்கொள்வோம் ஆனால் உடலுக்கு வெளியே அதாவது சருமத்தின் மீது அவற்றை அப்ளை செய்வது பற்றி கேள்வி பட்டதுண்டா? முகத்துக்கு செயற்கை பொருள்களை பயன்படுத்துவதை காட்டிலும் இயற்கை பொருள்களை பயன்படுத்துவதன் மூலம் சரும பிரச்சனைகள் இல்லாமல் நம்மால் இருக்க முடியும்.

சருமப் பராமரிப்பு என்று சொல்வதை காட்டிலும் சரும பிரச்சனைகள் உண்டாகும் போது இஞ்சி பலவிதமான நன்மைகளை சருமத்துக்கு அளிக்கிறது. முகப்பருக்களை தவிர்க்கும் பொருள்களில் இஞ்சி சாறுக்கும் பங்குண்டு. இஞ்சி வலுவான ஆன்டி-செப்டிக் பண்புகளை கொண்டிருப்பதால் இவை சருமப் பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் இருக்கும். இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே என்பவர்கள் இஞ்சியை எப்படியெல்லாம் இஞ்சியை பயன்படுத்தலாம் என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.



முகப்பருவை விரட்டும் இஞ்சி:

முகத்தில் உண்டாகும் முகப்பருவுக்கு இஞ்சியை பயன்படுத்தி தீர்வு காண முடியும். இஞ்சி அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதால் இவை முகப்பருக்களை அடியோடு நீக்க உதவுகிறது முகப்பருக்களால் வடுக்கள், காயங்கள் உண்டானாலும் அவையெல்லாம் நீங்கி முகம் தெளிவாக இருக்க இஞ்சி உதவுகிறது. முகப்பரு இருப்பவர்கள் முகத்தில் இஞ்சி சாறை தடவி வருவதன் மூலம் விரைவாக முகப்பருக்கள் மறைவதை காணலாம். இஞ்சி, முகத்தில் எரிச்சலை உண்டு செய்யுமோ என்று நினைப்பவர்கள் இஞ்சி சாறுடன் பன்னீர் கலந்து தடவ வேண்டும்.

வயது முதிர்வை தடுக்கிறது:

வயதான பிறகு வரும் முகத்தோற்றத்தைக் காட்டிலும் இளவயதிலேயே முகத்தில் சுருக்கமும் வயதான தோற்றமும் சிலருக்கு ஏற்பட்டுவிடுகிறது. இஞ்சியை இந்தகைய பராமரிப்புக்கு பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் வயதான தோற்றத்தை தடுக்க முடியும். இஞ்சியில் ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் உள்ளது. இவை சருமத்தில் முதிர்வை தடுக்க உதவுகிறது. ரத்த ஓட்டத்தை தூண்டி சருமத்துக்கு ஊட்டச்சத்து கிடைக்க வழி செய்வதால் சருமத்தில் இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது. சருமத்தை திடமாக நெகிழ்வில்லாமல் வைத்திருப்பதால் சுருக்கமின்றி பொலிவாக இளமையாக வைக்க உதவுகிறது. சருமத்தை இவை சுத்தமும் செய்வதால் சருமமும் ஜொலிப்பாக இருக்கும்.



இஞ்சி ஃபேஸ் பேக்:

முகம் சுத்தமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டுமென்றால் இஞ்சி ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்த வேண்டும். இவை முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வெண் திட்டுகள், வடுக்கள் போன்றவற்றை அகற்றி முகத்தை சுத்தமாக அழகாக வைக்க உதவும். இஞ்சியை தோல்சீவி சிறு துண்டுகளாக நறுக்கி, காயவைத்து மிக்ஸியில் நைஸாக ஈரமில்லாமல் பொடிக்கவும். இதனுடன் பால் பவுடர் அல்லது சந்தனத் தூளை எடுத்து சம அளவு கலந்து பன்னீர் விட்டு குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் அழுக்குகளும் கரும்புள்ளிகளும் வெளியேறும். அதிகப்படியான சரும பாதிப்பை கொண்டிருப்பவர்கள் வாரத்துக்கு இரண்டு முறை இதை பயன்படுத்தினாலே விரைவில் பலன் கிடைக்கும்.

பிரகாசமான முகத்திற்கு:

இஞ்சி மூலிகை தன்மை கொண்டதோடு டோனிங் பண்புகளையும் கொண்டுள்ளது. இஞ்சியை தோல் நீக்கி சீவி தேங்காய்த்துருவல் போன்று துருவி கொள்ள வேண்டும். துருவிய இஞ்சியை மிக்சியில் இலேசாக ஒரு சுற்று மட்டும் சுற்றி மசித்து, தேன், பன்னீர் கலந்து ( தேவையெனில் சந்தனபொடி) ஃப்ரிட்ஜ்ஜில் குளிர வைக்கவும். பிறகு அதை முகம் முழுக்க தடவி அரை மணி நேரம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சருமம் மிருதுவாகும் கூடுதல் பிரகாசத்தோடு.



சரும பிரச்சனை:

சிலருக்கு சருமத்தில் எரிச்சல், சிவப்பு நிற தடிப்பு போன்றவை இருக்கும் அவர்களுக்கு இஞ்சி சாறு நிச்சயம் உதவும். கார்ப்பு நிறைந்த இஞ்சி சாற்றை சருமத்தின் மீது தடவினால் எரிச்சலை கிளப்புமே என்று நினைக்க வேண்டாம். இவை சருமத்தின் இயல்பு நிலையை மீட்டு எரிச்சலையும் குறைக்க உதவுகிறது. இஞ்சி சிறந்த நச்சு நீக்கியாகவும் சருமத்தை சுத்தம் செய்யும் பொருளாகவும் விளங்குகிறது. முகத்தின் கடினத்தன்மையை மாற்றி முகத்தை மென்மையாக்கிட இவை உதவும். இளம் இஞ்சியின் தோலை சீவி பாதியாக நறுக்கி சாறோடு முகத்தில் வட்ட வடிவில் மசாஜ் செய்துவர வேண்டும். தொடர்ந்து 6 வாரங்கள் வரை இதை செய்து வந்தால் முகத்தில் தழும்புகள், அம்மை வடுக்கள் போன்ற ஆறாத ரணம் இருந்தாலும், அனைத்திலிருந்தும் விடுதலை பெற முடியும்.

இஞ்சியை முகத்துக்கு பயன்படுத்தும் போது இள இஞ்சியாக இருக்க வேண்டும். சற்று முற்றலாக இருந்தாலும் அவை சருமத்தில் எரிச்சலை உண்டாக்கிவிடவும் வாய்ப்புண்டு. இஞ்சி சாறுடன் பன்னீர் கலந்தும் பயன்படுத்தலாம். பெரும்பாலும் இஞ்சி சாறை நேரடியாக சருமத்தின் மீது வைக்காமல் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து குளிரவைத்த பிறகு பயன்படுத்துவது நல்லது.

 
Published by:Sivaranjani E
First published: