Home /News /lifestyle /

குளிர்காலத்தில் உங்கள் முடி அதிகம் உதிர்கிறதா? இந்த பொருட்களே மருந்தாகலாம்.. ட்ரை பண்ணுங்க..

குளிர்காலத்தில் உங்கள் முடி அதிகம் உதிர்கிறதா? இந்த பொருட்களே மருந்தாகலாம்.. ட்ரை பண்ணுங்க..

மாதிரி படம்

மாதிரி படம்

மற்ற காலங்களை விட குளிர்காலத்தில் முடி வறட்சி, அரிப்பு தொல்லை போன்றவை அதிகமாகவே இருக்கும்.

குளிர் காலங்களில் நம் தலைமுடியைப் பராமரிப்பது பெரும் சிக்கலான ஒன்று. இந்தக் காலக்கட்டத்தில்தான் தலை முடி மற்றும் உடல் சருமம் அதிக அளவு பாதிப்புக்கு உள்ளாகும். சிலருக்கு முடி இல்லை என்பது ஒரு பிரச்சனையாக இருந்தாலும், இருக்கும் முடியை பாதுகாப்பது என்பது கடினத்திலும் கடினமான வேலையாக உள்ளது. சாதாரணமாக, மற்ற காலங்களை விட குளிர்காலத்தில் முடி வறட்சி, அரிப்பு தொல்லை போன்றவை அதிகமாகவே இருக்கும்.

வெயில் காலத்தில் உடல் நன்றாக வியர்க்கும். கோடையில் நிறைய தண்ணீர் குடிப்பதால், வியர்வை வழியாகவும், சிறுநீர் மூலமாகவும் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும். ஆனால் குளிர்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால், அதிகம் வியர்க்காது. இதனால் சில பாதிப்புகள் ஏற்படும். பரபரப்பான வாழ்க்கையில் பலருக்கும் முடி உதிரும் பிரச்னை ஏற்படுகிறது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு முடியை பராமரிப்பதற்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. இதற்காக பல வித ஷாம்பு, கண்டிசனர்களை பயன்படுத்துவார்கள்.

ஆனால் இயற்கையான முறையில் முடிகளை பாதுகாப்பது இன்னும் நல்ல பலன்களை தரும். குளிர்காலத்தில் சருமத்தை போலவே ஸ்கேல்ப்பும் வறண்டுவிடும். இதனால் கூந்தல் சொரசொரப்பாக எளிதில் உடையும் தன்மையை பெற்றுவிடும். வறண்ட கூந்தலில் (hair) பொடுகு தொல்லையும் அதிகரித்து முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கும். பின்வரும் எளிய வீட்டு வைத்தியங்களை பின்பற்றுவதன் மூலம் முடி நன்றாக வளர்வதற்கு மட்டுமல்லாமல், முடி கொட்டுவதை குறைக்கவும் அது உதவும். இதனால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. எனவே அவற்றில் சிலவற்றை இப்போது காண்போம்.பூசணி விதை மற்றும் தயிர் :

சுமார் 100 கிராம் பூசணி விதையை தூள் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை 200 மில்லி கடுகு எண்ணெயில் சூடாக்கவும், அதில் 100 கிராம் ஆம்லாவை சேர்க்கவும். இந்த கலவையை அறை வெப்பநிலையில் குளிர்வித்து பின்னர் அதை உங்கள் முடியில் தடவுங்கள்.

குளிர்காலத்தில் பொடுகு பிரச்சினை தவிர்க்க முடியாத ஒன்றாகும். இதற்கு பூசணி விதையை தூள் செய்து இதனுடன் வெந்தயத்தை நீரில் நன்கு ஊறவைத்து மறுநாள் அரைத்து அதனுடன் தயிர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை தலைமுடியின் வேர்கால்கள் வரை நன்கு வருடி அரைமணிநேரம் கழித்து குளித்து வர வேண்டும். நாளடைவில் பொடுகு தொல்லை நீங்கிவிடும். தலையில் அரிப்பு போன்ற பிரச்சினையும் ஏற்படாது.

வீட்டில் இருக்கும் பொருட்களால் ஒரே நாளில் சரும பொலிவை அதிகரிக்கலாம்!

தேங்காய் பால் மற்றும் வெங்காயச் சாறு :

முதலில் நல்ல தேங்காய் துண்டுகளை அரைத்து அதில் இருந்து பால் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை தலை முடி வேர்களில் படும்படி நன்றாக தேய்த்து மசாஜ் செய்து 2 மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இதில் உள்ள இரும்பு, பொட்டாசியம் மற்றும் அத்தியாவசிய சில கொழுப்பு சத்துக்கள் இயற்கையான முடி வளர்ச்சிக்கு பயனளிக்கும்.

இதேபோல தலை முடி வளர்ச்சிக்கு வெங்காய சாறு மிகவும் பலனளிக்க கூடியது. இதை பலரும் நீண்ட காலமாக பின்பற்றி வருகின்றனர். வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி அதனை நன்றாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதனை தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்து, 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடுங்கள். பின்னர் ஷாம்பு அல்லது சிகைக்காய் தேய்த்து தலைக்கு குளித்து விடுங்கள். வெங்காயச் சாறு தேய்ப்பதன் மூலம் முடி உதிர்வை தவிர்க்கலாம். மேலும் முடி மீண்டும் நன்றாக வளர இது உதவும்.முட்டை மற்றும் வெந்தயத்தின் பயன்பாடு : 

முட்டை முடி வளர்ச்சிக்கு நீண்ட காலமாக பின்பற்றப்படும் முறை என்றே சொல்லலாம். முதலில் முட்டையின் வெள்ளைக் கருவை பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஆலிவ் ஆயிலை கலந்தும் முடியில் தேய்த்துக் கொள்ளலாம். முடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்க்க வேண்டியது முக்கியம். அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்கலாம். முட்டையில் அதிக அளவில் புரதங்கள் காணப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல் கந்தகம், துத்தநாகம், இரும்பு, அயோடின் சத்துக்களும் உள்ளன. இது உங்களது முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

முடி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவது வெந்தயம். வெந்தயத்தை ஊற வைத்து நன்றாக அரைத்து பேஸ்ட் பதத்திற்கு வந்தவுடன் எடுத்துக் கொள்ளுங்கள். இதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து உச்சந்தலையில் தேய்த்து அரை மணி நேரத்திற்கு பிறகு குளிக்கலாம். முடி வளர்ச்சிக்கு உதவுவது மட்டுமல்லாமல், முடியின் இயற்கையான நிறத்தை பாதுகாப்பதிலும் வெந்தயம் அதிகம் உதவுகிறது.

நெல்லி மற்றும் கற்றாழை:

முதலில் 2 டீஸ்பூன் நெல்லித் தூள், 2 டீஸ்பூன் சிகைக்காய் தூள் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும். அதனை உச்சந்தலையில் தடவி 60 நிமிடங்களுக்கு பிறகு குளிக்க வேண்டும். முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தி, முடி உதிர்வை குறைக்க இது உதவும். மேலும் இதில் உள்ள வைட்டமின் சி முடி நரைப்பதை குறைக்கும். மேலும் பொடுகுக்கு எதிராக போராடும் திறனும் இதில் உள்ளது.

கற்றாழை மற்றும் வெந்தயத்தை ஒன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்து தலையில் தேய்த்துக் கொள்ளலாம். 30 நிமிடங்களுக்கு பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். கற்றாழையில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இதில் உள்ள வைட்டமின் மற்றும் தாதுக்கள் முடி வளர்ச்சிக்கு உதவும். உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தவும் இந்த முறை உதவும். பொடுகு தொல்லைகளில் இருந்தும் எளிதில் நீங்கள் விடுபடலாம்.

குளிர்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால், அதிகம் வியர்க்காது.இதனால் நச்சுக்கள் உடலில் தங்கி தலைமுடியின் வேர் பகுதி பாதிக்கப்படும். இதுதான் தலைமுடி உதிர்வு அதிகமாக இருக்கிறது, மேற்சொன்னவற்றை பயன்படுத்தி முடிஉதிர்வை முற்றிலும் நிறுத்திடுங்கள்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Hair, Hair fall, Hair loss

அடுத்த செய்தி