உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் என்ன செய்தாலும் போகவில்லையா? கரும்புள்ளியை விரைவில் அகற்ற முயற்சிப்பவர்கள் தவறாமல் இதை படியுங்கள்...
முகத்தில் தோன்றும் பருக்களை படாதபாடு பட்டு அகற்றினாலும் அது நினைவாக விட்டுச் செல்லும் கரும்புள்ளிகள் (Dark Spots) பெண்களின் நிம்மதியை குலைத்துவிடுகிறது. ஒழுங்கற்ற மாதவிடாய், மெனோபாஸ் போன்ற ஹார்மோன் செயல்பாடுகளின் போது ஏற்படும் மாற்றங்கள் முகப்பரு வர காரணமாக அமைகிறது. அத்தோடு முக அழகை கெடுக்கும் முகப்பரு, கரும்புள்ளிகள், வடுக்கள், தழும்புகள் ஆகியவற்றையும் பரிசாக கொடுத்துவிட்டு செல்கிறது. உலகம் முழுவதும் அனைத்து வயது பெண்களையும் வாட்டி வதைக்கும் முகப்பருவால் ஏற்படும் கரும்புள்ளி பிரச்சனைகளை சரி செய்ய மருத்துவ ரீதியாக என்னென்ன வழிமுறைகள் உள்ளன என தெரிந்து கொள்ளுங்கள்.
முகப்பரு முகத்தில் இரண்டு விதமான பிரச்சனைகளை உருவாக்கிறது, ஒன்று தழும்புகள் மற்றொன்று கரும்புள்ளிகள். முகத்தில் தோன்று பருக்களை தோல் தானாக சரி செய்ய முயற்சிக்கும் போது, அது கொலாஜன் எனப்படும் புரதத்தை வெளிப்படுத்துகிறது. இந்த கொலாஜன் சரியான விகிதத்தில் கிடைக்காத போது, தோலில் ஏற்படும் மாற்றங்கள் கரும்புள்ளியாக மாறுகிறது.
பொதுவாக பருக்களால் ஏற்படும் கரும்புள்ளிகள் 3 முதல் 9 மாதத்திற்குள் தானாக மறைய வாய்ப்புள்ளது. ஆனால் சில சமயங்களில் முகத்தில் தோன்றும் வடுக்கள், கரும்புள்ளிகளை சரி செய்ய வெளிப்புற சிகிச்சை தேவைப்படுகிறது.
மேலும் படிக்க : முதுகில் இருக்கும் பருக்களை நீக்கவேண்டுமா? இந்த இயற்கை டிப்ஸ்களை பின்பற்றுங்கள்..
பருக்களை கையாள்வது எப்படி?
பருக்களால் உருவாகும் கரும்புள்ளிகளை கையாள்வதை விட, நேரடியாக முகத்தில் வரும் பருக்களை குணப்படுத்த முயற்சிப்பது நல்ல பலனைக் கொடுக்கும். அதற்காக கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை கையாளுங்கள்..
1. எக்காரணம் கொண்டும் முகப்பருவை உடைத்து விடுவதை செய்யவே செய்யாதீர்கள். இதில் இருந்து வெளியாகும் பாக்டீரியா பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும்.
2. முகத்தில் அதிகப்படியாக உருவாகும் எண்ணெய் பசையை மென்மையான ஃபேஷ் வாஸ் கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள்.
3. தோல் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருத்தை மட்டுமே முகப்பருவை குணப்படுத்த பயன்படுத்த வேண்டும்.
4. வெடித்த அல்லது குணமாகும் கட்டத்தில் உள்ள முகப்பருவுக்கு ஒரு தனி ஆயில்மெண்டை பயன்படுத்துவது நல்லது.
மேலும் படிக்க : உதட்டிற்கு மேல் உள்ள வலி நிறைந்த பருவை எப்படி அகற்றுவது..?
கரும்புள்ளிகள் மீது மறந்தும் இதை செய்யாதீர்கள்:
1. முகப்பரு அல்லது கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் மீது வினிகர், தேன், இலவங்கப்பட்டை போன்ற வீட்டு வைத்தியங்களை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். இது மோசமான நிலையில் உள்ள பருக்கள் மீது செயல்பட்டு எதிர்வினைகளை உண்டாக்கலாம்.
2. மெடிக்கல் கடைக்காரர், நண்பர்கள் பரிந்துரைக்கும் ஆயில்மெண்ட்களை பயன்படுத்தாதீர்கள்.
தோல் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில சிகிச்சை முறைகள் பற்றி பார்க்கலாம்...
1. கெமிக்கல் பீல்: (Chemical Peels)
சருமத்தின் மீது ஒரு இரசாயனக் கரைசலை தடவி, அதனை அகற்றுவதன் மூலமாக சருமத்தின் பாதிப்படைந்த மற்றும் இறந்த தோல் அடுக்குகளை உரித்து அகற்றி, சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. இரசாயன கலவை எக்ஸ்ஃபோலியேட்டிங்காக செயல்பட்டு இறந்த செல்களை உதிரச் செய்து, புள்ளிகள் மற்றும் வடுக்களை அகற்ற உதவுகிறது.
2. லேசர் ஸ்பாட் குறைப்பு மற்றும் டோனிங்: (Laser Spot Reduction and Toning)
லேசர் சிகிச்சை முறை PIH அளவால் கடுமையாக பாதிக்கப்பட்ட கரும்புள்ளிகள், வடுக்களுக்கு சிறந்த சிகிச்சை முறை. தோலுக்குள் செலுத்தப்படும் லேசர் ஆனது கரும்புள்ளிகள் உள்ள இடத்தை மட்டும் குறிவைத்து அதன் நிறத்தை சமன் செய்கிறது. இந்த சிகிச்சை தோலின் நிறத்தை விரைவாக சமன் செய்ய உதவுகிறது.
3. மைக்ரோநீட்லிங்: (Microneedling)
மைக்ரோநீட்லிங் என்பது சருமத்தின் மீது நூற்றுக்கணக்கான மெல்லிய ஊசிகளை வைத்து செயப்படும் சிகிச்சை. இந்த முறை உங்களுடைய முகத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தில் உள்ள வடுக்களை மறைவைக்க உதவுகிறது.
4. ஃபிராக்ஷனல் CO2 லேசர் சிகிச்சை: (Fractional CO2 Laser)
ஆழமான தழும்புகள் உள்ளவர்களுக்கு கோ2 லேசர் அளிக்கப்படும் சிகிச்சை முறையால் பாதிக்கப்பட்ட இடத்தில் தோலை மறு உருவாக்கம் செய்ய முடியும்.
5. பிளேட்லெட் ரிச் பிளாஸ்மா: (Platelet Rich Plasma)
பிளேட்லெட் அதிகமுள்ள பிளாஸ்மா என்பது சிகிச்சை தேவைப்படுபவரின் ரத்ததில் இருந்தே எடுக்கப்படும் செறிவூட்டப்பட்ட பிளாஸ்மா சீரம் ஆகும். இந்த பிளேட்லெட் பிளாஸ்மாக்களை ஊசி மூலமாக தோலில் செலுத்துவதன் மூலமாக புது கொலாஜன் உருவாகவும், திசுக்களை தேவையான இடத்தில் உருவாக்கவும் உதவுகிறது. இந்த சிகிச்சை முறை கரும்புள்ளிகளை விரைவாக குணப்படுத்த உதவுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.