அற்புதமான பருவநிலை மாற்றங்களைக் கொண்டு வரும் மழை, தொற்றுகளையும் உடன் அழைத்து வருகிறது. கால நிலை மாறும் போது, நம் சருமங்களில் மாற்றம் ஏற்படும். அதுவும், மழைக்காலத்தில், சருமப்பிரச்சனைகள் தோன்றுவது இயல்பு!
வெப்பமான மே மற்றும் ஜூன் மாதங்களுக்குப் பின், ஜூலை மாதம் பூமியை குளிர்விக்கும் வகையில், மழையை கொண்டு வருகிறது. அதே நேரத்தில், மழை பல்வேறு சருமப் பிரச்சனைகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எரிச்சல், அரிப்பு, அலர்ஜி, வெடிப்புகள் போன்ற சரும பாதிப்புகள் ஏற்படலாம். வருமுன் காப்பது நல்லது என்பதற்கு ஏற்ப, மழைக்காலத்தில் சருமத்தில் என்ன விதமான பாதிப்புகள் ஏற்படலாம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது, மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, அலர்ஜி ஏற்படாமல் எப்படி தடுப்பது என்பதைக் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
பருவ மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய பொதுவான சருமப்பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளும் இங்கே.
சருமத்தொற்று
மழைக்காலத்தில், இரு பாலினருமே சருமத்தில் ஏற்படக்கூடிய நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவார்கள். முகப்பரு, தோல் அழற்சி, தேமல் போன்றவை மிகவும் பொதுவான சருமப்பிரச்சனை என்றாலும், அதற்கு உடனே சிகிச்சையளிக்கவில்லை என்றால், தீவிரமான பாதிப்பாக மாறிவிடும்.
பல நேரங்களில், சருமத்தில் ஏற்படும் தொற்று, பேக்டீரியா அல்லது பூஞ்சையால் உண்டாகிறது. அதிகப்படியான வியர்வை, உடலில் நீர் குறைபாடு, ஈரப்பதமின்மை ஆகியவை இந்த பருவத்தில் சருமத்தொற்றை அதிகப்படுத்தும்.
இதற்கான தீர்வு:
அதிகப்படியான வியர்க்கும் சூழ்நிலையைத் தவிர்க்க வேண்டும். சருமத்தை உலர்வாக வைத்திருக்க வேண்டும். பொது கழிப்பிடத்தை பயன்படுத்தும் போது, சுகாதாரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கூடுதலாக, குறைந்தபட்சம் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். சருமத்தில் ஈரப்பதம் நீடித்திருக்க, மாயிஸ்ச்சரைசர் தடவ வேண்டும்.
ஹைப்பர்ஹிட்ரோசிஸ் அல்லது அதிகப்படியான வியர்வை
ஹைப்பர்ஹிட்ரோசிஸ் என்பது, உடலில் எந்தப் பகுதியிலும் அதிகப்படியாக வியர்வை சுரக்கும் நிலையைக் குறிக்கிறது. மழைக்காலத்தில் இது அதிகமாகும் மற்றும் உடல் துர்நாற்றத்துக்கு வழிவகுக்கும்.
இதற்கான தீர்வு:
அடிக்கடி குளிப்பது அதிகப்படியான வியர்வையை நீக்கும். மேலும், உடல் துர்நாற்றத்தை தவிர்க்க உதவும். தனிப்பட்ட முறையில், உடல் சுகாதாரத்தை பேண வேண்டும்.
ஹைப்பர்-பிக்மெண்டேஷன் – சரும நிறம் கருமையாகுதல்
பிக்மெண்டேஷன் என்பது சருமத்தில் ஏற்படும் நிறமாற்றம். இயல்பான நிறத்தை விட அடர் நிறமாகவோ, வெளிர் நிறமாகவோ மாறும். மழைக்காலத்தில், சருமத்தின் நிறம் இருந்து, கருமையாக அல்லது அடர் நிறமாக மாறும். இதற்கான காரணம், அதிகப்படியாக சுரக்கும் மெலனின் மற்றும் சூரியக்கதிர் மேலே படுமாறு வெளியே அதிக நேரம் செலவழிப்பது ஆகும்.
இதற்கான தீர்வு:
மழைக்காலம் வந்து விட்டால், தட்பவெப்பம் குறைவாக இருக்கும், சன்ஸ்க்ரீன் அணிய வேண்டாம் என்று பலரும் நினைப்பார்கள். ஆனாலும், சரும நிறம் கருமையாக மாற வாய்ப்புள்ளதால், சன்ஸ்க்ரீன் அணிந்து கொள்வது அவசியம்.
சருமத்தில் ஏற்படும் அலர்ஜி
மழைக்காலத்தில், மாசு அதிகமாக ஏற்படுவதால், சரும அலர்ஜி அதிகளவில் இருக்கலாம். இவை, அதிகமாக வெளிப்படும் உடல் பாகங்களான கழுத்து, கை, கால், பாதம் ஆகியவற்றில் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதற்கான தீர்வு:
சருமத்தில் ஏற்படும் அலர்ஜியை உடனே கட்டுப்படுத்த, ஆன்டிஹிஸ்டமைன்ஸ் உட்கொள்ள வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Beauty Tips, Monsoon Beauty tips, Skincare