பொடுகு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? இயற்கையான வழியில் தீர்வு காண்பது எப்படி?

பொடுகு

தலையில் இருக்கும் இறந்த செல்கள் மற்றும் பூஞ்சைகளால் பொடுகு பிரச்னை ஏற்படுகிறது.பொடுகை ஆரம்பத்திலே கண்டறிந்து சில இயற்கையான வழிகளை பின்பற்றினாலே விரைவில் சரி செய்யலாம்.

  • Share this:
பொடுகு அனைவருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகும், தலையில் இருக்கும் இறந்த செல்கள் மற்றும் பூஞ்சைகளால் பொடுகு பிரச்னை ஏற்படுகிறது. இதனை ஆரம்பத்திலேயே சரி செய்யாவிடில், நாளடைவில் வெள்ளை செதில்களை ஏற்படுத்தி தலை முழுவதும் பரவி விடும். அதுமட்டுமின்றி இந்த செதில்கள் சருமத்தில் விழுந்தால் முகப்பரு பிரச்சனைகளை உருவாக்கும். மேலும் பொடுகால் உச்சந்தலையில் அரிப்பு, கூந்தல் உதிர்வு போன்ற பிரச்சனைகளும் உண்டாகும்.

இதற்கு குளிர்கால காற்று, ஊட்டச்சத்து குறைபாடுள்ள உணவு, இரசாயனம் கலந்த ஷாம்புகள் முக்கிய காரணங்களாகும். வறண்ட காற்றின் விளைவாக குளிர்காலத்தில் அதிகமானோர் பொடுகு பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். அதேசமயம் கோடை காலத்தில் இந்த பிரச்னை சரி ஆகும். எனினும் பொடுகை ஆரம்பத்திலே கண்டறிந்து சில இயற்கையான வழிகளை பின்பற்றினாலே விரைவில் சரி செய்யலாம்.

பொடுகு ஏற்படுவதைத் தடுக்க பல வழிகள் உள்ளன, அவற்றில் சில.,

எண்ணெய் மசாஜ் :இயற்கை எண்ணெய்களைப் பயன்படுத்தி உங்கள் தலைமுடியை அடிக்கடி மசாஜ் செய்யுங்கள். தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்களை பயன்படுத்துங்கள். வாரத்திற்கு இரண்டு முறை இவற்றில் ஏதேனும் ஒரு வகை எண்ணெய்யை எடுத்து உச்சந்தலையில் நன்கு மசாஜ் செய்வதன் மூலம் உச்சந்தலையை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். இது பொடுகு உருவாகாமல் தடுக்கிறது. இந்த எண்ணெய்யை லேசாக சூடாக்கியும் மசாஜ் செய்யலாம், ஆனால் உங்கள் தலையில் எண்ணெய் பசை அதிக நேரம் இருக்காமல் வாஷ் செய்துவிடுவது நல்லது.

சூடான நீரை பயன்படுத்த வேண்டாம் :சூடான நீரால் தலைக்கு குளிப்பது தவறானது. சூடான நீரால் தலைக்கு குளித்தால் முடியை கடினமாக்குகிறது, மேலும் உச்சந்தலையில் வறட்சியை உண்டாக்குகிறது. இதன் விளைவாக கூந்தல் உதிர்வு மற்றும் பொடுகு பிரச்னை ஏற்படுகிறது. எனவே முடிந்தவரை குளிர்ந்த நீரை கொண்டே கூந்தலை அலசுங்கள்.

ஆப்பிள் சீடர் வினிகர் பயன்படுத்துங்கள் :

உங்கள் தலைமுடியை வாரத்திற்கு ஒரு முறை ஆப்பிள் சீடர் வினிகர் கொண்டு வாஷ் செய்யலாம். வினிகரில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் பண்பு பூஞ்சை அல்லது பாக்டீரியா வளர்ச்சியை ஆரம்பத்திலேயே அழிகிறது. இதனால் பொடுகு பிரச்னை விரைவில் சரியாகிறது.

போதுமான தண்ணீர் குடிக்கவும் :தண்ணீர் அருந்துவது நமது உடலுக்கு ஆரோக்கியமானது மட்டுமின்றி, வலுவான கூந்தலுக்கும் அவசியம். தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது. நம் உடலையும், உச்சந்தலையில் நீரேற்றத்தையும் வைத்திருக்கிறது, இதனால் பொடுகு பிரச்னையும் குறையும். பொதுவாக குளிர்காலத்தில் தாகமின்மை மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற காரணங்களால் மக்கள் குறைவான தண்ணீரைக் குடிகின்றனர். எனவே தான் குளிர்காலத்தில் பொடுகு பிரச்னை அதிகரிக்கிறது.

மன அழுத்தம் வேண்டாம் :பொடுகு ஏற்பட முக்கிய காரணம் மன அழுத்தம். மன அழுத்தம் நம் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது, இதன் விளைவாக நம் உச்சந்தலையில் அதிகப்படியான எண்ணெய் சுரக்கிறது, இதுவும் பொடுகு ஏற்பட முதன்மை காரணமாக இருக்கிறது.

ஆரோக்கியமான உணவு :சரும மற்றும் கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. கார்ப்ஸ் மற்றும் சர்க்கரை அதிகமாக உட்கொள்வது கூந்தல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. சர்க்கரை உணவுகள் எண்ணெய்களை உற்பத்தி செய்யும் செபேசியஸ் சுரப்பியைத் தூண்டுகின்றன. எனவே கார்போஹைட்ரேட் அல்லது சர்க்கரை உள்ள உணவுகளை தவிர்க்கவும். இதற்கு பதிலாக நெல்லிக்காய், கருவேப்பிலை, காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளை உங்கள் அன்றாட உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்.

ஷாம்பூவை கவனமாக தேர்வு செய்யவும் :உங்கள் ஷாம்பு அதிக கெமிக்கல்கள் நிறைந்ததாக இருக்க வேண்டாம். சாலிசிலிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றைக் கொண்டிருக்கும் பொடுகு எதிர்ப்பு ஷாம்புவை பயன்படுத்துங்கள். இது பொடுகை கட்டுப்படுத்தி, எரிச்சலைக் குறைக்க உதவுகிறது, இதனால் உங்கள் உச்சந்தலை பொடுகு குறையும். அதேபோல ஹேர் ஸ்ப்ரே, ஹேர் கலர், ஹேர் ட்ரையர் பின்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

இயற்கை பொருட்களை பயன்படுத்துங்கள் :வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை கொண்டே பொடுகு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். வெந்தயம், வேப்பிலை, முட்டை வெள்ளை கரு , எலுமிச்சை போன்றவை பொடுகை கட்டுப்படுத்த உதவும் இயற்கை பொருட்களாகும்.
Published by:Sankaravadivoo G
First published: