ஃபேஸ் மாஸ்க் அல்லது ஃபேஸ் ஸ்க்ரப்? இரண்டில் எது உங்கள் சருமத்திற்கு சிறந்தது என தெரியுமா?

ஃபேஸ் மாஸ்க் அல்லது ஃபேஸ் ஸ்க்ரப்? இரண்டில் எது உங்கள் சருமத்திற்கு சிறந்தது என தெரியுமா?

கோப்புப் படம்

ஃபேஸ் மாஸ்க் மற்றும் ஃபேஸ் ஸ்க்ரப் இடையே என்ன வித்தியாசம் என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?

  • News18
  • Last Updated :
  • Share this:
ஃபேஸ் மாஸ்க் மற்றும் ஃபேஸ் ஸ்க்ரப் இடையே என்ன வித்தியாசம் என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? உண்மையில், ஃபேஸ் மாஸ்க் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. அதேபோல ஒரு ஃபேஸ் ஸ்க்ரப் என்பது ஒரு ஆழமான சுத்திகரிப்பு செயல்முறை. இது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி சுத்தப்படுத்த உதவுகிறது. எனவே ஃபேஸ் மாஸ்க் மற்றும் ஃபேஸ் ஸ்க்ரப் இரண்டில் எது சிறந்தது என்ற கேள்விக்கு அழகு நிபுணர் ஷஹ்னாஸ் ஹுசைன் இரண்டுமே சருமத்திற்கு நன்மைகளை வழங்குகிறது என கூறுகிறார்.

இதுகுறித்து விளக்கிய அவர், முதலில் ஃபேஸ் ஸ்க்ரப் அப்ளை செய்து மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இது இறந்த செல்களை மென்மையாக மாற்றி நீக்குகிறது மற்றும் தோல் அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. உங்கள் சருமம் மென்மையாகவும், பிரகாசமாகவும் தோன்றும். இதனால் உங்கள் சரும நிறம் அதிகரிக்கும். மேலும் பிளாக்ஹெட்ஸ், பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது என ஷஹ்னாஸ் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ் ஸ்க்ரப்களை நீங்களே உங்கள் வீட்டில் தயாரிக்கலாம். உதாரணமாக, அரிசி தூள், பாதம் தூளை தயிரில் கலந்து ஒரு ஸ்க்ரப் தயாரிக்கலாம். இதேபோல பழுத்த பப்பாளி, அரிசி மாவு கொண்டும் தயாரிக்கலாம், இவை உங்கள் சருமத்தில் இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.

குறிப்பு : தோல் மிகவும் வறண்டதாக இருந்தால், அதிக பருக்கள் இருந்தாலோ ஸ்க்ரப்களை தவிர்க்கவும்.

சில ஃபேஸ் ஸ்க்ரப்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

ஓட்ஸ் ஸ்க்ரப் :

ஓட்ஸை நன்றாக பொடித்து அதனுடன் முட்டையின் வெள்ளை கருவை கலந்து உங்கள் முகத்தில் அப்ளை செய்து வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். சிறிது நேரம் உலர விடவும், பின்னர் தண்ணீரில் கழுவவும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் இதனை தொடந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். முட்டை வெள்ளை கரு மற்றும் ஓட்ஸ் இரண்டும் எண்ணெயை பசையை குறைக்க உதவுகின்றன.

பாதாம் ஸ்க்ரப் :

பாதாம் பருப்பை நன்கு அரைத்து, அதனுடன் தயிர் சேர்த்து மிக்ஸ் செய்யவும். இந்த கலவையை 2: 1 என்ற விகிதத்தில் சேர்த்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சிறிது மஞ்சள் தூள் சேர்க்கவும். இந்த கலவையை ஒன்றாக கலந்து முகத்தில் தடவவும். 5 நிமிடங்களுக்குப் பிறகு, மெதுவாக தேய்த்து, பின்னர் தண்ணீரில் கழுவவும், சருமம் பொலிவாகும்.

எள் - புதினா ஸ்க்ரப் :

எள் எடுத்து நன்கு பொடித்து அதனுடன் உலர்ந்த அரைத்த புதினா இலைகள், தேன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மூன்றையும் ஒன்றாக கலக்கவும். இந்த கலவையை முகம், கழுத்து பகுதிகளில் தடவி 5 நிமிடங்கள் உலர விடவும். பின்னர் மெதுவாக தேய்த்து தண்ணீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி பிரகாசமடையும்.

ஃபேஸ் மாஸ்க் மற்றும் அதன் பயன்கள் :

ஃபேஸ் மாஸ்க் என்பது சருமத்தின் இளமை தோற்றத்தை தக்கவைத்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். மேலும் இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் உங்கள் சரும மேற்பரப்பில் இரத்த ஓட்டம் சீராகி புத்துணர்ச்சியுடன் இருக்கிறது. பொதுவாக, ஃபேஸ் மாஸ்க் போடும் போது உதடுகளையும், கண்களை சுற்றியுள்ள பகுதியையும் தவிர்க்கவும். உங்கள் முகம் மற்றும், கழுத்து பகுதியில் தடவி அது காய்ந்ததும் கழுவ வேண்டும்.

சில ஃபேஸ் மாஸ்க் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

வறண்ட சருமத்திற்கான ஃபேஸ் மாஸ்க்

1 டீஸ்பூன் பால் பவுடரை எடுத்து இதனுடன் முட்டையின் வெள்ளை கருவை கலக்கவும். இந்த கலவையை பிரஷ் கொண்டு உங்கள் முகத்தில் தடவவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் வைத்து கழுவி வாருங்கள். இதனை வாரம் ஒரு முறை செய்து வந்தால் சருமம் புத்துணர்ச்சியாகும்.

எண்ணெய் சருமத்திற்கு ஃபேஸ் மாஸ்க்

முட்டையின் வெள்ளை கரு, 1 டீஸ்பூன் தேன், மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் முல்தானி மீட்டியை ஒரு பவுலில் எடுத்து கொள்ளுங்கள். இந்த கலவையில் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலக்கவும். இதனை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் அப்ளை செய்து 10 நிமிடங்களுக்கு பின்னர் கழுவி விடுங்கள். எண்ணெய் பசை நீங்கள் உங்கள் சருமம் பிரகாசமடையும்.

ஓபன் போர்ஸ் சருமத்திற்கு

உங்கள் சருமத்தில் ஓபன் போர்ஸ் எனும் விரிவாக்கிய துளைகள் இருந்தால், ஓட்ஸ் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள். இதனை தடவி 20 நிமிடங்களுக்கு பின்னர் கழுவுங்கள், உங்கள் சரும துளைகள் இறுக்கமடைந்து ஓபன் போர்ஸ் குணமாகிவிடும்.

Also read... உதடுகள் கருப்பாக உள்ளதா? இந்த எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து பாருங்க..

காம்பினேஷன் சருமத்திற்கு

ஒரு டீஸ்பூன் தயிர், சந்தன தூள் சேர்த்து உங்கள் முகம் முழுவதும் தடவி, காய்ந்ததும் தண்ணீரில் கழுவ வேண்டும். இது சருமத்தை மென்மையாக்க உதவுகிறது மற்றும் இயற்கை அழகை மீட்டெடுக்கிறது.

பழ ஃபேஸ் மாஸ்க்

ஒரு பாத்திரத்தில் அரைத்த வாழைப்பழங்கள், ஆப்பிள்கள், பப்பாளி, ஆரஞ்சு ஆகியவற்றை எடுத்து நன்கு ஒன்றாக மசித்து கொள்ளுங்கள். இதை உங்கள் முகத்தில் தடவவும். பின்னர் இதை 20 முதல் 30 நிமிடங்கள் வரை வைத்திருங்கள். பப்பாளி சருமத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. வாழைப்பழம் சருமத்தை இறுக்குகிறது, அதேபோல ஆப்பிள்களில் காணப்படும் பெக்டின், சருமத்தை நன்கு சுத்தப்படுத்த உதவுகிறது. மேலும் ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி பிரகாசத்தை வழங்குகிறது.

ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தும் போது உங்கள் தலைமுடியில் படாமல் பார்த்து கொள்ளுங்கள். மேற்கண்ட ஃபேஸ் மாஸ்க் மற்றும் ஃபேஸ் ஸ்க்ரப்களை பயன்டுத்தி உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் வைத்து கொள்ளுங்கள்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: