உலக மலேரியா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் ஏப்ரல் 25-ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று உலக மலேரியா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மலேரியா நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார நிறுவனத்தால், உலக மலேரியா தினம் கொண்டாடப்படுகிறது.
முக்கியமாக மலேரியாவை கட்டுப்படுத்துதல் மற்றும் நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றை இந்நாள் நோக்கமாக கொண்டுள்ளது. கொசுக்களால் பரவும் நோய்களால் ஆண்டு தோறும் சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. மலேரியா கொசுக்களால் பரவும் மிகவும் ஆபத்தான நோயாக மற்றும் உயிர்கொல்லியாக உள்ளது.
கருப்பொருள்:
உலக சுகாதார நிறுவனம் முதன்முதலில் உலக மலேரியா தினத்தை கடந்த 2007-ல் அனுசரித்தது. ஒவ்வொரு ஆண்டும், உலக மலேரியா தினத்தைக் கடைப்பிடிக்க ஒரு புதிய கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனம் உலக மலேரியா தினத்தை "மலேரியா நோய் அதிகரிப்பை குறைக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் புதுமைகளை பயன்படுத்தவும்" என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாட அழைப்பு விடுத்துள்ளது. மலேரியாவுக்கு எதிரான முன்னேற்றத்தின் வேகத்தை துரிதப்படுத்த இந்த கருப்பொருள் உதவும்.
also read : அச்சுறுத்தும் Omicron XE வேரியன்ட்! குழந்தைகளில் காணப்படும் பொதுவான கோவிட் அறிகுறிகள் இங்கே..
மலேரியா என்றால் என்ன.?
மலேரியா என்பது பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம், பி. விவாக்ஸ், பி. ஓவல் மற்றும் பி. மலேரியா உள்ளிட்ட நான்கு வகையான மலேரியா ஒட்டுண்ணிகளால் ஏற்படும் கடுமையான காய்ச்சல் நோயாகும். நோயெதிர்ப்பு சக்தி இல்லாத ஒரு நபரில், இந்த நோய் தொற்று கொசு கடித்த 10-15 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் பொதுவாக தோன்றும். ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்ட பெண் அனோபிலிஸ் கொசுக்கள் கடிப்பதன் மூலம் இந்த கொடிய நோயான மலேரியா பரவுகிறது.
மேலும் ஒரு கொசு மனிதனை கடிக்கும் போது, ஒரு ஒட்டுண்ணி மனித உடலின் ரத்த ஓட்டத்தில் வெளியிடப்படுகிறது. இதன் விளைவாக மலேரியா ஏற்படுகிறது. குணப்படுத்த கூடிய நோயாக இருந்தாலும் உலகம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தில் பேரழிவுகரமான தாக்கத்தை மலேரியா ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டில் 85 நாடுகளில் சுமார் 241 மில்லியன் புதிய மலேரியா பாதிப்புக்கள் மற்றும் 627,000 மலேரியா தொடர்பான இறப்புகள் பதிவாகி உள்ளன.
also read : கோடை காலத்தில் உண்டாகும் இதய பாதிப்புகளை தவிர்க்க நீங்கள் செய்ய வேண்டியவை..!
உலக சுகாதார சபையின் 60-வது அமர்வில், WHO நிதியுதவியுடன், ஆப்பிரிக்காவில் மட்டுமே அனுசரிக்கப்பட்டு வந்த மலேரியா தினத்தை உலக மலேரியா தினமாக மாற்ற முன்மொழியப்பட்டது. மனித குலத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கும் ஆபத்தான நோயான மலேரியா பற்றிய விழிப்புணர்வை இந்த உலக மலேரியா தினம் ஏற்படுத்துகிறது. சரியான சிகிச்சை மூலம் மலேரியா குணப்படுத்தக்கூடியது மற்றும் தடுக்க கூடிய நோய் என்று WHO கூறியிருந்தாலும், போதுமான மருத்துவ வசதி கிடைக்காததால் பலர் இன்னும் இறப்பதாக நிபுணர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.