சிவப்பழகு, நரைமுடி மருந்து விளம்பரத்திற்குத் தண்டனை - மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரை

சிவப்பழகு, நரைமுடி மருந்து விளம்பரத்திற்குத் தண்டனை - மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரை
சிவப்பழகு, நரைமுடி மருந்துகளுக்கான எச்சரிக்கை
  • Share this:
சிவப்பழகு, உயரம் அதிகரிப்பு உட்பட 78 இயல்புநிலை அல்லது குறைபாடுகளுக்கான மருந்துப்பொருள் விளம்பரங்களுக்கு, ரூ.50 லட்சம் அபராதமும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கும் வகையில் Drugs and Magic Remedies 1954 சட்டத் திருத்தம் கொண்டுவர மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

சிவப்பான சருமம் பெறுவதற்கும், பாலுறவுத் திறனை தூண்டுவதற்கும் மாத்திரை / மருந்துகள், திக்குவாய் குறைபாடு மற்றும் பெண்களின் கருவுறுதலுக்கான மருந்துகள், உயரம் அதிகரித்தல், இளநரையைத் தடுத்தல் என்பன உள்ளிட்ட 78 வகையான நோய்களைக் குணப்படுத்தலாம் என்று தவறான தகவலைக் குறிப்பிட்டு விளம்பரங்கள் செய்யத் தடை விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் பொருட்கள் ஒழுங்குபடுத்துதல் சட்டம் அமலுக்கு வந்தால், முதல் முறை தவறு செய்பவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது 10 லட்சம் அபராதமோ விதிக்கப்படும். மறுபடியும் தவறிழைத்தால், ஐந்தாண்டு சிறையும், 50 லட்சம் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். நடப்பில் இருக்கும் சட்டத்தில் முதல் முறை ஆறு மாத சிறை தண்டனையும், இரண்டாம் முறை தவறிழைத்தால் ஓராண்டு தண்டனையும் விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


அதிகரித்து வரும் இத்தகைய சம்பவங்களையும், கால சூழலையும், தொழில்நுட்பத்தையும் கருத்தில்கொண்டு இம்முடிவு எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இச்சட்டம் அமலுக்கு வருவது தொடர்பான கருத்துகள், பரிந்துரைகள், எதிர்கருத்துகளை பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனத்தாரிடமிருந்து வரவேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சிகள், அச்சு, இணையதளம், பிரசுரங்கள், ஸ்பீக்கர், ரேடியோ என எதன் மூலமாகவும் விளம்பரப்படுத்தக் கூடாது என்று சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. 45 நாட்களுக்குள் கருத்துகள் வரவேற்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
First published: February 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading