காதலின் சின்னமென்றால் தாஜ்மஹால் தான் சட்டென நினைவுக்கு வரும். கிருஷ்ணகிரியில் உள்ள ராயக்கோட்டை மலையில் காதல் மனைவிக்காக பிரிட்டிஷ் தளபதி எழுப்பி காதல் நினைவுசின்னம் பற்றி தெரியுமா. திப்பு சுல்தான் வசம் இருந்த ராயக்கோட்டையை பிரிட்டிஷ் கைப்பற்றியதும் மேஜர் ஜான் காம்பெல் குளோவரை ராயக்கோட்டையின் தலைவனாக நியமித்தது பிரிட்டிஷ் அரசு.
திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் படையில் வீரனாக இருந்த ஆஹா ஜமாலுதீன் பிரிட்டிஷ் படையில் இணைக்கப்பட்டார். கோட்டையின் மேலே குளோவரின் மஹால் இருந்தது. அதன் அருகிலே ஜமாலுதீன் குடும்பத்துக்கும் இடம் ஒதுக்கப்பட்டது. ஜமாலுதீன் மகள் மெகருன்னிஸா மீது காதல் வயப்பட்டான் பிரிட்டிஷ் தளபதி குளோவர்.
“ஐ லவ் யூ மெகருன்னிஸா... நாம் திருமணம் செய்து கொள்ளலாமா”என கேட்டதும் திகைத்து போனாள். எதிரில் நிற்பவன் குளோவர். கிழக்கிந்தியக் கம்பெனியின் மதராஸ் ரெஜிமென்ட்டுக்கு கேப்டனாக இருந்தவன். மெகருன்னிஸா சாதாரண படைவீரனின் மகள். அவள் எப்படி ஒரு ஆங்கிலேயத் தளபதியை மணம் செய்து கொள்ள முடியும். குளோவரின் வார்த்தைகள், தடைகளை கிழித்துக்கொண்டு காதலை மேலெழுந்து துளிர்க்கச் செய்துவிட்டன. சரித்திரம் போற்றிப் பாராட்டுகிற எல்லா காதலர்களை விடவும் அன்பிலும், பண்பிலும் நின்றவர்கள் குளோவர்- மெகருன்னிஸா காதல் ஜோடி.
மெகருன்னிஸா ஒரு கிறிஸ்தவனை மணம் முடிப்பதை அவளது உறவினர்கள் ஏற்கவில்லை. மெகருன்னிஸா தன் காதலில் உறுதியாக இருந்தாள். இரண்டாம் பர்மா போர்-க்கு தலைமையேற்று சென்ற குளோவர் பீரங்கி குண்டு தாக்கி ஒரு கையை இழந்து திரும்பினார். கணவனின் நிலையறிந்து துடித்துப் போனாள் மெகருன்னிஸா. அந்தக் கவலை அவளை தீரா நோயில் தள்ளியது. இன்பம் தவழ்ந்த அந்தக் காதல் தம்பதியின் வாழ்க்கையை துயரம் கவ்வியது.
ஒரு கொடிய நாளில் குளோவரைத் தவிக்கவிட்டு, நீங்காத் துயில் கொண்டாள் மெகருன்னிஸா. அந்த இழப்பை ஏற்க முடியாமல் தவித்தான் குளோவர். காதல் மனைவிக்கு நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்ப நினைத்து வட இந்தியாவில் இருந்து சிற்பிகளை வரவழைத்து, அவளை அடக்கம் செய்த இடத்தில் அற்புதமான வேலைப்பாடுகளுடன் ஒரு மண்டபம் கட்டியெழுப்பினான். தனது இருப்பிடமான பஞ்சப்பள்ளியில் இருந்து தினந்தோறும் அதிகாலை நடந்தே வந்து இந்த நினைவுச் சின்னத்தின் அருகில் அமர்ந்திருப்பது அவனது அலுவலாகிப் போனது. நாளடைவில் ராயக்கோட்டையில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள ஜக்கேரி என்னுமிடத்தில் ஆலமரத்துக்கு அருகில் சிறு குடிசை கட்டி குடியேறினான். 1876ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த இடத்திலேயே உயிரிழந்தான்.
ராயக்கோட்டை மலையில் எதிரிகளின் குண்டுகள் துளைக்க முடியாத கடும் பாறைகளுக்கு மத்தியில், தன் காதல் மனைவிக்காக குளோவர் கட்டியெழுப்பிய மஹால் மட்டும் சிறிதும் சிதைவில்லாமல் இப்போதும் இருக்கிறது. புகழ் பெற்ற காதல் சின்னமான ராயக்கோட்டையில் அமைந்திருக்கும் இந்த காதல் சின்னத்தை சம்பந்தப்பட்ட நிர்வாகம் புனரமைத்து காதலர்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
செய்தியாளர்: செல்வா, ஓசூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Krishnagiri, Local News, Mini Taj mahal, Taj Mahal