கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஸ்ரீஅங்காளம்மன் மற்றும் பூங்காவனத்தம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான இன்று மயான கொள்ளை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை முதலே அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீஅங்காளம்மன் மற்றும் பூங்காவனத்தம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத்தொடர்ந்து மயான கொள்ளை தேர் திருவிழா ஊர்வலம் துவங்கியது. வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வணங்கி அருள் பெற்றனர்.
இதில் நேர்த்தி கடன் செலுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான பெண்கள், ஆண்கள், குழந்தைகள் அம்மன் வேடமிட்டு மேள தாளங்களுடன் ஊர்வலமாக சென்றனர். பலர் அழகு குத்தியும், அந்திரத்தில் தொங்கியபடி ஊர்வலமாக சென்றனர். இந்த மயான கொள்ளை திருவிழா கொரோனா தொற்றால் கடந்த 3 ஆண்டுகள் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனால் இதனை காண்பதற்காகவும், அம்மனை தரிசிக்கவும் தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், ஓசூர் போன்ற இடங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா போன்ற இடங்களில் இருந்தும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.
மயான கொள்ளை தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்மனுக்கு அந்தரத்தில் தொங்கியவாறு சென்று மாலை அணிவிக்கும் விநோத நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து, காவேரிப்பட்டினம் பேருந்து நிலையம் அருகே அம்மன் ஊர்வலம் வந்தபோது. அந்திரத்தில் ராட்டினத்தில் அலகு குத்திக்கொண்டு தொங்கியவாறு 100 அடி தூரம் சென்று அம்மனுக்கு மாலை அணிவித்தல், தீபாராதனை செய்தல் மற்றும் கை குழந்தையை ஏந்தி சென்று மாலை அணிவித்தல் போன்று தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. மயானத்திற்கு சென்ற அம்மன் ஊர்வலத்தின் போது பூசாரிகள் சாட்டையால் அடிக்கும் விநோத வழிபாடு நடைபெற்றது. இந்த மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மயான கொள்ளை திருவிழாவுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு விழா குழு சார்பில் வழி நெடுங்கிலும் அன்னதானங்கள், குடிநீர், நீர்மோர் போன்றவை இலவசமாக வழங்கப்பட்டது.
செய்தியாளர் : குமரேசன் - கிருஷ்ணகிரி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Krishnagiri, Local News