கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பாபநாசம் பட பாணியில் போலீஸ்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கில், காவல் உதவி ஆய்வாளரான அவரது மனைவி மற்றும் திட்டம் போட்டு கொடுத்த சாமியார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கல்லாவியை சேர்ந்தவர் 48 வயதான செந்தில்குமார். போலீஸ் ஏட்டுவாக பணியாற்றிய அவர், பணிக்காலத்தில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவரது மனைவி சித்ரா இவர் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
போலீஸ் தம்பதியான செந்தில்குமார் - சித்ராவின் மகன் 19 வயதான ஜெகதீஷ்குமார். இவர்கள் 3 பேரும் ஊத்தங்கரை கவர்னர் தோப்பு பகுதியில் குடியிருந்து வந்தனர். இந்த நிலைலில் செந்தில்குமார் கடந்த செப்டம்பர் மாதம் 16-ம் தேதி முதல் மாயமானார். இது தொடர்பாக செந்தில்குமாரின் தாய் பாக்கியம் கல்லாவி போலீஸ் நிலையம், கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தார்.
மாயமான செந்தில்குமார், அவரது மகன் ஜெகதீஷ்குமார், வீட்டு கார் டிரைவர் கமல்ராஜ் ஆகிய 3 பேரின் செல்போன்களும் ஒரே இடத்தில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் ஜெகதீஷ்குமார், கார் டிரைவர் கமல்ராஜ் ஆகியோரை கடந்த 13-ம் தேதி விசாரணைக்கு வர சொல்லி போலீசார் அழைத்தனர். ஆனால் அவர்கள் போலீசில் ஆஜராகாமல் கடந்த 14-ம் தேதி கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் செந்தில்குமாரை கொலை செய்து தென்பெண்ணை ஆற்றில் உடலை வீசி விட்டதாக சரண் அடைந்தனர். இதையடுத்து, 2 பேரையும் போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
கொலை தொடர்பாக செந்தில்குமாரின் மனைவி சித்ராவிடம் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அமலா அட்வின் விசாரணை நடத்தினார். மேலும் சேலம் சிறையில் இருந்த செந்தில்குமாரின் மகன் ஜெகதீஷ்குமார். கமல்ராஜ் ஆகிய 2 பேரை போலீசார் சேலம் சிறையில் இருந்து காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் செந்தில்குமாரை கொலை செய்து உடலை கல்லை கட்டி ஊத்தங்கரை பாரதிபுரம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் போட்டது தெரிய வந்தது. இதையடுத்து செந்தில்குமாரின் உடலை சனிக்கிழமை கிணற்றில் இருந்து எடுத்த போலீசார் உடற்கூராய்வுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் ஜெகதீஷ்குமார், கமல்ராஜ் ஆகியோரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் செந்தில்குமாலை அவரது மனைவி சித்ரா கூலிப்படையை ஏவி கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
உடனே சிறப்பு உதவி ஆய்வாளர் சித்ரா, பாவக்கல்லைச் சேர்ந்த பெண் சாமியார் சரோஜா (32), கூலிப்படையை சேர்ந்த விஜயகுமார், ராஜ பாண்டியன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். சித்ராவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கொலைக்கான முழுக்காரணமும் போலீசாருக்கு தெரியவந்தது. சித்ராவுக்கும், கார் ஓட்டுநர் கமல்ராஜுக்கும் தவறான தொடர்பு இருந்துள்ளது.
இதையறிந்த செந்தில்குமார் இருவரையும் கண்டிக்க, அவரை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார் சித்ரா. சித்ராவிற்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்த பாவக்கல்லை சேர்ந்த பெண் சாமியார் சரோஜா மூலம் கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளார் சித்ரா. இதற்காக சித்ரா கூலிப்படைக்கு ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். சித்ராவின் திட்டப்படி அவர் நீதிமன்றத்தில் பணியில் இருக்கும்போது மகன் ஜெகதீஷ்குமார், கார் ஓட்டுநர் கமல்ராஜ் மற்றும் கூலிப்படையினர் இணைந்து செந்தில்குமாரை வீட்டில் வைத்து அடித்து கொலை செய்துள்ளனர்.
போலீசாரின் கவனத்தை திசை திருப்ப செந்தில்குமாரின் உடலை தென்பெண்ணை ஆற்றில் வீசி விட்டதாக முதலில் கூறியுள்ளனர். பாபநாசம் படத்தில் மகள் செய்த கொலையை மறைக்க, ஒரு ஆதாரம் கூட கிடைத்து விட கூடாது என்று கமல்ஹாசன் திட்டம் போடுவார். கடைசியில் உடல் எங்கு உள்ளது என்று யாருக்குமே தெரியாத வகையில் கதை இருக்கும். கொலை செய்யப்பட்டவரின் உடல் கிடைக்காவிட்டால் வழக்கில் இருந்து தப்பித்து விடலாம் என்ற எண்ணத்தில் சித்ராவும் திட்டம் போட்டுள்ளார்.
அதே போல பிளான் போட்டு உடலை மறைக்க திட்டமிட்டவர்கள் விசாரணையில் சிக்கிக் கொண்டனர். கூலிப்படையை சேர்ந்த ராஜபாண்டி, விஜயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவான கூலிப்படை தலைவன் வெள்ளைச்சாமி, செங்குட்டுவன் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Illegal affair, Krishnagiri, Murder