கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு...
கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு...
கேஆர்பி அணை
Krishnagiri Reservoir Project Dam : கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து 9012 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் ஆர்.காந்தி தண்ணீரை திறந்து வைத்தனர்.
கிருஷ்ணகிரியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கேஆர்பி அணை கட்டப்பட்டுள்ளது. 52 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து ஆண்டுதோறும் இரண்டு போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 9012 ஏக்கர் நிலம் நேரடியாகவும் சுமார் பத்தாயிரம் ஏக்கர் நிலம் மறைமுகமாகவும் பாசனம் பெறுகிறது.
இந்த நிலையில் முதல் போக சாகுபடிக்கு கேஆர்பி அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர் அந்த வகையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேற்று முதல் கேஆர்பி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருத்தார்.
அதன்படி இன்று கேஆர்பி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்காக வணிக வரி மற்றும் பத்திரபதிவு துறை அமைச்சர் மூர்த்தி, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி ஆகியோர் அணையின் வலது மற்றும் இடது புற கால்வாய் மூலமாக தண்ணீரை திறந்து விட்டனர்.
வலதுபுற கால்வாய் மூலமாக விநாடிக்கு 87 கன அடி வீதமும், இடதுபுற கால்வாய் மூலமாக விநாடிக்கு 93 கன அடி வீதமும் மொத்தமாக விநாடிக்கு 180 கனஅடி நீர் 120 நாட்களுக்கு திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் பெரிய முத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், தள்ளிஅள்ளி, காவேரிப்பட்டினம் உள்ளிட்ட 16 ஊராட்சிகளில் உள்ள 9012 ஏக்கர் நிலம் நேரடியாகவும் சுமார் பத்தாயிரம் ஏக்கர் நிலம் இதர ஏரி குளங்கள் மூலமாகவும் பாசனம் பெறுகிறது.
தற்போது திறக்கப்பட்ட உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி சிறப்பாக சாகுபடி செய்துகொள்ளுமாறு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி அறிவுறுத்தி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லகுமார், கிருஷ்ணகிரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன், மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.