முகப்பு /செய்தி /கிருஷ்ணகிரி / தெருக்கூத்து பார்க்க சென்ற விவசாயி அடித்துக்கொலை.. முன்விரோத தகராறில் ஓசூரில் பயங்கரம்..

தெருக்கூத்து பார்க்க சென்ற விவசாயி அடித்துக்கொலை.. முன்விரோத தகராறில் ஓசூரில் பயங்கரம்..

கொலையான விவசாயி

கொலையான விவசாயி

Crime News : ஒசூர் அருகே முன்விரோத தகராறில் விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Krishnagiri, India

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராமச்சந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா( வயது 55). விவசாயியான இவர் நேற்று முன்தினம் ராமச்சந்திரம் கிராமத்தில் தெருக்கூத்து பார்க்க சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று காலை அந்த பகுதியில் உள்ள வயல்வெளியில் பலத்த வெட்டு காயத்துடன் சடலமாக கிடந்தார். இதனை அவ்வழியாக சென்ற அக்கம் பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி  மக்கள் பேரிகை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கிருஷ்ணப்பாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக அப்பய்யா(55) என்பவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்தது.  அப்பய்யா குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார்.  இவரது விளைநிலத்தில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைப்புகள், மின்சாதன பொருட்கள் அடிக்கடி திருடுபோயுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பய்யா அதே ஊரை சேர்ந்த கிருஷ்ணப்பாவுடன் இதுதொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இது நாளடைவில் முன்விரோதமாக மாறியுள்ளது.

இதனிடையே, அப்பய்யா, கிருஷ்ணப்பாவை பழிதீர்க்க காத்திருந்தார். அதன்படி நேற்று முன்தினம் ராமச்சந்திரம் கிராமத்தில் தெருகூத்து நடந்துள்ளது. இதனை நள்ளிரவு வரை கிருஷ்ணப்பா பார்த்துவிட்டு நேற்று அதிகாலை 3.30 மணியளவில் அவ்வழியாக வந்துள்ளார். இதனை பார்த்து அப்பய்யா, “உன்னிடம் தனியாக பேச வேண்டும் வா” என கிருஷ்ணப்பாவை அருகே உள்ள விளைநிலத்திற்கு தனியாக அழைத்து சென்றார்.

இதனைத்தொடர்ந்து, அங்கு மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்து, வயிறு பகுதிகளில் கத்தியால் சரமாரி குத்தினார். அத்துடன் தலை மீது கல்லைப்போட்டு கொலை செய்தார். இதில் ரத்த வெள்ளத்தில் கிருஷ்ணப்பா பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பேரிகை போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொலை வழக்கில் வேறு யாரும் சம்பந்தப்பட்டு இருக்க கூடும் என  தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதன்படி அப்பய்யா கூட்டாளி கோபால் என்பவரும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.  இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்விரோத தகராறில் விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் : செல்வம் - ஓசூர்

First published:

Tags: Crime News, Krishnagiri, Local News