முகப்பு /செய்தி /கிருஷ்ணகிரி / அதிமுக அலுவலகத்திற்கு இபிஎஸ் செல்வது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்: புகழேந்தி

அதிமுக அலுவலகத்திற்கு இபிஎஸ் செல்வது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்: புகழேந்தி

புகழேந்தி

புகழேந்தி

Chennai | இபிஎஸ் தரப்பு தடயங்களையும் மற்ற ஆதாரங்களையும் அழித்து மீண்டும் ஒரு கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது என்று அதிமுக முன்னாள் நிர்வாகியும் ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி கூறியுள்ளார்

  • Last Updated :
  • Chennai, India

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அதிமுக முன்னாள் நிர்வாகியும் ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அதிமுக தலைமை குறித்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. குறிப்பாக பொதுக்குழு குறித்து இரண்டு நீதிபதிகள் அளித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல அதிமுக தலைமை கழக விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இபிஎஸ் தரப்புக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில் நாளை (இன்று) அவர் அதிமுக அலுவலகத்திற்கு செல்வது என்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

மேலும் ஏற்கனவே அதிமுக அலுவலக வழக்கில் சாவியை இபிஎஸ் இடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் 30 நாட்கள் வரை யாரும் அலுவலகத்திற்குள் நுழைய கூடாது எனவும் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்பொழுது 47 நாட்கள் கழித்து இபிஎஸ் தரப்பு அதிமுக அலுவலகம் செல்ல நினைப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

எனவே தற்பொழுது அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் குறித்து விசாரணை சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இபிஎஸ் தரப்பில் சிவி சண்முகத்திற்கு அலுவலகத்திற்குள் என்ன வேலை எனவும் அவரை ஏன் போலீசார் உள்ளே அனுமதித்தனர் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Also see... நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு மீது செப்டம்பர் 13ம் தேதி உத்தரவு

எனவே இபிஎஸ் தரப்பு தடயங்களையும் மற்ற ஆதாரங்களையும் அழித்து மீண்டும் ஒரு கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே காவல்துறை தலைவரையும் சிபிசிஐடியையும் மிகவும் கேவலமாக பேசிய சிவி சண்முகத்தின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல்துறை தலைவர் மற்றும் மாநகர ஆணையர் ஆகியோர் இது தொடர்பாக விசாரணை முடியும் வரை அதிமுக அலுவலகத்திற்குள் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் எனவும் இதுகுறித்து புகார் மனுவையும் காவல்துறையிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேபோல அதிமுகவை யாரும் பிளவு படுத்த முடியாது என இபிஎஸ் தெரிவித்த கருத்துக்கு பதில் அளித்த புகழேந்தி,

முழு அதிமுகவும் ஓபிஎஸ் வசம் இருப்பதால் யாரும் இதை பிளவுபடுத்த முடியாதுதான். இபிஎஸ் மட்டுமே தனித்து பிளவு பட்டு நிற்கிறார் என விமர்சித்தார்.

செய்தியாளார்: செல்வா, ஓசூர்

First published:

Tags: ADMK, CV Shanmugam, Krishnagiri, OPS - EPS