முகப்பு /செய்தி /கிருஷ்ணகிரி / சிறுவனை வீட்டிற்குள் அடைத்து கேஸ் சிலிண்டரை திறந்து கொல்ல முயற்சி.. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்..

சிறுவனை வீட்டிற்குள் அடைத்து கேஸ் சிலிண்டரை திறந்து கொல்ல முயற்சி.. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்..

மாதிரி படம்

மாதிரி படம்

Crime News : கிருஷ்ணகிரியில் 3 வயது குழந்தையை கடத்தி வீட்டிற்குள் அடைத்து, கேஸ் சிலிண்டரை திறந்து கொல்ல முயன்ற நிலையில், போலீசார் அதிரடியாக செயல்பட்டு குழந்தையை மீட்டுள்ளனர். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Krishnagiri, India

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வாடமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜா-அமுதா தம்பதி. ராஜா புதிதாக வீடு கட்டியதில் கடன் வாங்கிய நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட அமுதாவை அவரது கணவன் ராஜா பலமாக தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த அமுதா அவரது அண்ணன் காளியப்பனுக்கு தகவல் அளித்துள்ளார். அதன்படி விரைந்து வந்த காளியப்பன் அமுதாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

அப்போது ராஜா தனது மனைவி இனி தன்னுடன் வாழ வரமாட்டாள் என்று நினைத்துக்கொண்டு, காளியப்பனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் வீட்டில் இல்லாத நிலையில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த காளியப்பனின் 3 வயது மகன் ரோஹித்தை  ராஜா கடத்தி தனது வீட்டிற்கு கொண்டு வந்து விட்டார். குழந்தையை வீட்டிற்குள் வைத்து தானும் வீட்டிற்குள்ளேயே இருந்து கதவுகளை பூட்டிக்கொண்டார். தனது மனைவியை அழைத்து வந்தால் மட்டுமே குழந்தையை விடுவேன் என்றும் வீட்டிற்குள் இருந்து ராஜா மிரட்டியுள்ளார்.

தகவலின்பேரில் பாரூர் போலீசார் மற்றும் போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, குழந்தையை விட்டு விடும்படி பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு சமாதானம் ஆகாத ராஜா திடீரென வீட்டில் இருந்த சமையல் கேஸ் சிலிண்டரை திறந்து கேஸை வீடு முழுவதும் கசிய விட்டார். சமையல் கேசின் நாற்றம் வெளியே வந்தது தெரிந்தவுடன் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்த ராஜா, சிகரெட் லைட்டரை எடுத்து தீ பற்ற வைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். இனிமேலும் தாமதித்தால் விபரீதமாகிவிடும் என்றுணர்ந்த போலீசாரும், தீயணைப்பு மீட்பு படையினரும் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு அதிரடியாக உள்ளே புகுந்தனர். மேலும் துரிதமாக செயல்பட்டு ராஜாவின் கையில் இருந்த லைட்டரை கைப்பற்றினர்.

ராஜாவின் பிடியில் இருந்து குந்தையை மீட்டு அவசரமாக வெளியே கொண்டு வந்தனர். அதே நேரத்தில் மற்றொரு தீயணைப்பு வீரர் கேஸ் சிலிண்டர் கசிவை தடுத்து நிறுத்தினார். சிலிண்டரை வீட்டிற்குள் இருந்து வெளியே எடுத்து வந்து, திறந்தவெளி இடத்தில் வைத்து அபாய நிலையை கட்டுக்குள் கொண்டுவந்தார். தன்னை கைது செய்ய வேண்டாம். இங்கேயே விட்டுவிடுமாறு கெஞ்சிய ராஜாவை போலீசார் நைசாக பேசி காவல் நிலையம் அழைத்து சென்றனர். ராஜா மீது கடத்தல், கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். சுமார் 5 மணி நேரம் ஏற்பட்ட பதற்றம் போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினரின் துரித நடவடிக்கையால் முடிவுக்கு வந்தது.

First published:

Tags: Crime News, Krishnagiri, Local News