எங்க குடும்பத்தோட யார் பேசுனாலும் ₹1,000 அபராதம்.. முறைகேடு குறித்து மனு அளித்ததால் ஊரை விட்டு ஒதுக்கப்பட்டுள்ளதாக புகார்..
எங்க குடும்பத்தோட யார் பேசுனாலும் ₹1,000 அபராதம்.. முறைகேடு குறித்து மனு அளித்ததால் ஊரை விட்டு ஒதுக்கப்பட்டுள்ளதாக புகார்..
ஊரை விட்டு ஒதுக்கப்பட்டுள்ள குடும்பத்தினர்
Krishnagiri District : கிருஷ்ணகிரி அருகே கிரானைட் கம்பெனி நிர்வாகத்திற்கு துணை போன, ஊர் தலைவருக்கு எதிராக புகார் மனு அளித்ததால், ஒரே குடும்பத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்சூர் பஞ்சாயத்துக்குட்பட்ட சின்னபனமுட்லுவை சேர்ந்தவர் முருகன். இவர் கிருஷ்ணகிரியில் பெயின்ட் கடை நடத்தி வருகிறார். ஹிந்து சேனா அமைப்பின் மாவட்ட தலைவராகவும் உள்ளார். இவரது தம்பி கண்ணன், ராணுவத்தில் பணிபுரிகிறார். இவர்களது மூன்று சகோதரிகள் மற்றும் அவர்களது குழந்தைகளுடன் அதே பகுதியில் கூட்டு குடும்பமாக அனைவரும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் முருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், அவர்கள் ஊர் பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளகூடாது எனவும் கூறி கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். இதனால் அவர்கள் எந்த பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளமுடியவில்லை. இந்நிலையில் சின்னபனமுட்லு மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
இதில் முருகனின் குடும்பத்தினரை கலந்து கொள்ள கூடாது என சிலர் மிரட்டுவதாக கூறி போலீசில் முருகன் புகாரளித்தார். தகவலின்படி விரைந்து வந்த கந்திக்குப்பம் போலீசார் விசாரணை நடத்திய பின்னரும் அக்கோவில் நிர்வாகிகள் திருவிழாவில் முருகன் குடும்பத்தினரை கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை.
இதுகுறித்து முருகன் கூறுகையில், ” சின்னபனமுட்லு பகுதியில் அரசுக்கு சொந்தமான, 6 ஏக்கர் அளவிலான புறம்போக்கு நிலம் உள்ளது. இதை வீடில்லாத ஏழைக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் உட்பட பலரிடம் மனு அளித்துள்ளதாகவும், யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் அந்நிலத்தை அப்பகுதியில் இயங்கி வரும் கிரானைட் கம்பெனி முறைகேடாக அபகரிக்கும் வேலையில் ஈடுபட்டதால் அதுகுறித்தும் புகார் அளித்தேன்.
ஆனால் கிரானைட் கம்பெனியிடம் பணம் பெற்று கொண்டு சின்னபனுமுட்லு மாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கட்ட பஞ்சாயத்தினர் எங்கள் குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைப்பதாகவும், தங்கள் குடும்பத்தினருடன் பேசினால் 1,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர்.
இதுகுறித்து கந்திக்குப்பம் போலீசில் புகார் அளித்தும் பயனில்லை. தனது சகோதரி விஜயலட்சுமி, 47 என்பவர் சின்னபனமுட்லு அங்கன்வாடியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றியதால், அந்த அங்கன்வாடியை பூட்டியும் அராஜகத்தில் ஈடுபட்டனர். இன்று நடந்த சின்னபனமுட்லு மாரியம்மன் கோவில் பண்டிகையில் கலந்து கொள்ளகூடாது என கூறியதால் போலீசின் உதவியை நாடினோம். ஆனால் சாமி கும்பிட சென்ற எங்களை போலீசாரே விரட்டியடித்ததால் விரக்தியடைந்துள்ளோம்” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.