ஹோம் /நியூஸ் /கரூர் /

குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்கு சென்ற இளம்பெண் மரணம் - மயக்க மருந்து காரணமா? - உறவினர்கள் போராட்டம்

குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்கு சென்ற இளம்பெண் மரணம் - மயக்க மருந்து காரணமா? - உறவினர்கள் போராட்டம்

சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்

சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்

Karur | மருத்துவமனையில் வழங்கப்பட்ட தவறான சிகிச்சையே இளம்பெண் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karur, India

  கரூர் மாவட்டம், மணவாடி ஊராட்சிக்குட்பட்ட கல்லுமடை காலனி பகுதியை சேர்ந்தவர் முகேஷ்குமார். இவரது மனைவி ஜோதி(27), இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

  இந்நிலையில், குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக ஜோதியை உறவினர்கள் அருகில் உள்ள உப்பிடமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். நேற்று காலை மருத்துவமனையில் அவருக்கு மயக்க மருந்து அளவுக்கு அதிகமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

  இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டவர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும்போது, வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். தவறான சிகிச்சையே அவர் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதையும் படிங்க : ஆவினை தொடர்ந்து ஆரோக்யா பால் விலையும் உயர்வு!

   இதனைத்தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று அரசு தரப்பில் உரிய விளக்கம் தரப்படவில்லை எனவும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்களை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி காந்தி கிராமம் பகுதியில் கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் கரூர் டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை முடியும் வரை ஒத்துழைப்பு தருமாறு அதிகாரிகள் கூறியதன் அடிப்படையில், உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

  இதையும் படிங்க : திருச்சியில் அரசு பேருந்தில் ஆபத்தாக பயணித்த இளைஞர்கள்... பின்னால் காரில் வந்தவர் என்ன செய்தார் தெரியுமா?

  தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை ஜோதியின் உடலை பெற்றுக்கொள்வதில்லை எனவும், தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  செய்தியாளர் : கார்த்திகேயன் - கரூர்

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Karur