கரூரில் தனது நண்பனுக்காக டோக்கன் வாங்கி வைத்துள்ளேன் என தனது குடும்பத்தினரிடம் பொய் சொல்லி விட்டு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட இளைஞர் காளை முட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் தோகைமலை அருகே உள்ள ராச்சாண்டார் திருமலையில் கிராம பொதுமக்கள் சார்பாக 61ம் ஆண்டு ஜல்லிகட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 756 காளைகளும் 367 மாடு பிடி வீரர்கள் பங்கேற்று களம் கண்டனர். போட்டியில், 21 காளைகளை அடக்கிய நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியைச் சேர்ந்த கார்த்தி முதலிடமும், 7 காளைகளை அடக்கி திருச்சியை சேர்ந்த ரஞ்சித் 2ம் இடம் பெற்றார். திருச்சி மாவட்டம் கீரிக்கல் மேட்டை சேர்ந்த செல்வத்தின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. போட்டியில், 12 மாடுகளின் உரிமையாளர்கள், 22 மாடு பிடி வீரர்கள், 16 பார்வையாளர்கள் என மொத்தம் 50 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் போட்டியில் கலந்து கொண்ட கரூர் மாவட்டம் பள்ளபட்டியைச் சேர்ந்த மாடு பிடி வீரர் 23 வயதான சிவக்குமார் காளையை அடக்க முயன்றபோது, மாட்டின் கொம்பு குத்தியதில் கண் பகுதியில் காயமடைந்தார். இதனையடுத்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீரர் சிவக்குமார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இது குறித்து தோகைமலை காவல் நிலையத்தில் சிவக்குமாரின் தந்தை பழனிச்சாமி அளித்த புகாரின்பேரில் தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையில் தனது நண்பனுக்காக டோக்கன் வாங்கி வைத்துள்ளதாகவும் தான் வேடிக்கைதான் பார்க்க செல்கிறேன், ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள மாட்டேன் எனக் கூறிவிட்டு வீட்டிற்கு சென்றதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சிவகுமாரின் உடலை பெறுவதற்கு அவரின் உறவினர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் வசித்து வரும் பழனிச்சாமி அஞ்சலையின் மகன் சிவகுமார் (23) இவருக்கு ஆனந்த் என்ற தம்பியும் சரண்யா என்ற தங்கையும் உள்ளனர்.மேலும் உடன் பிறந்தவர்கள் இரண்டு பேரும் படிப்பை நிறுத்திவிட்டு கூலி வேலை செய்து வருகின்றனர்.
காளை முட்டியதில் உயிரிழந்த மெக்கானிக் சிவக்குமாரின் வருமானத்தை நம்பியே அவரது குடும்பம் நடத்தி வந்துள்ளனனர். தற்போது அவரின் இழப்பால் அவரது குடும்பத்தினருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால் தமிழக அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்து நிதி உதவி வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.
செய்தியாளர் : கார்த்திகேயன் (கரூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jallikattu, Karur, Local News, Tamil News