முகப்பு /செய்தி /கரூர் / மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கூடுதல் அவகாசமா? - அமைச்சர் செந்தில்பாலாஜி பதில்!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கூடுதல் அவகாசமா? - அமைச்சர் செந்தில்பாலாஜி பதில்!

அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி

Minister Senthil Balaji Press Meet | தமிழ்நாட்டில் குறுகிய காலத்தில் 2.67 கோடி பயனாளர்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karur, India

தமிழகத்தில் மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் மார்ச் 4 ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.267 கோடி மதிப்பில் 1,22,000 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.  அதற்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார்.இதனை தொடர்ந்து  திருமாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெறுவதை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, இதுவரை தமிழகத்தில்  2.67 கோடி மின் இணைப்புகளுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 1.50 லட்சம் இணைப்புகள் இணைக்க வேண்டிய உள்ளது. இன்று மாலையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்கான கால அவகாசம் நிறைவடைகிறது. ஏற்கனவே பலமுறை அவகாசம் கொடுக்கப்பட்டதால் கூடுதல் அவகாசம் இனிமேல் தரப்படாது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்தார்.

இன்று மாலைக்குள் தங்களது மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்காத பயனாளிகள், விரைந்து ஆதார் எண்களை இணைக்குமாறு கேட்டுக் கொண்டார். குறுகிய காலத்தில் 2.67 கோடி பயனாளர்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஏற்கனவே இருந்த சிறு சிறு பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு இணையதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஆன்லைன் பதிவால் மின் சேவைகளுக்கான பயன்பாட்டில் எந்த குறைபாடும் இருக்காது என தெரிவித்தார்.

சூரிய மின்சக்தியில் ராஜஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக நேற்று அதிகபட்சமாக சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி 6 ஆயிரம் மெகாவாட் தயாரிப்பிற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. திருவாரூரில் முதல் சூரிய மின் உற்பத்தி பூங்காவை தமிழக முதல்வர் தொடங்கி வைக்க இருக்கிறார். அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மார்ச் 4 ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 267 கோடி மதிப்பில் 1,22,000 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 12 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.

செய்தியாளர்: கார்த்திகேயன்

First published:

Tags: Karur, Senthil Balaji, TNEB