Home /News /karur /

ஆப்ரேஷன் கந்துவட்டி : வாங்கிய கடனுக்கு கூடுதல் வட்டி கேட்டு மூதாட்டியை தாக்கிய நபர் கைது

ஆப்ரேஷன் கந்துவட்டி : வாங்கிய கடனுக்கு கூடுதல் வட்டி கேட்டு மூதாட்டியை தாக்கிய நபர் கைது

கைது செய்யப்பட செல்வகுமார்

கைது செய்யப்பட செல்வகுமார்

கரூரில் தனியாக வசித்து வரும் மூதாட்டி வாங்கிய கடனுக்கு வட்டியும், முதலும் கட்டிய பிறகும், கூடுதல் வட்டி கேட்டு தகாத வார்த்தைகளால் மிரட்டி, தாக்குதல் நடத்திய நபர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

    தமிழக காவல் துறையின் சார்பாக சில நாட்களுக்கு முன் சுற்றறிக்கை ஒன்று அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. அதன் பெயரில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பிரத்தியேகமாக "ஆப்ரேஷன் கந்து வட்டி" என்ற முறையில் கந்துவட்டி புகாரில் தனியாக கவனம் செலுத்தி புகாரை விசாரிக்க வேண்டும் என்றும் புகார் வந்த சில நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநில காவல் துறை உத்தரவிட்டிருந்தது.  இந்த உத்தரவுக்கு அனைத்து மாவட்ட காவல் துறையும் செயல்பட்டு வரும் நிலையில் கரூரில் ஆபரேஷன் கந்துவட்டி புகாரின் பேரில் தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சுசீலா (67). இவருடைய ஒரே மகன் இறந்த நிலையில் சுசீலா தனியாக வசித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (50) என்பவரிடமிருந்து 10% வட்டிக்கு ரூ.10,000 கடனாக பெற்றுள்ளார். வாங்கிய கடனுக்காக மூதாட்டி சுசீலா ரூ.20,000 தொகையை சரியாக வட்டியுடன் சேர்த்து திருப்பி அளித்துள்ளார்.

    Also see... சீர்காழி அருகே கந்துவட்டி புகாரில் தாய், மகன் கைது.

    இந்த நிலையில், சம்பவத்தன்று செல்வகுமார் மூதாட்டி சுசீலா வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, கூடுதல் தொகையாக ரூ.10,000 கேட்டு, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து மூதாட்டி சுசீலா அளித்த புகாரின் பேரில் கந்து வட்டி தடை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் செல்வகுமார் மீது கரூர் மாநகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர்: தி.கார்த்திகேயன், கரூர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Karur

    அடுத்த செய்தி