குளித்தலை அருகே லாலாப்பேட்டையில் லாரி ஓட்டுநரை மீன் வெட்டும் கத்தியால் வெட்டி கொலை செய்த கஞ்சா போதை நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே லாலாபேட்டை ஆண்டியப்பன் நகரை சேர்ந்தவர் முருகேசன் மகன் விக்னேஷ் (27). லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் பிரவீன் என்பவர் கஞ்சா போதைக்கு அடிமையாகி தன்னை ஒரு ரவுடி போல காட்டி கொண்டு வலம் வந்துள்ளார். பிரவீனின் கஞ்சா பழக்கத்தால் அப்பகுதி இளைஞர்கள் அவனிடம் சேர கூடாது என லாரி ஓட்டுநர் தனிமைப்படுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையொட்டி அப்பகுதியில் விளையாட்டுப் போட்டி விழா நடைபெற்று உள்ளது.
இந்த போட்டியினை விக்னேஷ், மற்றும் அவரது நண்பர்கள் ஏற்பாடு செய்து நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா போதையில் வந்த பிரவீன் அங்கு உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் கண்டித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பிரவீன் தான் எவ்வளவு பெரிய ரவுடி தெரியுமா உங்களை சும்மா விட மாட்டேன் என்று கூறி வந்துள்ளார்.
இதனையடுத்து விக்னேஷ் லாலாப்பேட்டை ஆண்டியப்பன் நகர் மைதானத்தில் தனது புல்லட் வாகனத்தில் நின்று போனில் பேசிக் கொண்டிருந்தபோது பின்னால் வந்த பிரவீன், விக்னேஷின் கழுத்தில் மீன் வெட்டும் கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த நண்பர்கள், படுகாயமடைந்த விக்னேஷை குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போது பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக குளித்தலை அரசு மருத்துவமனையில் வைத்திருந்த விக்னேஷின் உடலை கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
மேலும் லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்து தப்பி ஓடிய கஞ்சா போதை ஆசாமி பிரவீனை தேடி வருகின்றனர்.
குளித்தலை கோட்டத்திற்குட்பட்ட குளித்தலை, லாலாபேட்டை, தோகைமலை, பாலவிடுதி காவல் நிலைய பகுதிகளில் அதிகளவில் கஞ்சா புழக்கத்தில் உள்ளதால் இப்பகுதிகளில் பல்வேறு கொலை, கொள்ளை குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கஞ்சா புழக்கத்தை காவல்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : தி.கார்த்திகேயன் (கரூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Karur, Local News, Tamil News