திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்... அமைச்சர்கள் பங்கேற்பு.. கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை.
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்... அமைச்சர்கள் பங்கேற்பு.. கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை.
திருவட்டாறு கோவில் கும்பாபிஷேகம்
Sree Athikesava Perumal Temple Kumbhabhishekam | தென்னிந்தியாவின் வைகுண்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம். பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 418 ஆண்டுகளுக்கு பின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்காக கடந்த 29ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கியது. நாள்தோறும் சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் அதனை தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. விழாவின் எட்டாம் திருநாளான இன்று அதிகாலை மூன்று முப்பது மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
கணபதி ஹோமம் நடத்தப்பட்டு தொடர்ந்து சுப முகூர்த்தத்தில் பிரதிஷ்டை உபதேவன்மார்களுக்கு பிரதிஷ்டை ஆகியவை நடத்தப்பட்டது. பஞ்ச வாத்தியங்கள் முழங்க வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்களோடு கோபுரங்களில் கலசங்களுக்கு புனித நீரை ஊற்றினர். தொடர்ந்து பூக்களை தூவி மலர் மாலைகள் சாத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்
108 திவ்ய தேசங்களில் 76 ஆவது திவ்ய தேசமான திருவட்டார் ஆதிகேசவர் பெருமான் கோவிலில் தமிழக அரசின் ஐந்து ஆண்டுகளில் 1500 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 7 கோடி ரூபாய் தமிழக அரசு ஒதுக்கிய நிலையில் பக்தர்களிடம் நன்கொடை பெற்று 10 கோடி ரூபாய்க்கு மேல் பெறப்பட்டு பழமை மாறாமல் புரைமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
ஆதிகேசவ பெருமாள் கோவில் மேற்கு நோக்கி 22 அடி நீளத்தில் அனந்த சயனத்தில் சர்பத்தில் சுவாமி இருக்கிறார். 3 நுழைவு வாயில்கள் வழியாக சுவாமியை தரிசனம் செய்ய முடியும் திருமுக நுழைவு வாயில் திரு கர நுழைவு வாயில் திருபாத நுழைவு வாயில் என மூன்று வாயில்களில் தரிசனம் செய்யப்படுகிறது.
திருமுக நுழைவு வாயிலில் நீட்டிய இடக்கை ஆதிகேசவன் கருட ஆழ்வார் மற்றும் சுவாமியின் திருமுகத்தை தரிசனம் செய்ய முடியும் திருக்கர நுழைவு வாயிலில் சுவாமி முத்திரை காட்டும் வலக்கரம் சங்கு சக்கரம் உள்ளிட்ட சுவாமியின் ஐம்ப படைகள் இத்தோடு தரையில் உலோக திருமேனியோடு சுவாமி அம்பாளோடு காட்சியளிப்பதை தரிசனம் செய்ய முடியும்.
திருப்பாத நுழைவு வாயிலில் சுவாமியின் திருபாதங்களை தரிசனம் செய்கின்றனர். இந்த கோவில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் நடைபெறும் பூஜைகளைப் போன்று இங்கு பூஜைகள் நடத்தப்படுகிறது.
ஆதிகேசவ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி தமிழகம், கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்குள் சிலநூறு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால் அவர்கள் மட்டுமே கும்பாபிஷேகத்தை நேரடியாக காண முடிந்தது.
மற்றவர்கள் எல் இ டி திரையில் கும்பாபிஷேக காட்சிகளை கண்டு களித்தனர. எனினும் ஏராளமான பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் பலர் கும்பாபிஷேகத்தை காண முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதனுடைய கன்னியாகுமரி திருநெல்வேலி, தென்காசி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆதிகேசவபெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.