குமரி மாவட்டம் அருமனையை அடுத்த குழிச்சல் பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார் (44). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். கோவிட் நெறிமுறையின்படி, இறந்த உடலை வீட்டிற்கு கொண்டு வர முடியாது, எனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தகனம் செய்யப்பட்ட பின்னர், தகனம் செய்யப்பட்ட அஸ்தியை அஜ்மானில் உள்ள கலீஃபா மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
ராஜ்குமார் இறப்பதற்கு முன், அவரது மனைவி லதா புஷ்பம் 2012ல் ஒரு விபத்தில் சிக்கி உயிர் இறந்தார். தந்தையை கடைசியாகப் பார்க்கும் அதிர்ஷ்டம் இல்லாத அவரது இரண்டு குழந்தைகளான புக்லீன் ரிக்ஸி 22 மற்றும் அக்லீன் ரகுல் 20, அவரது தகனம் செய்யப்பட்ட பிறகான அஸ்தியை பெற விரும்பினர்.
இதற்கிடையில், கோட்டயத்தைச் சேர்ந்த சிஜோ, ராஜ்குமாரின் பிள்ளைகளுடைய இந்த ஆசை பற்றி வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து தெரிந்துக் கொண்டார். இதனை தொடர்ந்து சிஜோ தகனம் செய்யப்பட்ட அஸ்தியை மருத்துவமனையில் இருந்து ஆவணங்களுடன் வாங்கி துபாயில் உள்ள தனது இல்லத்தில் வைத்திருந்தார்.
இரண்டு வருடங்கள் சட்ட ரீதியான பல்வேறு காரணங்களால் ராஜ்குமாரின் வீட்டுக்கு கொண்டு வர முடியவில்லை. இதற்கிடையில், கோவிட் நெருக்கடியால் அவர் ஒரு வருடமாக வேலையை இழந்தார். இந்தியாவிற்கு செல்லும் பல்வேறு உறவினர்களிடம் தகனம் செய்யப்பட்ட அஸ்தியை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் பல காரணங்கள் கூறி யாரும் ஏற்று கொள்ளவில்லை. மேலும் இந்தியா கொண்டு செல்ல பல்வேறு சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே மறைந்த ராஜ் குமாரின் குழந்தைகள் தினமும் சிஜோவை தொடர்பு கொண்டு தங்கள் தந்தையின் நினைவுகள் அடங்கிய பெட்டி பத்திரமாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வார்கள். சிஜோ தனது மனைவி மற்றும் குழந்தைக்குத் தெரியாமல் அஸ்தியை தனது வீட்டில் வைத்திருந்தார். சமீபத்தில் தனது குடும்பத்தினர் வீட்டிற்குச் சென்ற பிறகு சிஜோ பல்வேறு சமூக ஆர்வலர்களின் உதவியை நாட முடிவு செய்தார்.
அனாதை ஆசிரமத்தில் படித்து வளர்ந்த சிஜோவுக்கு தாயையும் பிறகு தந்தையையும் இழந்த குழந்தைகளின் துயரத்தைப் புரிந்து கொள்வதில் சிரமம் இல்லை. தாய் தந்தையை இழந்த குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொண்ட சிஜோ வாட்சப் குழுக்கள் சமூக வலைத்தளங்களில் இது குறித்து பதிவேற்றம் செய்துள்ளார்.
சமூக வலைதளங்களிலும், செய்திகளிலும் வெளியானதை தொடர்ந்து , கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த துபாயில் மருத்துவ துறையில் பணியாற்றும் சமூக சேவகியுமான தாஹிரா என்பவர் அந்த அஸ்தியை பிள்ளைகளிடம் ஒப்படைக்கும் பணியை மேற்கொள்ள முன் வந்தார். அதற்காக வெளியுறவுத்துறை மூலம் மேற்கொள்ள வேண்டிய சட்ட ரீதியான நடவடிக்கைகள் பல நாட்கள் மேற்கொண்டு பிறகு தாஹிரா விமானத்தில் திருவனந்தபுரம் வந்து கன்னியாகுமரியில் ராஜ்குமாரின் குழந்தைகளிடம் அவர்களது தந்தையின் அஸ்தியை ஒப்படைத்தார்.
அந்த தருணத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று சொல்லலாம். அஸ்தியை கைமாற்றம் செய்யும் போது தாஹிரா வின் கண்கள் கண்ணீரில் நனைவதும் பார்க்க முடிந்தது. ஏற்கனவே ராஜ்குமாரின் குழந்தைகள் மற்றும் உறவினர்கள் வீட்டில் கல்லறை தயார் செய்து இறுதி சடங்குகளை செய்தனர். மேலும் அஸ்தியை பெற்று கொண்ட ராஜ்குமாரின் குழந்தைகள் தங்களின் ஆசை போல் அதை கல்லறையில் புதைத்து பிரார்த்தனை செய்து சடங்குகளை செய்தனர்.
Also see... ரயிலில் பெண் காவலரை கத்தியால் குத்திய நபர் கைது
மனித நேயத்துக்கு எடுத்துக்காட்டாக ஒரு தேவதை போல் பறந்து வந்து வேலைப்பளு காரணமாக நேரமின்மையால், சொந்த ஊரான கோழிக்கோடு சென்று உற்றார் உறவினர்களை கூட பார்க்காமல் துபாய் திரும்புகிறார் தாஹிரா. ஒரு நாள் கூட சந்திக்காதவருக்கு, யாரென்று கூட முகம் தெரியாதவர்களுக்கு உதவிய தாஹிரா என்ற மனிதம் நவீன உலகின் தேவதை என்று உறுதியாக கூறலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona death, Dubai, Father, Kanniyakumari