துபாயில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்த குமரி வாலிபரை கடத்தி, பணம் நகையை பறித்து சென்ற காதலி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியை சேர்ந்தவர் முகைதீன் அப்துல் காதர் ( 42 ) துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். துபாயில் வைத்து அவருக்கும், திருவனந்தபுரத்தை சேர்ந்த இன்ஷா என்ற இளம் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2 பேரும் கடந்த 6 மாதமாக லிவ் இன் உறவில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இதற்கிடையே சமீபத்தில் இன்ஷா ஊருக்கு திரும்பி வந்தார். தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்துல் காதரை தொடர்பு கொண்ட இன்ஷா, தனது வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் எனவே வீட்டுக்கு வந்து பெற்றோரை சந்தித்து பேச வேண்டும் என கூறி உள்ளார். அதற்கு அப்துல் காதரும் சம்மதம் தெரிவித்தார். அதன்படி கடந்த 22ஆம் தேதி துபாயில் இருந்து காதலியை பார்க்க அப்துல் காதர் விமானத்தில் திருவனந்தபுரத்திற்கு வந்துள்ளார்.
விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே வந்த உடன் காத்திருந்த இன்ஷா அவரது அண்ணன் ஷெபீக் உட்பட 8 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து காரில் அழைத்து சென்றது. அவசர அவசரமாக அழைத்து சென்றதால் அதிர்ச்சி அடைந்த அப்துல் காதர் ஏன் இப்படி அவசரப்படுகிறீர்கள் என்று கேட்டார். அப்போது காதலி இன்ஷா உடன் வந்த கும்பல் ஒரு கோடி ரூபாய் பணம் தர வேண்டும் என கூறி மிரட்டி உள்ளன. காதலி தலைமையில் வந்த கும்பல் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததால் அப்துல் காதர் அதிர்ச்சியில் உறைந்து போனார். உடனே பணம் தர முடியாது என அவர் கூறினார்.
இதை அடுத்து அந்த கும்பல் திருவனந்தபுரம் அருகே கிறையின்கீழ் என்ற இடத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு அப்துல் காதரை கொண்டு சென்று அவரை கட்டி போட்டு சித்ரவதை செய்து தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்த இரண்டு விலை உயர்ந்த செல்போன்கள் , 5 பவுன் நகையை பறித்துள்ளது.
இதை தவிர 17 லட்சம் ரூபாய் பணத்தையும் வங்கி கணக்கில் இருந்து அந்த கும்பல் பறித்து உள்ளது. இரண்டு நாட்கள் அடைத்து வைத்து சித்ரவதை செய்து வேண்டுமென்ற பணத்தை சுருட்டிய பிறகு அந்த கும்பல் அப்துல் காதரை திருவனந்தபுரம் விமான நிலையம் அருகே விட்டு விட்டு தப்பி சென்றது. இது தொடர்பாக அப்துல் காதர் கேரளா காவல்துறையிடம் புகார் அளித்தார். மேலும் விவரத்தை உறவினர்களுக்கும் தெரிவித்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், களமிறங்கி தேடி, இன்ஷா உட்பட அந்த கும்பலை சேர்ந்த 6 பேரை கைது செய்தனர். பெற்றோரை சந்திக்க வேண்டும் என துபாயில் இருந்து ஸ்கெட்ச் போட்டு காதலனை வரவழைத்து, ஆள் வைத்து கடத்தி ரிசார்ட்டில் அடைத்து வைத்து நகை, பணத்தை பறித்து சென்ற பலே காதலியின் திட்டம் குறித்து போலீசார் 6 பேர் கொண்ட கும்பலிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cheating, Crime News, Kanniyakumari, Lovers