Home /News /kanchipuram /

மரணத்திலும் இணை பிரியா தம்பதி.. மனைவியின் இறப்பு செய்திக்கேட்டு உயிர்விட்ட கணவன்

மரணத்திலும் இணை பிரியா தம்பதி.. மனைவியின் இறப்பு செய்திக்கேட்டு உயிர்விட்ட கணவன்

தம்பதி மரணம்

தம்பதி மரணம்

Kanchipuram | மனைவியின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் ஆறுமுகத்தின் உயிர் பிரிந்த துயர சம்பவம் உறவினர் மற்றும் கிராம மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். 91 வயதான இவரின் மனைவி சுலோச்சனா. இவர்கள் இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் அனைவரும் திருமணம் ஆகிவிட்டது. இரண்டு மகள்களும் அவர்களது கணவர் பிள்ளைகளுடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். மகன்களுடன் ஆறுமுகமும் சுலோச்சனாவும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.

    வயது முதிர்வு காரணமாக கடந்த சில மாதங்களாகவே ஆறுமுகத்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். சில நாட்களாக வீட்டில் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். அவரை சுலோச்சனா மற்றும் மகன்கள், மருமகள்கள் பேரக்குழந்தைகள் என அனைவரும் கவனித்து வந்தனர்.

    சுலோச்சனா மட்டும் உங்களுக்கு முன்பாக நான் இறைவனிடம் சென்றடைய வேண்டும் என்று ஆறுமுகத்திடம் கூறிக் கொண்டே இருப்பாராம். அதற்கு ஆறுமுகமும் ஏன் அப்படி பேசுகிறாய் என கூறி சுலோச்சனாவில் மனம் கலங்காதபடி அவரை தேற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் எழுந்து சுலோச்சனா தனக்கான வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்ததும் மகன் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    பதற்றத்துடன் ஓடி வந்து தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினார். வெகு நேரம் ஆகியும் எழும்பவில்லை. அப்போதுதான் அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. குடும்பத்தினர் கதறி அழுதனர். இதை அடுத்து உறவினர்களுக்கு தெரியப்படுத்தி சுலோச்சனாவின் உடலை அடக்கம் செய்வதற்காக இறுதி சடங்கிற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர்.

    இதற்கிடையில் சுலோச்சனா காலை 6 மணி அளவில் இறந்து விட்டார் என்ற தகவலை ஆறுமுகத்திடம் உறவினர்கள் கூறினர். அந்த தகவலை கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்த ஆறுமுகம் மயங்கினார். மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தார். உறவினர்களுக்கு மேலும் பதற்றம் அதிகமானது. சிறிது நேரத்தில் ஆறுமுகத்தின் உயிரும் பிரிந்தது. மனைவியின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் ஆறுமுகத்தின் உயிர்பிரிந்த துயர சம்பவம் உறவினர் மற்றும் கிராம மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Also see...ஆர்பி உதயகுமார் ஊழல் பற்றி பேச ஆரம்பித்தால் நேரம் பத்தாது

    இதையடுத்து ஆறுமுகத்தின் உடலையும் அடக்கம் செய்வதற்காக ஏற்பாடுகளையும் உறவினர்கள் செய்தனர். தம்பதியின் உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் முடிந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மானாம்பதி சுடுகாட்டில்  அடக்கம் செய்யப்பட்டது. மனைவி இறந்த அதிர்ச்சியில் உயிர் பிரிந்த கணவர், இறப்பிலும் இணைபிரியா ஆசிரியர் தம்பதியர் மரணம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    செய்தியாளர்: சந்திரசேகர், காஞ்சிபுரம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Couple, Dead, Kanchipuram, Teacher

    அடுத்த செய்தி