காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் நடத்தப்பட்ட அத்திவரதர் வைபவத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக ஆர்.டி.ஐ தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கியது. இதற்காக 44 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக அப்போதைய மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறியிருந்தார். ஆனால், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்டதில், மாவட்ட நிர்வாகத்திடம் அது குறித்த தரவுகள் இல்லை எனக்கூறப்பட்டுள்ளது.
மேலும் மொத்த பக்தர்களின் எண்ணிக்கையிலும் முன்னுக்குபின் முரணாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பக்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடி என்று கூறப்பட்ட நிலையில், தற்போது 88 லட்சம்பேர் மட்டுமே வைபவத்தில் பங்கேற்றுள்ளதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அத்திவரதர் வைபத்தின்போது நடந்த முறைகேடுகள் குறித்து நியூஸ்18தமிழ்நாடு தொலைக்காட்சி தொடர்ந்து செய்தி வெளியிட்டதையடுத்து, முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. அந்த சிறப்புக்குழுவின் அறிக்கை அரசிடம் சமர்பிக்கப்பட்டு, ஓராண்டு காலம் ஆன பிறகும் அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வி.ஐ.பி, வி.வி.ஐ.பி தரிசனம், சிறப்பு டிக்கெட் விற்பனை குறித்த தரவுகளிலும் முன்னுக்கு பின் முரணாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பதில் அளித்துள்ளது. 48 நாள் நடைபெற்ற அத்திவரதர் வைபவத்தில் முதல் ஐந்து நாட்கள் பக்தர்களின் எண்ணிக்கை கணக்கீடு செய்யப்படவில்லை என்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் வைபவத்தின் போது எத்தனை உண்டியல் வைக்கப்பட்டிருந்தது என்ற கேள்விக்கும் கோயில் நிர்வாகம் முரணான பதில் அளித்துள்ளது. முதல் விண்ணப்பத்திற்கு அளித்த பதிலில் 18 உண்டியல் எனவும், இப்போது 10 உண்டியல் எனவும் பதில் அளித்துள்ளது. 48 நாட்கள் நடைபெற்ற வைபவத்திலிருந்து ரூ.13.94 கோடி காணிக்கையாக வசூலாகியுள்ளது. வைபவத்திற்காக செலவிடப்பட்ட தொகை ரூ.1.34 கோடி என்பது ஆர்.டி.ஐயின் கீழ் பெறப்பட்ட ஆவணங்கள் கூறுகிறது.
48 நாட்கள் நடைபெற்ற வைபவத்திற்கு பாதுகாப்பு வழங்கிய போலீசாரின் உணவுக்கு மட்டுமே ஒரு கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளது. ஆனால், ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியதில் ஆன செலவு ரூ.2,31,454 மட்டுமே. VIP, VVIP, DONOR நுழைவு சீட்டுக்களை தனியார் நிறுவனத்தினர் விற்பனை செய்ததால், கோயில் நிர்வாகத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது, அதிகாரிகளிடம் பேசிவிட்டு உரிய விளக்கம் அளிப்பதாக கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, RTI, Scam