பள்ளி மாணவி இறப்பு மற்றும் கலவரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட டிஎஸ்பி ராஜலட்சுமியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவி மர்மமான முறையில் கடந்த 13ம் தேதி உயிரிழந்தார். மாணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மாணவியின் உடலை வாங்க மறுத்து பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். பள்ளி முன்பு அமைதியான முறையில் நடந்து வந்த போராட்டம் திடீரென கடந்த 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வன்முறையில் முடிந்தது. இதனால் மாணவி படித்த பள்ளி மற்றும் பள்ளி வாகனங்கள் அனைத்தும் தீவைத்து சூறையாடப்பட்டது.
கலவரத்தை தடுக்க முயன்ற டிஐஜி பாண்டியன் உட்பட 52 போலீசார் படுகாயமடைந்தனர். இதையடுத்து பள்ளி மாணவி இறப்பு விவகாரத்தில் சரியான முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காவல்துறை எடுத்து இருந்தால் பெரிய அளவில் கலவரம் நடைபெற்று இருக்காது என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைதொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், மாவட்ட எஸ்பி செல்வகுமார் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதில் எஸ்பி செல்வகுமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அதைதொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய கலெக்டராக ஷ்ரவன்குமார் ஜடாவத் மற்றும் மாவட்ட எஸ்பியாக சென்னை திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகலவன் நியமிக்கப்பட்டனர்.
இதற்கிடையே கலவரம் மற்றும் மாணவி மரணம் தொடர்பாக கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராஜலட்சுமி அதிரடியாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு டிஜிபி அலுவலக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சிக்கு புதிய டிஎஸ்பியாக அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kallakurichi, Sylendra Babu