கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப்பள்ளியில்
கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13-ம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சாலை மறியல் போன்ற போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
4வது நாளான இன்று அவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசாரை நோக்கி கற்களை வீசி அவர்கள் தாக்க தொடங்கினர். பதிலுக்கு போலீசாரும் கற்களை வீசி தாக்கியும் தடியடி நடத்தியும் அவர்களை கலைக்க முயன்றனர். இதற்கிடையே, மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
மேலும், பள்ளி பேருந்துகளுக்கு போராட்டகாரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி வளாகத்தில் இருந்த 10 க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட வன்முறை வாட்ஸ் அப் மூலம் போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டதாக உளவுத்துறை போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. "பள்ளி மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம்" என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு அமைத்து போராட்டக்காரர்கள் திரண்டுள்ளனர். ஒரே நாளில் 500 பேர் வாட்ஸ் அப் குழுவில் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் உளவுத்துறை விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சின்னசேலம், நயினார்பாளையம் பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி வன்முறை: கலவரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை.. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை
தற்போது, போராட்டக்காரர்கள் முழுவதுமாக விரட்டி வெளியேற்றப்பட்டு, பள்ளி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பள்ளியை சுற்றி உள்ள 3 நுழைவு வாயில் முன்பு 300க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர், காவல் கண்பாணிப்பாளர் ஆகியோர் பள்ளி முழுவதும் ஆய்வு நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கூறும்போது, கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நடந்த வன்முறையில் 17 காவல்துறையினருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் போராட்டக்காரர்கள் திரட்டப்பட்டனர்.
பள்ளி மாணவி மரணம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
உங்கள் நகரத்திலிருந்து(கள்ளக்குறிச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.