கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் +2 படித்துவந்த மாணவி , கடந்த ஜூலை மாதம் விடுதியின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தான் சரியாக படிப்பதில்லை என ஆசிரியர்கள் டார்ச்சர் செய்ததாகவும் தன்னைப்பற்றி மற்றவர்களிடம் தவறாக பேசியதால் தற்கொலை செய்துகொண்டதாக மாணவி எழுதி வைத்த கடிதத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.
ஆனால், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாகவும், பள்ளி நிர்வாகத்தால் அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் சமூக வலைதளங்களிலும், யூடியூப் சேனல்களிலும் வீடியோக்கள் வெளியானது.
மாணவி மரணம் சமூகவலைதங்களில் தீயாக பரவியதால், போராட்டம் வெடித்தது. பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் எரிக்கப்பட்டன. மாணவி மரண விவகாரத்தை சிபிசிஐடி போலீசாரும், கலவரம் குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் புரளியை பரப்பியது, கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரைக்கும் 330 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பாலியல் துன்புறுத்தல் இல்லை. கொலையும் செய்யப்படவில்லை. மாணவி மரணம் தற்கொலை என உடற்கூறு ஆய்வு அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பதாக நீதிமன்றம் வெளிப்படையாக அறிவித்துள்ளது.
ஆனாலும் சில யூடியூப் சேனல்கள் ஓய்ந்ததாகத் தெரியவில்லை. நீதிமன்றம் சொன்னது சரியா? மாணவி மரணம் புது வீடியோ இதோ.....புது ஆடியோ இதோ..என்று தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றது. இதில் உச்சகட்டமாக மாணவி ஆவி சொன்னது என்ன என ஒரு குரூப் வீடியோ வெளியிட்டுள்ளது. இப்படி மாணவியின் மரணத்தில் உண்மையை கண்டுபிடிக்கின்றேன் என்று ஒவ்வொரு யூடியூப் சேனலும் புறப்பட்டுள்ள நிலையில் மாணவியின் மரணம் தொடர்பான சர்ச்சை வேண்டும் என்றே ஏற்படுத்தப்பட்ட சர்சை என்று யூடியூபர் ஒருவர் வீடியோ வெளியிட்டு அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஆனால் இந்த யூடியூப் பக்கத்தில் சொல்லப்படுபவை அனைத்தும் பொய் என்றும் அவதூறு பரப்பும் இந்த பக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவியின் தாயார் டி.ஜி.பியிடம் புகார் கொடுத்துள்ளார்.
Also see... நீட் தேர்வு விடைத்தாள் மாறியதாக மாணவி புகார்
மருத்துவத்துறை, காவல்துறை, அனைத்து விசாரணை அமைப்புகளும் மாணவி தற்கொலை செய்துகொண்டார் என தெரிவித்துள்ள நிலையில், உண்மைக்காக போராடுகிறோம் என்ற போர்வையில் வியூவ்ஸ் வெறியில் வாய்க்கு வந்ததையெல்லாம் யூடியூப் சேனல்கள் அடித்துவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாணவி மரணம் குறித்து சமூக வலைதங்களில் பொய்யுரைகளை பரப்பக் கூடாது. நீதிமன்றமும், சிபிசிடிஐ போலீசாரும் விடுத்துள்ள எச்சரிக்கையை, யூடியூப் வியூவ்ஸ் வெறியர்கள் கண்டுகொண்டதாக தெரியவில்லை. கருத்துச் சுதந்திரம் எது? கருத்து உறுவாக்கம் எது? என்பதற்கு இடையே இந்த விவகாரம் சிக்கித்தவிக்கிறது என்கிறார்கள் சமூக பார்வையாளர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Commit suicide, Crime News, Kallakurichi, School student