Home /News /kallakurichi /

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.. அமைதி காக்க முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.. அமைதி காக்க முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் - மு.க.ஸ்டாலின்

    கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரத்தில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    கள்ளிக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த  மாணவி கடந்த ஜூலை 13-ம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    4வது நாளாக இன்று தொடர்ந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் தங்கள் கண்ணில்பட்ட வாகனங்களையெல்லாம் அடித்து நொறுக்கினர். மேலும், அங்கிருந்த 5க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது.

    போராட்டக்காரர்களை போலீசார் கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது போராட்டக்காரர்கள் போலீசார்  மீது கல்விசீ தாக்குதல் நடத்தினர். போலீசார் தடியடி நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து போலீசார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். எனினும் அவர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். கலவரக்காரர்களின் தாக்குதலில் ஒருசில போலீசார் காயம் அடைந்தனர். அங்கு தொடர்ந்து அசாதாரண நிலை நிலவுவதால் கூடுதல் போலிசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.



    இந்நிலையில், இந்த விவகாரத்தில் அமைதி காக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

    மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி வன்முறை: கலவரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை.. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

    உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: CM MK Stalin, Kallakurichi, Violence

    அடுத்த செய்தி