முகப்பு /செய்தி /கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் சொந்த ஊர் வந்தது.. கண்ணீர் மல்க அஞ்சலி

கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் சொந்த ஊர் வந்தது.. கண்ணீர் மல்க அஞ்சலி

கள்ளக்குறிச்சி மாணவி

கள்ளக்குறிச்சி மாணவி

மாணவியின் உடல் இன்று காலை 7 மணியளவில் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவசர ஊர்தியில் ஏற்றப்பட்ட மாணவியின் உடல் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கொண்டு வரப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கனியாமூரில் பள்ளியில் உயிரிழந்த 12ம் வகுப்பு மாணவியின் உடல் அவரது சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது.  உறவினர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கண்ணீர் மல்க மாணவிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதி கனியாமூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி கடந்த வாரம் பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து மரணமடைந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு பள்ளியை முற்றையிட்டு பெற்றோர், கிராமத்தினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் கடந்த ஞாயிற்றுகிழமை வன்முறையில் முடிந்தது.

மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். மாணவியின் உடலை மறுகூராய்வு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் தாங்கள் கூறும் மருத்துவர் குழுவில் இடம்பெற வேண்டும் என்ற பெற்றோரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், மாணவியின் உடலை எப்போது பெற்றுகொள்வீர்கள் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.  இதையடுத்து இன்று பெற்றுகொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு பணியில் போலீஸ்

அதன்படி, மாணவியின் உடல் இன்று காலை 7 மணியளவில் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவசர ஊர்தியில் ஏற்றப்பட்ட மாணவியின் உடல் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கொண்டு வரப்பட்டது. பின்னர், அஞ்சலிக்காக குளிர்சாதன பெட்டியில் மாணவியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. மாணவியின் உடலை பார்த்த உறவினர்கள், ஊர் மக்கள் ஆகியோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து..

இன்று மாலையே மாணவியின் உடலை அடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்கும்பொருட்டு வெளி ஊர் ஆட்களுக்கு பெரிய நெசலூரில் அனுமதி கிடையாது என போலீசார் அறிவித்துள்ளனர். மேலும் பாதுகாப்பு பணியில் ஏராளமான காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

First published:

Tags: Girl dead, Kallakurichi