கள்ளக்குறிச்சி மாணவி மரணமும் அதை தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களும் தமிழகம் தாண்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வன்முறை சம்பங்களின் பின்னணி, அதன் தொடக்க புள்ளி என்ன என்பது தொடர்பான களநிலவரத்தை வழங்குகிறோம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமுதூர் கிராமத்தில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகிறது. 24 ஆண்டுகளாக இந்த பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில், ராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப்பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி இந்த பள்ளியில் 12ம் வகுப்பு படித்துவந்துள்ளார்.
இந்த பள்ளியில் தங்கி படிக்க ஏதுவாக ஹாஸ்டல் வசதி உள்ளது. கடந்த ஜூலை 1ம் தேதி ,மாணவி ஹாஸ்டலின் சேர்ந்துள்ளார். இந்நிலையில்தான் ஜூலை 13ம் தேதி காலை 6 மணிக்கு மாணவியின் பெற்றோரை பள்ளி நிர்வாகத்தினர் தொடர்ந்து கொண்டு, மாணவி பள்ளியின் மாடியிலிருந்து கீழ் குதித்துவிட்டார் என்றும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம் என்றும் கூறியுள்ளனர். சிறிது நேரத்திற்கு பின்னர் மாணவி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
பிரேத பரிசோதனைக்காக மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே மாணவி கீழ் குதித்தது தொடர்பான வீடியோவை பெற்றோர் தரப்பில் இருந்து கேட்டதாகவும் பள்ளி நிர்வாகம் தரப்பில் தரவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், கீழ் குதித்திருந்திருந்தால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கும் என்றும் ஆனால் அப்படி எந்த காயமும் இல்லை என்றும் உறவினர் தரப்பில் கூறப்படுகிறது.
எனவே மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய பெற்றோர் மற்றும் உறவினர்கள், தங்களுக்கு நீதி வேண்டும் என்றும் வலியுறுத்தி பள்ளியின் முன்பும் மாணவியின் சொந்த ஊரான வேப்பூரில் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். ஜூலை 14ம் தேதி வேப்பூர் வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போராட்டம் தொடர்ந்தது.
இதையும் படிக்க: கள்ளக்குறிச்சி விவகாரம்: தவறு யார் மீது இருந்தாலும் உரிய நடவடிக்கை - அன்பில் மகேஷ்
இதனிடையே, மாணவியின் இறப்புக்கு நீதி வேண்டும் என கோரி மாணவியின் பெயர், புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பகிரப்பட்டன. ட்விட்டர் வலைதளத்தில் மாணவியின் பெயரில் ஹேஷ்டேக் பரப்பப்பட்டன. அதேவேளையில், வாட்ஸ் அப் வழியாக உள்ளூர் அளவில் மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு மாபெரும் போரட்டம் நடத்த வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் போராட்டம் மேலும் தீவிரமடைய தொடங்கியது. மாணவி படித்த பள்ளி தொடர்பாக ஏற்கனவே சில விரும்பதகாத கருத்துகள் அப்பகுதி மக்களிடையே நிலவுகிறது.
இந்நிலையில், ஜூலை 17ம் தேதியான நேற்று வழக்கம்போல் மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஏராளமானோர் பள்ளி இருக்கும் பகுதியில் குவியத் தொடங்கினர். காலை 9 மணிக்கெல்லாம் பல நூறு பேர் அப்பகுதியில் குவியத் தொடங்கினர். திடீரென சிலர் பள்ளியின் நுழைவு வாயிலில் இருந்த சுவற்றில் ஏறினார். அவர்களைபோலீசார் கட்டுப்படுத்த முயன்றபோது, தடுப்புகளை மீறி பள்ளிக்குள் நுழைந்தனர். போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைக்க முயன்றனர்.
இதனிடையே பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்களில் சிலர் தங்கள் கண்ணில் பட்ட வாகனங்களையெல்லாம் அடித்து நொறுக்கினர். பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்த கலவரக்காரர்கள், பள்ளிக்குள் நுழைந்து அங்கிருந்த மேசை, ஃபேன் போன்றவற்றை சேதப்படுத்தியதோடு எடுத்து சென்றனர். சான்றிதழ்களுக்கு கலவரக்காரர்கள் தீ வைத்ததாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அளவு மக்கள் கூடுவார்கள் என்பதை போலீசாரும், உளவுத்துறையும் கணிக்க தவறிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் குறைந்த அளவிலேயே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போராட்டம் தீவிரமடைந்து அதிகளவில் மக்கள் குவிந்ததால் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றது. இதையடுத்து போராட்டத்தை கட்டுப்படுத்த வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்த சில மணி நேரங்களில் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு அரசியல், சாதி, மத பின்னணி இல்லையென்றும், வாட்ஸ் அப் மூலம் அழைப்பு விடுத்தது மற்றும் உணர்ச்சி பெருக்கு ஆகியவையே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனிடையே, கலவரத்தில் ஈடுபட்டவர்களை வீடியோ மூலம் அடையாளம் கண்ட போலீசார், நேற்று மாலையில் இருந்து நள்ளிரவு தாண்டியும் வீடு புகுந்து கைது செய்து வருகின்றனர். இதுவரை 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அமைதியான சூழல் திரும்பியுள்ளது. எனினும், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Girl dead, Kallakurichi