கள்ளக்குறிச்சி அருகே ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு கடத்தப்பட்ட நான்கு வயது சிறுவனை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் அக்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கௌரி -லோகநாதன் தம்பதிகளின் பிள்ளையான நான்கு வயது சிறுவன் தருண் என்பவர் கடந்த ஏழாம் தேதி வழக்கம் போல் வீட்டில் தாய் தந்தையுடன் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் நள்ளிரவு 2 மணிக்கு கௌரி எழுந்து பார்த்த பொழுது சிறுவன் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் அச்சிறுவனின் வீட்டின் அருகில் உள்ள உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் வீடுகளிலும், அருகிலுள்ள நீர்நிலைகளான விவசாய கிணறுகள் மற்றும் கோமுகி ஆற்றின் கரைப்பகுதிகளிலும் குப்பை கூடங்களிலும் மோப்பநாய் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கச்சிராபாளையம் போலீசார் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் சிறுவனைப் பற்றிய முழுமையான துப்பு கிடைக்காததால் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி, திருமேனி ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து கச்சிராயபாளையம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலமும் கோமுகி ஆறு உள்ளிட்ட நீர்நிலைப்பகுதிகளிலும் தீவிரமாக தேடி வந்தனர். சிறுவனின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் செல்போன் எண்களை வைத்து அவற்றுள் பகிரப்படும் தகவல்களையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இதையும் படிக்க: பள்ளி விடுதியில் ப்ளஸ் டூ மாணவி மர்ம மரணம்.. நியாயம் கேட்டு தாய் கண்ணீர்.. நடந்தது என்ன?
கள்ளக்குறிச்சி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பங்காரம் என்ற பகுதியில் இருந்து தொலைபேசி மூலம் ‘ உங்கள் மகன் எங்களிடம் தான் உள்ளான். 1 கோடி ரூபாய் பணம் கொடுத்தால் சிறுவன் தருணை உயிருடன் உங்களிடம் ஒப்படைக்கின்றோம் ’ பெற்றோருக்கு மர்ம நபர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தப் பகுதியை சுற்றி வளைத்த பொழுது பொலிரோ காரில் இரண்டு பேர் அந்த சிறுவனை அமர வைத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. கடத்தல்காரர்களை மடக்கி பிடித்ததோடு சிறுவன் தருணையும் போலீசார் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
மேலும் சிறுவனை கடத்திய அவனது உறவினரான சுந்தர சோழன் மற்றும் ஈஸ்டர்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான அருள் என்பவன் குறித்து தெரியவந்தது. இதையடுத்து அருளை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். சிறுவன் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ரகுபதி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்தியாளர்- செந்தில்குமார் -கள்ளக்குறிச்சி
உங்கள் நகரத்திலிருந்து(கள்ளக்குறிச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.