Home /News /kallakurichi /

பள்ளி விடுதியில் ப்ளஸ் டூ மாணவி மர்ம மரணம்.. நியாயம் கேட்டு தாய் கண்ணீர்.. நடந்தது என்ன?

பள்ளி விடுதியில் ப்ளஸ் டூ மாணவி மர்ம மரணம்.. நியாயம் கேட்டு தாய் கண்ணீர்.. நடந்தது என்ன?

பள்ளி மாணவி மர்ம மரணம் - உறவினர்கள் மறியல்

பள்ளி மாணவி மர்ம மரணம் - உறவினர்கள் மறியல்

Kallakurichi +2 Girl Death : மாணவி மர்மமாக உயிரிழந்த நிலையில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் பள்ளி நிர்வாகமே உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடற்கூறு ஆய்வுக்காக பிணவறையில் வைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
    கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப்பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13-ம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    பள்ளி தாளாளர் மாணவியின் பெற்றோரை செல்போனில் தொடர்புகொண்டு மாடியில் இருந்து தங்களின் மகள் கீழே விழுந்துவிட்டார் எனக் கூறியுள்ளார்.  இதனையடுத்து அரைமணி நேரத்தில் மீண்டும் போன் செய்து மாணவி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மாணவி மர்மமாக உயிரிழந்த நிலையில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் பள்ளி நிர்வாகமே உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடற்கூறு ஆய்வுக்காக பிணவறையில் வைத்துள்ளனர்.

    இதனை அறிந்த மாணவியின் தாய்  கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். தனது மகளின் உடலைப்பார்த்து கதறி கண்ணீர்விட்டுள்ளார். மகளின் உடலில் காயங்கள் இருப்பதாக குடும்பத்தினர் மற்றும் ஊர் பெரியவர்களிடம் முறையிட்டுள்ளார். இதனையடுத்து கிராமத்தினர் 200க்கும் மேற்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

    பள்ளி நிர்வாகம் மீது புகார்:

    இதனையடுத்து மாணவியின் தாயார் சின்ன சேலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த மனுவில், “ எனது மகள் அவர் படித்த பள்ளியின் விடுதி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று பள்ளி தரப்பில் கூறப்பட்டுள்ளது.ஆனால் எனது மகள் சாவில் மர்மம் உள்ளது” என தெரிவிக்கப்பட்டது.  சின்ன சேலம் காவல் நிலைய போலீசார் சந்தேகம் மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் இதில் தொடர்புடைய பள்ளி நிர்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடமும் தனிப்பட்ட முறையில் போலீசாரின் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் மாணவியின் உடற்கூறாய்வு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற இருந்தது. இந்த நிலையில் அவரது உறவினர்கள் இரண்டாவது நாளாக  சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து மாணவியின் சாவிற்கு நீதி கேட்டு பள்ளி நிர்வாகிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், சம்பந்தப்பட்ட அந்த தனியார் பள்ளியை இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலேயே போராட்டங்களை நடத்தினர்.

    உறவினர்கள் சாலை மறியல்:

    பிரேத பரிசோதனை நடைபெறும் அரங்கிற்கு முன்னதாக ஏராளமானோர் கூடி நின்று மாணவியின் இறப்பிற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் துறையினர் உள்ளிட்ட விசாரணை அதிகாரிகள் அனைவரும் பள்ளி நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினர். மாணவியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்டவர்கள் திடீரென கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு உள்ள சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு திரண்டு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் இருப்பினும் அவர்கள் கலைந்து போகாததால் ஒரு கட்டத்தில் கைது செய்ய ஏற்பாடு செய்தனர். அதன் பிறகு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    Also Read:  இன்ஸ்டா காதல்.. 15வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மோசடி இளைஞர் உட்பட 4பேர் கைது

    இருப்பினும் மாணவியின் உறவினர்கள் தங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும் வரை போராடிக் கொண்டே இருப்போம் என்றும் கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதற்கிடையில் பல்வேறு  அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் மாணவியின் உடலை காண்பதற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி அஞ்சலி செலுத்தி வந்ததால் மருத்துவமணை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனிடையே மாணவியின் தாய்  கூறுகையில், “மாடியிலிருந்து குதித்து தனது மகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் பள்ளி நிர்வாகத்தினர் ஏன் காவல்துறைக்கு தெரியாமல் மருத்துவமனைக்கு உடற் கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தங்களுக்கும் முன்னுக்குப் பின் முரணாக ஏன் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் தனது மகள் எழுதி வைத்துவிட்டு இருந்ததாக படித்துக் காட்டிய கடித நகல் எங்கிருந்து எடுக்கப்பட்டது. பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சியை ஏன் தெளிவாக காண்பிக்கவில்லை போன்ற பல்வேறு கேள்விகளுக்கு எவ்வித பதிலும் இல்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

    செய்தியாளர்: செந்தில்குமார் (கள்ளக்குறிச்சி)

     

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime News, Kallakurichi, Protest, School students, School students suicide, Tamil News

    அடுத்த செய்தி