முகப்பு /செய்தி /கள்ளக்குறிச்சி / பகலில் நோட்டமிடும் இளம்பெண்.. இரவில் கொள்ளையடிக்கும் கூட்டம் - கள்ளக்குறிச்சியில் சிக்கிய ஆந்திர கும்பல் திடுக்கிடும் தகவல்

பகலில் நோட்டமிடும் இளம்பெண்.. இரவில் கொள்ளையடிக்கும் கூட்டம் - கள்ளக்குறிச்சியில் சிக்கிய ஆந்திர கும்பல் திடுக்கிடும் தகவல்

கள்ளக்குறிச்சியில் சிக்கிய ஆந்திர கும்பல்

கள்ளக்குறிச்சியில் சிக்கிய ஆந்திர கும்பல்

Kallakurichi Theft | கள்ளக்குறிச்சியில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த ஆந்திரா கொள்ளை கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Kallakkurichi (Kallakurichi), India

ஆந்திராவை சேர்ந்த கொள்ளை கும்பல் தமிழகத்தில் வீடு வாடகைக்கு எடுத்து கணவன் மனைவி போல் வாழ்ந்து அந்தப்பகுதியில் குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் பர்னபாஸ் சென்னையில் இருக்கும் மகன் வீட்டிற்கு சென்றுவிட்டு கடந்த 27-ம் தேதி வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்து 17 சவரன் தங்கநகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

பர்னபாஸ் கொடுத்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சியில் கடந்த 3 மாதங்களில் பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கொள்ளை சம்பவம் அரங்கேறி வந்ததால் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

காட்டிக்கொடுத்த செல்போன் எண்கள்:

தனிப்படை குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் குறிப்பிட்ட அந்த இரவு இரண்டு செல்போன் எண்கள் கொள்ளை போன வீட்டின் அருகாமையில் இருந்ததை ஆய்வு செய்தனர். அதில் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக கொள்ளை போன 7 இடங்களிலும் கொள்ளை போன இரவு, இதே தொலைபேசி எண்கள் வந்து சென்றதையும் குற்றப்பிரிவு போலீசார் உதவியுடன் தனிப்படை போலீசார் கண்டு பிடித்தனர். மேலும் கொள்ளை போன இடங்களில் அதன் அருகாமையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது பல்சர் இருசக்கர வாகனத்தில்  ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் வந்தது தெரிய வந்தது.

Also Read: சொத்துக்காக அண்ணனை கடத்தி தலைகீழாக தொங்கவிட்டு சித்ரவதை செய்த தங்கை.. திருப்பூரில் பகீர் சம்பவம்

இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளைபோன இரவு கொள்ளையர்கள் செல்போனுக்கு வந்த எண்ணை குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்து ஆய்வு செய்தனர். அதில் பகண்டை கூட்டுச்சாலை பகுதியில் சிந்து எனும் பெண்மணி வசித்து வருவதும் அவரது செல்போன் எண்ணில் இருந்து இந்த இரண்டு எண்களுக்கு அடிக்கடி அழைப்புகள் வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று சந்தேகத்தின் பெயரில் சிந்துவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த அந்த எண்கள் பாலாஜி மற்றும் கார்த்திக் என்ற இருவருடையது என்பது தெரியவந்தது. பின்னர் மூன்று பேரிடமும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஆந்திரா கும்பல்

பகல் நேரத்தில் சிந்து பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு அதனை பாலாஜி மற்றும் கார்த்திக்கிடம் கூறுவார். இரவு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பாலாஜி மற்றும் கார்த்திக் இருவரும் சிந்து கூறிய அந்த வீட்டிற்குச் சென்று கொள்ளையடித்து வந்துள்ளனர்.

 ஆந்திரா கும்பல் அட்டகாசம்: 

இந்த நிலையில் மூன்று பேரையும் காவல் நிலையத்தில் வைத்து மேற்கொண்ட விசாரணையில் இவர்கள் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது தெரிய வந்தது. கடந்த பத்தாண்டுகளாக சென்னையில் வசித்து வருகின்றனர். சிந்துவின் கணவர் யுவராஜ் என்பவன் பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளான்.

சிறையில் மலர்ந்த நட்பு:

சிந்துவின் கணவர் யுவராஜன் சிறையில் இருக்கும் போது கார்த்தி மற்றும் பாலாஜி இருவரும் நண்பர்களாக அறிமுகமாகியுள்ளனர். சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் சிந்துவுடன் இவர்கள் இருவரும் நட்பாக பழகத்தொடங்கியுள்ளனர். யுவராஜ் மேலும் ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டதையடுத்து இவர்கள் மீண்டும் கொள்ளை அடிக்க சதித்திட்டம் திட்டியுள்ளனர். அந்த கும்பல் மீது சென்னையில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால் தமிழகத்தின் வேறு மாவட்டங்களுக்கு சென்று தங்கி கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர்.

Also Read:  கடத்தப்பட்ட மனைவிக்கு வேறு ஒருவருடன் திருமணம்..? காதல் கணவர் கதறல்.. தென்காசியில் பரபரப்பு

இதனையடுத்து கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு கள்ளக்குறிச்சி வந்துள்ளனர். பாலாஜியும் சிந்துவும் கணவன் மனைவி போலவும், கார்த்தி என்பவன் வேறு ஒரு 45 வயது பெண்மணிவுடன் தாய் மகன் போலவும் நடித்து வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். தற்போது யுவராஜ் மற்றொரு வழக்கில் சிறையில் உள்ளான். சிந்து ,கார்த்திக் மற்றும் பாலாஜி ஆகிய மூவரும் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், ரிஷிவந்தியம் என பல்வேறு பகுதிகளில் ஆள் இல்லாத வீடுகள் இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகள் என வீடுகளை நோட்டமிட்டு, நகைகள் , பணம், விலையுயர்ந்த இருசக்கர வாகனம், டி.வி என கையில் கிடைத்தது எல்லாம் கொள்ளையடித்துச் சென்றதும் தெரியவந்தது.

கொள்ளையடித்த பணத்தில் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டு மனை வாங்கியுள்ளதாகவும் தெரியவந்தது. இதனையடுத்து மூவரிடமிருந்து விலை உயர்ந்த ஐ20 கார், இரண்டு இருசக்கர வாகனங்கள் உட்பட 41 சவரன் தங்க நகைகள் உருக்கிய நிலையில் 6 பவுன் தங்கம் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த கொள்ளை சம்பவங்களுக்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.கொள்ளையடிக்கப்பட்ட 41 சவரன் தங்க நகைகள் மதிப்பு 15 லட்சம் எனவும் மீட்கப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் கார் ஆகியவற்றை சேர்த்து மொத்தமாக 21 லட்சம் மதிப்பு என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

செய்தியாளர்: எஸ் .செந்தில்குமார்

First published:

Tags: Crime News, Kallakurichi, Local News, Tamil News, Theft