கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன
சேலம் அருகேயுள்ள கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயின்றுவந்த 12ஆம் வகுப்பு மாணவி கடந்த 13ஆம் தேதி உயிரிழந்தார். பள்ளியின் மாடியில் இருந்து குதித்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாக தரப்பில் கூறப்படுகிறது. எனினும், மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறி வருகின்றனர். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், பள்ளியில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் 300-க்கும் மேற்பட்டோர் வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு, கடலூர் மற்றும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மாதவசேரி கிராமத்தைச் சேர்ந்த அய்யாதுரை என்ற கூலி தொழிலாளி கடந்த 17ம் தேதி முதல் தனது மகனை காணவில்லை என தேடி வந்த நிலையில் அந்த 16 வயது சிறுவன் கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது தெரிய வந்தது.
இதனை அடுத்து சிறுவனின் பெற்றோர்கள் காவல் நிலையம் சென்று தனது மகன் 16 வயது சிறுவன் எனவும், சின்னசேலத்திற்கு மருந்து வாங்க சென்று விட்டு வரும் வழியில் அவனை போலீசார் கைது செய்துள்ளீர்கள் எனவும், எனவே அவனை விடுதலை செய்யவேண்டும் என மன்றாடி கேட்டபோது காவல்துறையினர் அவர்களை விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது.

சிறுவனின் பெற்றோர்
இதனைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில், தங்களது மகன் இளம் சிறுவன் எனவும் காவல்துறையினர் அவனின் வயதை மறைத்து வன்முறை குற்றவாளிகளுடன் மத்திய சிறையில் அடைத்து விட்டதாகவும், சிறுவனின் மாற்றுச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் சமர்ப்பித்து சரிபார்த்து உரிய நியாயம் கிடைக்க வேண்டுமெனவும் வழக்கறிஞர் மூலமாக புகார் கொடுத்தனர்.
Must Read : நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கத்திக்குத்து.. படுகொலையில் முடிந்த சோகம்.. திண்டுக்கல்லில் பரபரப்பு
புகாரை அடுத்து கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முகமது அலி உத்தரவின் பேரில், காவல்துறையினர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறுவனை அழைத்து வந்து நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து ஆவணங்களை சரிபார்த்த நீதிபதி பிறப்பித்த உத்தரவின் பேரில், அந்த 16 வயது சிறுவன் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
செய்தியாளர் - எஸ்.செந்தில்குமார்.
உங்கள் நகரத்திலிருந்து(கள்ளக்குறிச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.