இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் அனைவருக்கும் யதார்த்த உலகத்தின் தாக்கத்தை விட, சமூக வலைத்தளத்தின் விர்ச்சுவல் உலகத்தின் தாக்கம்தான் அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக, இளம் தலைமுறையினர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் போன்ற சமூக ஊடகங்களில் நீண்ட நேரம் செலவிடும் பழக்கம் அவர்களை அறியாமலேயே குடி புகுந்துவிடுகிறது. நாளடைவில் அது அடிக்ஷனாக மாறி, பல பின்விளைவுகளை உருவாக்குவதாக பல்வேறு ஆய்வு தகவல்கள் கூறிய வண்ணம் உள்ளன.
குழந்தைகள், இளம் பருவத்தினர் மத்தியில் சமூக வலைத்தளங்கள் உருவாக்கம் தாக்கம் குறித்து 'தி கார்டியன்' ஊடகம் புதிய ஆய்வு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதிர்ச்சி தரும் வகையில் பல எச்சரிக்கைகள் இதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு 12 முதல் 21 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறையினரிடம் நடத்தப்பட்டது. அதன்படி, ஆய்வில் பங்கேற்ற பாதிக்கும் மேற்பட்டோர் சமூக வலைத்தளங்களில் உருவ கேலிக்கு ஆளானதாக தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தங்கள் உடல் மீதே வெறுப்பு உருவாகி பலரும் தனிமையை நோக்கி செல்வதாக தெரிவித்துள்ளனர். 12 வயது சிறார்களில் 4இல் 3 பேர் தங்கள் தோற்றத்தை வெறுப்பதாக கூறியுள்ளனர். அதேபோல், 18 முதல் 21 வயதை கொண்ட 10இல் 8 பேர் தங்கள் உருவம் அவமானம் தருவதாக உணர்கின்றனர். இவை அனைத்தும் சமூக வலைதளத்தால் இளம் தலைமுறையினரிடம் ஏற்பட்ட தாக்கம் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
இத்தகைய தாக்கத்தால் தங்களுக்கு தீவிர மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் பங்கேற்ற 40 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். ஆய்வில் பங்கேற்றவர்கள் 97 சதவீத்ததினருக்கு சமூக வலைத்தளங்கள் 12 வயதிலேயே அறிமுகம் ஆகிவிட்டதாக கூறியுள்ளனர். இதில் 70 சதவீதம் பேருக்கு சமூக வலைதளங்கள் அழுத்தம், பயம், டிப்ரஷன் போன்ற தாக்கங்களை தந்தாலும், அவர்கள் தினந்தோறும் சராசரியாக மூன்றரை மணிநேரம் சமூக வலைதளத்தில் செலவிடுவதாக கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: 2023 ஆண்டிற்கான உங்களுடைய ரெசல்யூஷன் என்ன..? இன்னும் பிளான் பண்ணலையா..? இதோ சில யோசனைகள்..!
இதுபோன்ற பிரச்சனைகளை உணர்ந்தாலும் 95 சதவீதம் பேர் ஆன்லைன் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை என்று ஒப்புக்கொண்டுள்ளனர். CCDH( Center for Countering Digital Hate ) என்ற அமைப்பின் தலைவர் இம்ரான் அகமது இது குறித்து கூறுகையில், "சமூக வலைத்தளங்கள் இளம் தலைமுறையினர் மத்தியில் தங்கள் உடல் உருவம் சார்ந்த தாழ்வான பிம்பங்களை கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றுவதாக கவலை தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் தாக்கத்தால் இளையோரின் மன நலன் பாதிப்பதோடு, உணவு சாப்பிடும் பழக்கத்திலும் மோசமான தாக்கங்களை உருவாக்குகிறது" என எச்சரித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Body Shaming, Children, Facebook, Instagram, Social media, Study finds, WhatsApp