2022 செப்டம்பர் மாதத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை உலகம் கண்டது. மாதத் தொடக்கத்தில் பிரிட்டன் நாட்டில் புதிய பிரதமராக லிஸ் டிராஸ் பொறுப்பேற்றார். அடுத்த சில நாள்களிலேயே ராணி எலிசபெத் காலமானார். அவரின் பிரம்மாண்ட இறுதி ஊர்வலத்தில் 90க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இவ்வாறு 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ..
செப்டம்பர் 5 , 2022 -பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிராஸ் தேர்வு செய்யப்பட்டார். உட்கட்சி நெருக்கடியால் போரிஸ் ஜான்சன் பதவி விலகிய நிலையில், கன்சர்வேடிவ் கட்சியினர் லிஸ் டிராஸை புதிய பிரதமராக தேர்வு செய்தனர்.
செப்டம்பர் 8, 2022 - பிரிட்டனை 70 ஆண்டுகாலம் ஆட்சி செய்த ராணி எலிசபெத் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 96. ராணியின் மறைவைத் தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் புதிய மன்னராக பொறுப்பேற்றார்.
செப்டம்பர் 10, 2022 - ஐநா சபையின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரெஸ் கடுமையான வெள்ள பாதிப்புக்குள்ளான பாகிஸ்தான் நாட்டை நேரில் பார்வையிட்டார். 30 பில்லியன் டாலர் இழப்பை கண்ட அந்நாட்டிற்கு உதவ முன்வருமாறு சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை வைத்தார்.
செப்டம்பர் 11, 2022 - ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசு தோல்வி அடைந்தது.வலதுசாரி கூட்டணி தலைவர் உல்ஃப் கிறிஸ்டெர்சன் புதிய பிரதமரானார்.
செப்டம்பர் 11, 2022- ரஷ்யா உக்ரைன் போரின் முக்கிய திருப்பமாக உக்ரைன் படைகள் தீவிர பதில் தாக்குதல் நடத்த தொடங்கின. ரஷ்யாவிடம் இழந்த 3,000 சதுர கிமீ பிராந்தியத்தை எதிர்தாக்குதல் மூலம் உக்ரைன் மீட்டது.
இதையும் படிங்க: நினைவுகள் 2022 - இலங்கையில் மீண்டும் ரணில்.. ஆஸ்திரேலியாவிலும் ஆட்சி மாற்றம்.. மே மாத முக்கிய சர்வதேச நிகழ்வுகளின் தொகுப்பு இதோ
செப்டம்பர் 15, 2022 - உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற சர்வதேச உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜிங்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமர் புதின் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சர்வதேச அரசியல் சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
செப்டம்பர் 16, 2022 - ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாத குற்றத்திற்காக 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கைது செய்யப்பட்டு காவல்துறை தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஹிஜாப் சட்டத்திற்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது.
செப்டம்பர் 19, 2022 - மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல் வின்ட்சர் அரண்மனையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பல்வேறு உலக தலைவர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றார்.
செப்டம்பர் 25, 2022- தென்அமெரிக்க நாடான க்யூபாவில் தன்பாலின திருமணத்திற்கு அந்நாட்டு அரசு சட்ட அங்கீகாரம் வழங்கியது.
செப்டம்பர் 26, 2022 - தேசதுரோக குற்றத்திற்கு ஆளான அமெரிக்காவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி எட்வர்ட் ஸ்னோடனுக்கு ரஷ்ய குடியுரிமை வழங்கி அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டார்.
செப்டம்பர் 28, 2022 - சவுதி அரேபியாவின் பட்டத்து இளரவசர் முகமது பின் சல்மான் அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Edward Snowden, Queen Elizabeth, Russia - Ukraine, Vladimir Putin, YearEnder 2022